Tuesday, 1 August 2017

பொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..? ஒரு அலசல் :

பொது விநியோகம் அல்லது நியாயவிலைக்கடைகள் என்று அழைக்கப்படுகிற ரேஷன் கடைகள் 1947 ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு உருவாக்கப்பட்டது. அதன் மிக முக்கியமான நோக்கம் அனைவருக்கும் உணவு என்பது உறுதி செய்யப்படவேண்டும் என்பதே...!


இந்த நியாயவிலைக்கடைகளில் கிடைக்கும் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதன் காரணம் அரசு அந்த விலையில் ஒரு சிறு பகுதியை மானியமாக கொடுப்பதே...! இந்த மானியத்தை குறைக்க அரசு செய்துள்ள முடிவு தான் இந்த மானியம் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படும் என்பது. LPG வாங்கும்போது எப்படி மானியம் வங்கிகளில் செலுத்தப்பட்டதோ.. அப்படியே இந்த மானியமும் செலுத்தப்படும் என்று அரசு சொல்லுகிறது...


அரசின் இந்த கொள்கை வெளிப்புறமாக பார்ப்பதற்கு முன்னேற்றமாக தெரிந்தாலும் , இதனது விளைவுகள் நாட்டின் அடிப்படை மனிதனை அசைத்துவிடும் என்பது தான் உண்மை.! எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.


PDS என்று சொல்லப்படகூடிய போது விநியோக திட்டத்தின்படி மத்திய அரசு விநியோகத்திற்கு தேவையான பொருட்களை அதாவது அரிசி , சீனி , கோதுமை மற்றும் மண்னென்னை முதலானவைகளை மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும். மாநில அரசோ அந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான கடைகளை உருவாக்கவேண்டும். இந்த பணிக்கென்று தேவையான அளவில் உணவுப்பொருட்கள் வாங்கவும் அதை கையிருப்பில் பத்திரமாக வைக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் FCI என்று சொல்லப்படக்கூடிய "மத்திய உணவுக் கழகம்"

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களை இந்த மத்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்து வந்தது. எவ்வளவு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் , அதை நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி , அதை தனது பண்டகசாலைகளில் பாதுகாத்து வந்தது. அந்த நியாயமான விலையை அரசே நியமித்து வந்தது. எனவே விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையும் அதே நேரத்தில் பசியால் வாடும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவும் கிடைத்துவந்தது....


சரி. இப்போதைய சூழலில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். பொது விநியோகத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் மத்திய உணவுக்கழகத்திற்கு என்ன வேலை இருக்கிறது? மத்திய உணவுக்கழகம் இல்லாவிடில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை யார் வாங்குவார்கள்? விளைவித்த பொருளை விற்காவிடில் விவசாயிகள் எங்கே போவார்கள்...?


நிச்சயம் பணக்கார நிறுவனங்கள் அந்த பணியை செய்ய ஆரம்பிக்கும். விளைவு ...! விவசாயிகளிடம் இருந்து அடிமட்ட விலையில் வாங்கி , சந்தையில் பெரும் லாபத்தில் விற்பார்கள்..! அரசு மானியம் நேரடியாக வங்கியில் தருகிறது என்று நாமும் அந்த பொருட்களை கடையில் வாங்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த மானியம் நிறுத்தப்படும். என்ன நடக்கும்..?

1.  சரியான விலை கிடைக்காததால் விவசாயத்தை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு வரும்...
2. விவசாயப் பொருட்கள் குறைந்தால் , விலை அதிகரிக்கும். வறுமை தலைவிரித்தாடும்...
3. தனியார் நிறுவனங்கள் செல்வதில் கொழிக்கும்..


அரசு லாபம் சம்பாதிக்க அல்ல...! குடிமக்களின் நன்மைக்காகவே இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தால் நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தை காப்பாற்றலாம். இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் சீரழிவதை தடுக்க யாராலும் முடியாது.

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி