Wednesday, 18 January 2012

இன்றைய தேவை - அறிவியல் தமிழா ..? அறிவியல் தமிழனா ..?


தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...?  கொஞ்ச நாட்களாக என் மனதிற்குள் ஓடி கொண்டிருக்கும் நினைவுகளும்  , எண்ணங்களும் தான் இந்த பதிவு எழுதப்படுவதின் காரணம் .


அறிவியல் தமிழ்  என்ற வார்த்தை அதிகமாக நான் பள்ளி படிக்கும் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை நான் அறிவேன் .  அது என்ன அறிவியல் தமிழ் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ..?  ருசியா நாட்டில் அனைத்து அறிவியல் பாடங்களும் ருசிய மொழியில் தான் இருக்குமாம் .  அதனால் அந்த நாட்டு குழந்தைகள் அறிவியலை எளிதாக கற்று கொள்ளுமாம் .   ஜெர்மன் தேசத்தில் அனைத்து அறிவியல் பாடங்களும் ஜெர்மன் மொழியில் தான் இருக்குமாம் . அதனால் அந்த நாட்டு குழந்தைகள் எளிதாக அறிவியலை கற்று கொள்ளுமாம் . 


ஆனால் நமது இந்திய திரு நாட்டில் பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் , அறிவியல் பாடங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்  ( பொறியியல் மற்றும் மருத்துவம் ) தான் கற்ப்பிக்கப்பட்டு வந்தன /  வருகின்றன .  இந்த சூழலில் தமிழ் இளையோர்கள் அறிவியலை தமிழில் கற்கவேண்டும் எனவும் அதற்காக அறிவியல் பாடங்கள் தமிழில் இயற்றப்படவேண்டும் என்பது தான் அறிவியல் தமிழ் என்ற  வார்த்தை தோன்றுவதின் ஆரம்பம் .  இதன் முக்கிய காரணம் அறிவியலை தமிழ் இளையோர்கள் நன்றாக கற்று தேறவேண்டும் என்பது தான் . 


ஆனால் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது அறிவியல் தமிழ் தமிழகத்தில் வென்றுள்ளதா என்று தான் நினைக்க தோன்றுகிறது.  அணுமின் நிலையங்கள் என்றவுடன் மக்களும் சரி ,  மாணவர்களும் சரி , ஏன் சில ஆசிரியர்களும் சரி நினைக்கிற காரியம் என்னவெனில்   " அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது " என்று. ஏன் எனில் அணுமின்சாரத்தை குறித்தும்  , அணுமின் நிலையங்களை குறித்தும் கற்று அறிந்து பேசுகிற மக்கள் மிகு குறுகிய அளவில் தான் உள்ளனர் .  மீதி மக்கள் அனைவரும் யாராவது சொல்லும் வதந்திகளை மாத்திரம் பேசுகிறார்கள் .  எங்கே போனது அறிவியல் தமிழ் ?


சரி அறிவியல் தமிழன் தேவையா ? என்ற கருத்துக்கு வருவோம் .  இன்று உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று போராடும் சில செந்தமிழர்களையும்   ,  தன்மான தலைவர்களையும் நினைக்கையில் எனக்கு கோபமும் , வெறுப்பும் தான் வருகிறது .  இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் ?  

உணர்ச்சி பொருந்திய உரைகளை அள்ளி வீசும் இவர்கள் செய்த மாபெரும் சாதனை என்ன தெரியுமா ...?  அறிவியலை தமிழன் கற்கவிடாமல் செய்தது தான் .. வேறென்ன சொல்ல முடியும் ...?  

பள்ளியில் கற்கும் சிறுவர்களை அழைத்து அவர்களை பள்ளிக்கு போகவிடாமல் செய்து அவர்களை கொண்டு போர்ராட்டங்களையும் , உண்ணாவிரதங்களையும் நடத்தும் இவர்கள் வருங்கால சமுதாயத்தை தவறான பாதையில் நடத்தி படுகுழியில் நடத்துகிறார்கள் என்ற ஏன் குற்றசாட்டை எப்படி இவர்கள் மறுக்க முடியும் ..?   

அறிவியலுக்கு விரோதமான எதிர்ப்பை சிறுவயதில் பாலகர்க்கு புகட்டும் இவர்கள் வளமிக்க தமிழ் சமுதாயத்தை எப்படி உருவாக்குவார்கள் ...?  நான் நினைக்கிறேன் ... ஒரு வேளை தமிழ் சமுதாயம் அறிவியலை கற்றுவிட்டால் இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு யார் போவார்கள் என்று நினைக்கிறாகளோ ...?

என்னுடைய எழுத்துகள் பரிபூரணமாக மாயையை உடைத்து எறிவதற்காக தான் எழுதப்படுகின்றன .  அறிவியல் தமிழ் பெருகவேண்டும்  , அறிவியல் தமிழை கற்று அறிவியல் தமிழர்கள் பெருக வேண்டும் , அறிவியலில் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .

Sunday, 15 January 2012

அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ...?


அணுமின் நிலையங்கள் குறித்து பலரும் பல விதமாக பல தருணங்களில் பேசி வருகிறார்கள் .  அணுமின் நிலைய்னங்கள் சுற்று சூழலுக்கு எதிரானவை என்ற கருத்துகள் பரவலாக எல்லாராலும் பேசப்படுகிறது . உண்மையில் அணுமின் நிலையங்களினால் சுற்று சூழலுக்கு ஆபத்து உண்டா என்ற ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டது இந்த கட்டுரை ... 


புவி வெப்பமயமாதல்  :   உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து புவி வெப்பமயமாதல் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம் .  அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரையை நான் கொடுக்க விரும்புகிறேன் . நமது அநேக தொழிற்சாலைகள்  , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . 


அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2  மற்றும் SO2  ஆகியவை உள்ளது .  இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை.  அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் .  தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன .  அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் .  கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும் .




அணுமின் நிலையங்கள் இந்த மாதிரி வாயுக்களை வெளியிடாது என்பது ஒன்றே போதாதா .... நமது எதிர்காலத்தை அணுமின் நிலையங்கள் பாதுகாக்கிறது என்பதற்கு .  உண்மையில் மீனவ நண்பர்களின்  வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் , பூமியின் பசுமை குறைந்து பூமி வறண்டு கொடும் பஞ்சம் பூமியில் ஏற்ப்படும் .  அணுமின் நிலையங்கள் SO2 மற்றும் CO2 வாயுக்களை வெளியிடாததால் இந்த பாதிப்புகளை குறைக்கும் ,
ஒரு வேளை என்னுடைய கட்டுரை கண்ணை மூடி கொண்டு நான் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறேன் போன்ற எண்ணத்தை உங்களுக்கு உருவாக்கலாம் .  ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  வருங்கால பூமியை பாதுகாக்கும் வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் இந்த மாதிரி அணுமின் நிலையங்களை சுற்று சூழலின் நண்பன் என்று நான் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது ....?



Monday, 9 January 2012

புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

புகுஷிமாவில் நடந்த விபத்துக்கு பின்பு உலகம் முழுவதும் அணுமின் நிலையங்கள் மூடப்படுவதாகவும் அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் எனவும் போராட்ட குழுவினர் தங்கள் கூட்டங்களில் பேசி , மக்களை குழப்பி வருகின்றனர் .  இந்த நிலையில் ,  உண்மையில் உலக அளவில் அணுசக்தி துறையின் பாதிப்பு /  மேம்பாடு  ( புகுஷிமாவுக்கு பிறகு )  என்ன என்பதை ஆராய முற்ப்பட்டதன் விளைவு தான் இந்த கட்டுரை ...


ஜப்பான் : முதலாவது ஜப்பானில் இருந்து நாம் ஆரம்பிப்போம் .  புகுஷிமாவுக்கு பிறகு ஜப்பான் அணுமின் திட்டங்களை கைவிடாமல் 17 - 08  - 2011  அன்று டோமாரி அணுமின் நிலையத்தின் 3 வது யூனிட்டை இயக்கியது .

 சீனா :  25 - 10 - 2011  அன்று சீனா Qinshan Phase II யூனிட்டில் அணு எரிபொருளை நிரப்பியது .  27 - 07 - 2011  அன்று தனது முதல் ஈனுலையில் ( Fast Breeder reactor ) இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை மின் இணைப்பில் இணைத்தது. 


கொரியா  : 02 - 08 - 2011  அன்று கொரியா தனது Shin Kori Nuclear Power Plant ன்  நான்காவது யூனிட்டில் அணு கொள்கலனை நிறுவியது . இந்த அணுமின்நிலையம் அதி நவீன APR - 1400 வகையை சேர்ந்தது .

பங்களாதேஷ்  : 02 - 11 - 2011  அன்று பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்தை கட்டுவதற்காக ருசிய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது .


துருக்கி  : 17  - 08  - 2011  அன்று தனது நாட்டில் அணுமின் நிலையம் கட்டுவதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சு நடத்தி கொண்டு இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது .


 ஜோர்டான் : 17 - 08 - 2011  அன்று தனது நாட்டின் அணுமின் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை சில மாதங்களில் அறிவிக்க போவதாக ஜோர்டான் அறிவித்தது .

 வியட்நாம்  : 06 - 10 - 2011  அன்று தனது நாட்டின் முதல் அணுமின் திட்டத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பானுடன் கையெழுத்து இட்டுள்ளது .



அமெரிக்கா : ஏறக்குறைய 20 புதிய அணுமின் திட்டங்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது . தவிர இரண்டு அதி நவீன ABWR வகை அணுமின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது . இவற்றில் பல 2020 ல் இயங்கும் என தெரிகிறது .   நான்கு AP 1000 வகை அணுமின் திட்டங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட 1 . 6 பில்லியன் டாலர் செலவில் Vogtle மற்றும் Georgia பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது .

 கனடா  : ஏறகனவே 15 சதவீத அணுமின் சக்தியை பெற்று வரும் கனடா வரும் 10  ஆண்டுகளில் ஒன்பது புதிய அணுமின் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது .

 பிரான்ஸ்  : Flamnaville என்ற இடத்தில கட்டப்பட்டு வரும் 1600 MWe அணுமின் நிலையம் இந்த வருடத்தில் செயல் பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து :  2019 வருடத்திற்குள் , நான்கு 1600 Mwe அணுமின் நிலைய்னகளை இயக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது .


 ருமேனியா  : 2017 ம் வருடத்திற்குள் 2  அணுமின் நிலையங்கள் கனடா தொழில் நுட்பத்தில் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ஸ்லோவாகியா :  2012 ம் வருடத்தில் , தற்பொழுது கட்டப்பட்டு கொண்டிருக்கும் 470 MWe அணுமின் நிலையம் ( Mochovce ) செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பல்கேரியா :  ருசிய தொழில் நுட்பத்தில் இரண்டு 1000 MWe அணுமின் நிலயங்கள் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டுளது.

 ரஷ்யா  :  10  அணுமின் நிலையங்கள் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றன .  ஒரு அதிநவீன ஈனுலையும் அதில் அடக்கம் .   புதிய 14  அணுமின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது . 2016 ம் வருடத்திற்குள் 9 . 8 GWe மின்சாரம் புதிய அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தைவான்  :  இரண்டு அதிநவீன ABWR அணுமின் நிலையங்களை Taipower நிறுவனம் கட்டி வருகிறது .

பாகிஸ்தான் :  சீனாவின் உதவியுடன் 300 MWe அணுமின் நிலையத்தை Chashma பகுதியில் கட்டி வருகிறது .

UAE :  2020 ம் வருடத்திற்குள் நான்கு 1400 Mwe அணுமின் நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை தென் கொரியாவுக்கு அளித்துள்ளது .

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சில பிரசாரங்களை பொய் என்று தோலுரித்து காட்டுவதை நாம் மறுக்க முடியாது . தற்காலத்தில் மின் திட்டங்களுக்கு பயன்படும் எரிபொருட்கள் வேகமாக குறைந்து வருவதாலும்  , தினமும் மின் தேவைகள் அதிகரித்து வருவதாலும்  , உலகம் அனைத்தும் அணுமின் திட்டங்களுக்கு நேராக சென்று கொண்டிருக்கும் போது ,  அதி நவீன , மிகவும் பாதுகாப்பான  ,  மூன்றாம்   தலைமுறை  கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது ...?

Friday, 6 January 2012

ஹசாரே தாத்தாவின் சாயம் வெளுக்கிறது



ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே அறிவித்த போது அவர் யார் என்பது தெரியாத நிலையிலும் அவருக்கு பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன் என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் தொடர்ந்து நிலவி வரும் சில சூழ்நிலைகளை பார்க்கும் போது அன்னா ஹசாரேவின் குழுவின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து போய் விட்டது என்பது தான் உண்மை.   அடுக்கடுக்காக அவரது குழுவின் நபர்கள் மேல் குற்றசாட்டுகள் வரும் நிலையில் , குழுவின் மூத்த உறுப்பினரும்  , மூத்த வக்கீலுமான திரு . சாந்தி பூசன் அவர்கள் அரசை ஏமாற்றிய செய்தி வெளியானது தான் தாமதம் .,  இந்த லேட்டஸ்ட் இந்தியன் தாத்தாவின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும் .
 
 
 
 2010 ம் வருடம் அலஹாபாத்  நகரில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ள ஒரு பங்களாவை வாங்கிய விவகாரத்தில் தான் இந்தியன் தாத்தாவின் மூத்த சீடர் சிக்கி உள்ளார் .    " 84  ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் மற்றும் அதின் மேல் உள்ள பங்களாவின் சந்தை மதிப்பு சுமார் 20  கோடி எனவும் அதற்கு 1 . 35  கோடி முத்திரை தாள் தீர்வை செலுத்த வேண்டும் எனவும் ..,  ஆனால் திரு பூசன் அவர்கள் இந்த பங்களாவின் மதிப்பு வெறும் 5 லட்சம் என்று பத்திரத்தில் குறிப்பிட்டு வெறும் 46 ஆயிரம் மாத்திரம் முத்திரை தீர்வை செலுத்தி உள்ளதால் திரு . சாந்தி பூசனுக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் முத்திரை தாள் தீர்வையுடன் சேர்த்து ரூபாய் 1 . 62  கோடியை அரசுக்கு செலுத்த வேண்டும்"  என முத்திரை தாள் உதவி ஆணையர் திரு . கே.பி. பாண்டே தெரிவித்துள்ளார்  ( நன்றி . தினகரன் ,  பக்கம் 8  , நாள் : ஜனவரி 7 , 2012 )
 
 
 இந்த கதையை படிக்க கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ....?  எனக்கும் தான் .... எங்கள் ஊரில் பொதுவாக இப்படி பட்ட காரியங்களை சொல்லும் போது  " கருவாட்டிற்கு பூனை காவலா ...?"  என்று கேட்பது தான் நினைவிற்கு வருகிறது .
 
 
 நவீன இந்தியாவின் காந்தி என்று உங்களை அழைத்தார்களே ......! ஹசாரே தாத்தா ...... இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள் ...? உங்கள் கருத்து படி திரு. பூசனை ஜெயிலுக்கு அனுப்ப நீங்கள் தயாரா ...? அல்லது உங்கள் ஊர் பழக்கத்தின் படி தண்டனை கொடுக்க முடியுமா ....?

ஊழல் கொடுமையான வியாதி என்பதிலும்  , அது சமூகத்தை விட்டு அறவே களையப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக நிற்கிறேன் .  ஆனால் தனி வாழ்வில் சுத்தம் இல்லாத ஆனால் பொது வாழ்வில் ஈடுபடும்  இந்த மாதிரி " காந்திக்களும்  ,  மகாத்மாக்களும் "  இனம் காணப்பட வேண்டும் என்பதும் ஊழலுக்கு எதிரான தனி மனித ஒழுக்கம் வளரவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ....

Wednesday, 21 December 2011

வேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...?


தற்பொழுது தேசத்தில் நடந்து வரும் சில விரும்ப தகாத சம்பவங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக பெரிய பங்கு வகித்தாலும்  , அதை குறித்த செய்திகளை நாளேடுகளில் வாசிக்கும் போது பெரும் துயரம் அடைந்தேன் .

தமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும்  ,  சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .


சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் காலையில் உறுதி மொழி என்று ஒன்றை சத்தமாய் வாசிக்க சொல்லுவார்கள் . இப்பொழுதும் என் மனதில் அது ரீங்காரமிடுகிறது.

என் தாய் நாடு இந்தியா ....
இந்தியர்  அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...
என் தாய் திரு நாட்டை
உளமார நேசிக்கிறேன் ......
அதன் புகழுக்கு ஏற்ப
நன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....
அன்புடன் என்னை ஈந்த அன்னை ....
ஆருயிர் தந்தை ...
ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....
என் நாட்டிற்கும்  அதன் மக்களுக்கும்
என் வந்தனம் என்றும் உரியது ....
என் நாட்டவர் நலமும் வளமுமே
இன்பமென உளம் பூரிப்பேன் ........

ஒரு கோரசாய் உறுதி மொழியை சொல்லி முடித்த பிறகு நிலவும் சிறிய நேர அமைதியில் தேசத்திற்காக நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையை உணர்ந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.



வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாய் திரு நாட்டின் தாரக மந்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக முழங்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் .    முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக முக்கியமானது என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் அதே நேரம் ,  ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களையும்  , மலையாள நண்பர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ....?

நமது தேசத்தின் ஒற்றுமையை குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கலாம்  , தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம்  ,  நெருப்பு மூட்டி அனல் காயலாம் .  இந்த இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் அமைதி காத்து  , வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் , வன்முறைக்கு பாதிக்கபடுபவர்களுக்கு உதவுவோம் ...   தீய சக்திகளை அடையாளம் காண்போம் .... தேசத்தை காப்போம்  , தேசத்திற்காய் உழைப்போம் ...

நம் தேசம் ....நம் இந்தியா .... வந்தே மாதரம் ....!

Sunday, 18 December 2011

கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..?

இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...!




 
பிரதமர் அவர்களின் ரஷிய பயணத்தை கண்டித்து கூடங்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் 3  நாட்கள் ஈடுபட்டார்கள் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூறினார்கள் .  இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமார் அவர்களிடம் பேட்டி கண்டபோது , திரு . உதயகுமார் மத்தியில் ஆளும் அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று பேசினார் .  அதாவது 8  கோடி மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்து தான் அணுமின் நிலையத்தை அமைக்கிறது எனவும்  ,  கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் 3  பேரின் தூக்கு தண்டனையில் மத்திய அரசின் அணுகுமுறையை குறித்தும் பேசினார் ....

அட .... 8  கோடி தமிழனுக்கும் புது தலைவன் கிடைத்து விட்டான் போல என்று தான் நினைக்க தோன்றுகிறது .

Conflict management என்ற தலைப்பில் பல வருடங்கள் அமெரிக்காவில் பாடம் எடுத்த திரு . உதயகுமார் , தமிழ் வளர்ச்சிக்கும்  , தமிழனின் வளர்ச்சிக்கும் என்ன செய்தார் ...? இன்று வரை அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் திரு . உதயகுமார் தமிழன் என்று சொல்லும் தகுதியை எப்பொழுது பெற்றார் என்பது ஒரு புரியாத புதிர் தான் .


தமிழகத்தில் நிலவிய சில அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டு  , அணுமின் நிலையங்களை குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி  , இன்னும் அச்சம் தீரவில்லை என்ற ஒரு மாயையை உலகிற்கு ஏற்படுத்தி  , கடைசியில் வரும் 31  தேதிக்குள் அணு எரிபொருளை அணுமின் நிலையத்தில் இருந்து அகற்றாவிடில் குண்டு வீசி அணுமின் நிலையத்தை அழிப்போம் என்று பகிரங்கமாக மத்திய மாநில அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார் என்றால் ( தகவல் : தினகரன் , தினமலர் ) , இவரின் பின்னணி கொஞ்சம் ஆபத்தானது போல விளங்குகிறது .  இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது .


 இது வரையிலும் நானும் இந்த போராட்டத்தை மக்கள் அச்சத்தினால் விளைந்த போராட்டம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் .  இப்பொழுதும் என கோபம் மக்கள் மீது அல்ல .  அவர்கள் பயமுறுத்த பட்டதால் போராட விழைகிறார்கள்.  என கோபம் முழுவதும் தேசத்தின் நலனுக்கு எதிரான சில புல்லுரிவிகள்  மீது தான் .


வெளிநாட்டில் இருந்து பண உதவி வருவதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டின போதும்  , நான் அவ்வளவாக அதை ரசிக்கவில்லை .  ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்போவதாக பேட்டி கொடுத்து வந்த திரு. உதயகுமார்  , இதுவரை எந்த வழக்கு தொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதுவும் ஒரு புதிர்  தானே ...

126  வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியார் அணை பாதுகாப்பானது  , பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது  ( நானும் அப்படி தான் நம்புகிறேன் ) என்பதை நம்பும் அரசியவாதிகளும்  , தலைவர்களும்  , பல அடுக்கு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு புதிர் தானே ....

ஒரு வாரத்திற்கு முன்பு  மாண்புமிக தமிழக மின்துறை அமைச்சர் பேசும் போது மார்ச் மாதம் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் 930 MWe தமிழக மின்சார பற்றாக்குறையை தீர்க்கும்  ( நன்றி : தினகரன் ) என்றாலும்  , மாண்புமிகு தமிழக முதல்வர் வேடிக்கை பார்ப்பதும்  , கடிதம் எழுதுவதும் ஒரு புதிர் தானே ...

 இப்படி பல புதிர்களை தாங்கி கூடங்குளம் நின்றாலும்  ,  இந்த இந்தியனின் விருப்பம் என்னவெனில்  அப்பாவி மக்களை பயமுறுத்தி  , அவர்களை மனித கேடயங்களாக நிறுத்தி கலவர பேச்சை பேசும் சதிகார கூட்டத்திற்கு எதிரான குரல் மாத்திரமல்ல ஒரு கூட்டம் இளையோர்களும் எழும்பவேண்டும் .


 நிறுத்தி நிதானமாக வாசியுங்கள் .   என கருத்தும் , எழுத்தும்  அப்பாவி மக்களுக்கு விரோதமானது அல்ல  , ஆட்டு தோலை போர்த்தி கொண்டு உலா வரும் சில புத்திசாலிகளுக்கு எதிரானது ....

Monday, 12 December 2011

அரசியலே ... உன் பெயர் தான் ரெட்டை வேடமோ ...?


முல்லை பெரியார் என்ற பெயர் தான் இப்பொழுது தமிழகத்தை கலக்கி கொண்டு இருக்கிறது .   நமது ஊர் அரசியல் அண்ணாச்சிகளும் வேட்டியை மடித்து கட்டி கொண்டு கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .  அனைத்து நாளேடுகளிலும் வெளிவரும் பிரபல அரசியல் தலைவர்களின் பேட்டிகளை படித்த போது தான் , இந்த கட்டுரையை வெகு நாள் கழித்து எழுத வேண்டும் என்று உந்தப்பட்டேன் .



 1887   ஆம் ஆண்டு  கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணை கேரள பிரதேச பகுதியில் கட்டப்படிருந்தாலும்  , அந்த அணையின் மூலம் பயன் பெறுவது தமிழ்நாடு என்பது தான் இந்த பிரச்சனையின் மூலக்காரணம்.  இந்த அணை பலவீனமடைந்து விட்டது என்று சொல்லி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதும்  ,  அந்த அணை பலமானது என்று தான் தமிழக அரசியல்வாதிகள்  கூறுவதும் இந்த பிரச்சனையை அதிகரித்து உள்ளது.   



திரு . வைகோ அவர்கள் இந்த பிரச்னையை குறித்து சங்கரன்கோவில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது  " பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணை உடையாது " என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதிபடுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்  ( நன்றி :  தினகரன்  , பக்கம் 15  , தேதி  12 - 12 - 2011 )
திரு தா . பாண்டியன்   , சிவகிரியில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில் , " 116  ஆண்டுகளே ஆன வலுவான நிலையில் உள்ளது அணை " என்று கூறியுள்ளார் , ( நன்றி :  தினகரன்  , பக்கம் 3  , தேதி  12 - 12 - 2011 )

எல்லாவற்றுக்கும் மேலாக திரு. திருமாவளவன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் " அணை பாதுகாப்பு அற்றது என்று வதந்தியை பரப்பும் கேரள அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் .


இது எல்லாம் நல்ல விடயங்கள் தானே என்று நினைக்க தான் தோன்றுகிறது .   ஆனால் இந்த தலைவர்களை பார்த்து நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது .

முதலாவது .... திரு . வைகோ அவர்களே  ,  பூகம்ப பகுதி 3 ல் வரும் முல்லை பெரியார் அணை 116  ஆண்டுகள் ஆகியும் உடையாது என கூறுகிறீர்களே  ,  ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம்ப பகுதி 2 ல் வந்தாலும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் என்று போராடினீர்கள் அல்லவா ...... அதன் அர்த்தம் என்ன ....?
திரு . திருமா ,  வதந்தியை பரப்பும் கேரள அரசை தண்டிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள்  ,  116  ஆண்டுகள் ஆன அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறும் நீங்கள் ,  " கூடங்குளம் பாதுகாப்பானது என்று பெரும் அறிவியல்லாளர் திரு . அப்துல் கலாம் சொன்ன கருத்தை ஏற்க்கவில்லை .     வதந்திக்கு விரோதமாக போராடும் நீங்கள் ஏன்  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக வதந்திகளை பரப்பும் திரு . உதயகுமார் அவர்களோடு கை கோர்த்தீர்கள் ..?

அப்பாவி மக்களை உங்கள் அரசியலுக்கும்  , அதி புத்திசாலிதனத்திற்கும் பலியாக்காதீர் என்பதே இந்த இந்தியனின் கோரிக்கை