Showing posts with label குமுறல்கள். Show all posts
Showing posts with label குமுறல்கள். Show all posts

Tuesday, 1 August 2017

பொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..? ஒரு அலசல் :

பொது விநியோகம் அல்லது நியாயவிலைக்கடைகள் என்று அழைக்கப்படுகிற ரேஷன் கடைகள் 1947 ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு உருவாக்கப்பட்டது. அதன் மிக முக்கியமான நோக்கம் அனைவருக்கும் உணவு என்பது உறுதி செய்யப்படவேண்டும் என்பதே...!


இந்த நியாயவிலைக்கடைகளில் கிடைக்கும் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதன் காரணம் அரசு அந்த விலையில் ஒரு சிறு பகுதியை மானியமாக கொடுப்பதே...! இந்த மானியத்தை குறைக்க அரசு செய்துள்ள முடிவு தான் இந்த மானியம் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படும் என்பது. LPG வாங்கும்போது எப்படி மானியம் வங்கிகளில் செலுத்தப்பட்டதோ.. அப்படியே இந்த மானியமும் செலுத்தப்படும் என்று அரசு சொல்லுகிறது...


அரசின் இந்த கொள்கை வெளிப்புறமாக பார்ப்பதற்கு முன்னேற்றமாக தெரிந்தாலும் , இதனது விளைவுகள் நாட்டின் அடிப்படை மனிதனை அசைத்துவிடும் என்பது தான் உண்மை.! எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.


PDS என்று சொல்லப்படகூடிய போது விநியோக திட்டத்தின்படி மத்திய அரசு விநியோகத்திற்கு தேவையான பொருட்களை அதாவது அரிசி , சீனி , கோதுமை மற்றும் மண்னென்னை முதலானவைகளை மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும். மாநில அரசோ அந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான கடைகளை உருவாக்கவேண்டும். இந்த பணிக்கென்று தேவையான அளவில் உணவுப்பொருட்கள் வாங்கவும் அதை கையிருப்பில் பத்திரமாக வைக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் FCI என்று சொல்லப்படக்கூடிய "மத்திய உணவுக் கழகம்"

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களை இந்த மத்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்து வந்தது. எவ்வளவு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் , அதை நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி , அதை தனது பண்டகசாலைகளில் பாதுகாத்து வந்தது. அந்த நியாயமான விலையை அரசே நியமித்து வந்தது. எனவே விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையும் அதே நேரத்தில் பசியால் வாடும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவும் கிடைத்துவந்தது....


சரி. இப்போதைய சூழலில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். பொது விநியோகத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் மத்திய உணவுக்கழகத்திற்கு என்ன வேலை இருக்கிறது? மத்திய உணவுக்கழகம் இல்லாவிடில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை யார் வாங்குவார்கள்? விளைவித்த பொருளை விற்காவிடில் விவசாயிகள் எங்கே போவார்கள்...?


நிச்சயம் பணக்கார நிறுவனங்கள் அந்த பணியை செய்ய ஆரம்பிக்கும். விளைவு ...! விவசாயிகளிடம் இருந்து அடிமட்ட விலையில் வாங்கி , சந்தையில் பெரும் லாபத்தில் விற்பார்கள்..! அரசு மானியம் நேரடியாக வங்கியில் தருகிறது என்று நாமும் அந்த பொருட்களை கடையில் வாங்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த மானியம் நிறுத்தப்படும். என்ன நடக்கும்..?

1.  சரியான விலை கிடைக்காததால் விவசாயத்தை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு வரும்...
2. விவசாயப் பொருட்கள் குறைந்தால் , விலை அதிகரிக்கும். வறுமை தலைவிரித்தாடும்...
3. தனியார் நிறுவனங்கள் செல்வதில் கொழிக்கும்..


அரசு லாபம் சம்பாதிக்க அல்ல...! குடிமக்களின் நன்மைக்காகவே இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தால் நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தை காப்பாற்றலாம். இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் சீரழிவதை தடுக்க யாராலும் முடியாது.

Saturday, 14 January 2017

பாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்.....

தேசிய கொடியை மதிக்கவேண்டும்....மாண்புமிகு பிரதமர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது .....

( நன்றி ; முகநூல் )

எல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படக்கூடாது..... இராணுவ வீரர்களை போல பாஜக கஷ்டபட்ட போது.....



தான் உடுத்தி வந்த மேல் நாட்டு உடைகளை களைந்து விட்டு கைத்தறி மூலம் செய்த கோவணத்தை கட்டி வந்த மகாத்மா காந்தியின் அடிசுவடிகளை மாண்புமிகு பிரதமர் பின்பற்றிய போது.....





மக்களை ஏமாளிகளாகவும் , கோமாளிகளாகவும் மாற்றும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்.....?

Saturday, 24 December 2016

நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......!?

காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ராகுல் காந்தி,  பிரதமர் திரு. மோடி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியதை நாம் அறிந்து இருக்கிறோம்.  அந்த குற்றசாட்டுகளுக்கு இன்று வரை பதில் தரப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் சொன்ன வார்த்தை தான் " நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்..."

உண்மையிலே கங்கா நதி மிகவும் தூய்மையானதா.....? என்றால் அது மிக பெரும் ஒரு வேதனையை தான் கொடுக்கிறது...

இமையமலை சாரலில் பனிக்கட்டிகள் உருகி , தண்ணீர் ஓடிவரும் போது , வெள்ளி கோடுகள் இழைத்தது போல தூய்மையை கண்டு மெய் சிலிர்த்து போய் நின்று இருக்கிறேன்...பெரும்பாலும் எல்லா நதிகளும் உற்பத்தியாகி வருகிற இடத்தில் சுத்தமாக இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்.....

ஆனால் அதே நதி இந்திய திரு கண்டத்தில் ஓடி வருகிற அவலம் இன்று கொடூரமானது.  மிகப் பெரிய அசுத்தமான நதிகளில் ஓன்று இந்த கங்கை நதியாக இருப்பதை கவனிக்கும் போது , நெஞ்சம் வலிக்கிறது.... மனித கழிவுகள் , மனித உடல்கள் , மற்றும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து இந்த கங்கையை அசுத்தமாக மாற்றி விட்டது...



இந்த அசுத்த கங்கையை சுத்தமாக்க பல முயற்சிகள் பல காலகட்டங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் இன்னும் சுத்தமானது போல தெரியவில்லை....

ஜனவரி 14 , 1986 ம் ஆண்டில் முன்னாள் பாரத பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி , இந்த கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று இல்லாமல் , நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் கங்கையில் கலக்கும் கழிவுகளை ( வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ) அகற்ற பல புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.  Ganga Action Plan என்ற பெயரில் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டது.  

1985 ம் வருடம் முதல் 2௦௦௦ வருடம் வரை கிட்டத்தட்ட 1௦ பில்லியன் ரூபாய்கள் இந்த தூய்மை திட்டத்திற்காக செலவிடப்பட்டது. 

2௦ பெப்ரவரி 2௦௦9 ம் ஆண்டில் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களால் National River Ganga Basin Authority (NRGBA )   என்ற அமைப்பை தொடங்கி இந்திய தேசியத்தின் நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.  2௦11 ம் வருடத்தில் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியினால் கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அளவில் உதவி பெறும் ஒப்புதல் பெறப்பட்டது.

1௦ ஜூலை 2௦14 ம் வருடத்தில் கங்கையை சுத்தபடுத்த நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி 2௦37 கோடியை தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.  அடுத்த 5 வருடங்களில் இன்னும் 2௦௦௦௦ கோடி கங்கையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது....

இந்திய தேசியத்தின் நதியான கங்கை வெகு விரைவில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.  ஆனால் இவ்வளவு அழுக்கு நிறைந்த கங்கையை பிரதமரோடு ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியது மாத்திரம் எனக்கு விளங்கவில்லை......

Tuesday, 13 December 2016

தமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலசல்....

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் காலமான பிறகு தமிழக மக்கள் கிரகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.... அதிமுக என்ற கட்சியின் அமைச்சர்களும் , MLAக்களுமே செய்வதறியாமல் பேசி வருகிறார்கள். ஆனால் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது , இவையெல்லாம் ஒரு நீண்ட நாள் திட்டமிடல் போல தோன்றுகிறது.

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி நல்ல உறவு இருந்தது என்று தான் நாம் சொல்லமுடியும்.  "எங்கள் தனிப்பட்ட உறவு மிகச் சிறந்த முறையில் இருக்கிறது " என்று பிரதமர் அவர்களே பத்திரிகையாளர்களிடம் சொல்லி உள்ளதை நாம் அறிவோம். தகவல் : http://www.thehindu.com/news/national/tamil-nadu/i-have-excellent-personal-relations-with-jayalalitha-modi/article5919668.ece.

2௦15 ம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் , போயஸ் கார்டன் சென்று அம்மாவை சந்தித்து பேசியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.


செப்டம்பர் 22 , 2௦16 அன்று மாண்புமிகு அம்மா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிற்பாடு பாரத பிரதமர் அம்மா அவர்களை அக்டோபர் 16 வரை பார்க்க வரவில்லை.  ராகுல் காந்தி முதலிய தேசிய தலைவர்கள் அப்போல்லோ வந்து சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது , பிரதமர் சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று அறிவித்தார். மாத்திரமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களிலும் அம்மா மீது நட்பும் பாசமும் வைத்திருப்பது நமது பிரதமர் அவர்கள் தான் என்றார்.  காணொளி கீழே இணைத்துள்ளேன்.


அப்படி இருக்கும் போது மாண்புமிகு அம்மா அவர்களை அவர்கள் இறக்கும் நேரம் வரை அப்போல்லோ வந்து பிரதமர் பார்க்காதது ஏன்...? என்பது ஒரு அசைக்கமுடியாத கேள்வி.

அக்டோபர் மாதத்தில் தமிழக தலைவர்கள் / மக்கள் எல்லாரும் அம்மாவின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது கூட மத்திய அரசின் கவனம் இந்த விசயத்தில் செலுத்தப்படாதது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மாநில முதல்வர் காலமானால் , மிஞ்சி போனால் ஒரு இரண்டு நாளுக்குள்ளாக ஒரு இடைகால முதல்வரை நியமிப்பார்கள். ஆனால் அம்மா இறந்த அதே இரவே ஒரு அமைச்சரவை பதவி ஏற்றது எனக்கு தெரிந்து எந்த வரலாற்றிலும் இடம் பெறாத ஒரு விடயம்....

மாண்புமிகு அம்மா தமிழக மக்களுக்காக வைத்து போன கோடிக்கணக்கான சொத்துகள் ( மக்களால் நான் ...மக்களுக்காக நான் என்றதால் நான் இப்படி எழுதுகிறேன் ) நிமிடத்தில் கைமாற வேண்டுமெனில் ஒரு நாளைக்குள் நடக்கிற விடயமா....?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில திரை மறைவு வேலைகள் நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு ஒபிஎஸ் அவர்கள் இரண்டு முறை இருந்தாலும் , அம்மா அவர்களின் அரசியல் வாரிசாக அவர்கள் நியமிக்கப்படவில்லை. மாத்திரமல்ல சமீப காலங்களில் சில முக்கியமான பொறுப்புகளில் இருந்து திரு. ஒபிஎஸ் விளக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்....இப்படி இருக்க திரு. ஒபிஎஸ் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட்டது அநேகரின் புருவத்தை உயர்த்தியது.

ஒருவேளை இந்த பதவி ஏற்கும் நிகழ்வு அம்மா மறைந்து சில வாரங்கள் கடந்து நடந்திருந்தால் , தமிழகத்தின் ஆட்சியே மாறி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒபிஎஸ் யின் தலைமையை விரும்பாத MLAகள் திமுக வுடன் சேர்ந்து விட கூட வாய்ப்புண்டு. ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்க ஒரே வழி இரவே பதவி ஏற்பது......இது யாருடைய திட்டமாக இருக்கும் என்பது நமக்கு புரியாதது அல்ல...!

ஒபிஎஸ் ஒரு திறமையான முதல்வரா என்றால் , நான் சொல்லுவதை விட அவர் அவையில் பேசியதை கீழே கொடுத்திருக்கிறேன் , நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் 



இப்படிப்பட்ட முதல்வரை தமிழகத்தில் தேர்வு செய்ய காரணங்கள் என்ன என்றெல்லாம் நாம் விவாதிக்க இறங்கினால் , பல காரியங்களை கண்டு கொள்ளலாம்.

·         காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டிப்பாக நிர்பந்தம் செய்ய தற்கால தமிழக அரசால் முடியாது..
·         மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்காத மத்திய அரசை கண்டிப்பாக தற்கால அரசு கண்டிக்காது..
·         GST போன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் இதுவரை சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு , சீக்கிரம் அதை நிறைவேற்றும்.

மொத்தத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் இருக்கும். அம்மாவின் இறுதி சடங்கில் ஐயா என்னை கைவிட்டுறாதீங்க என்ற வகையில் திரு. ஒபிஎஸ் கதறுவதும் , நான் இருக்கேன் என்ற விதத்தில் பிரதமர் அவரை கட்டி அணைத்ததும் , தமிழக முதல்வர் தேர்வில் பாஜக இருக்கிறது என்று நம்பதான் தோன்றுகிறது.


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதிமுக வை சேர்ந்த 5௦ MP கள் ( மக்களவை & மாநிலங்களவை ) டெல்லியில் இருப்பதால் , அவர்களை டெல்லியிலே தக்கவைக்க அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்க்கபட்டால் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி போன்ற நடிகர்களை தங்களுக்கு  புகழாரம் சூட்டுவதற்கும் பாஜக அவரை பயன்படுத்தி கொள்ளும். இனி வரும் காலங்களில் ரஜினியின் புகழுரையை நாம் அடிக்கடி கேட்கலாம்.

இதெல்லாம் எதற்க்காக என்று நமக்கு கேட்க தோன்றலாம். ஒன்றே ஓன்று தான் இருக்கமுடியும்.  இந்த 5 வருட காலத்தில் பலவீனமான அதிமுக ஆட்சியை பயன்படுத்தி பாஜக வை தமிழகத்தில் வளர்க்கலாம் என்பது தான் பிரதானமான திட்டமாய் இருக்கும்.  அதற்காக அவ்வப்போது கருப்பு பண ஒழிப்பு போன்ற மாயையான திட்டங்கள் வந்தால் வியப்பில்லை.

தமிழகத்தின் பிரதான கட்சி திமுக சும்மா இருக்குமா என்று கேட்டால் சும்மா இருக்காது தான்.  ஆனால் அதை அடக்கி வைப்பதற்கு சில வழக்குகள் தொடரப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. கலாநிதி மற்றும் தயாநிதி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை நாம் கவனிக்காமல் விட முடியாது.

மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது அல்லது வெகு சீக்கிரத்தில் மாயையில் மாளும் நாள் இல்லை என்பது தான் இந்த இந்தியனின் கருத்து.




Monday, 12 December 2016

மோடி ஜீ..... எங்க வயிறு எரியுது.....!

பிரதமர் அவர்களே......! ஒரு திட்டமிடலும் இல்லாமல் 1௦௦௦ ரூபாய் மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை களத்தில் இறக்கி விட்டீர்கள்....!



நீங்க சந்தோசமா இருக்கீங்க....நாளுக்கு நாள் ஒரு அறிக்கை விடுறீங்க...! நாடாளுமன்றத்திலே பேச மாட்டீங்க....! ஆனா மங்கி பாத்ல மட்டும் பேசுவீங்க...உங்க குடிமக்கள் நிலை தெரியுமா....?

ஒரு வங்கியிலும் 1௦௦ ரூபாய் நோட்டுகள் இல்லை ஐயா....! ரோசா பூ கலர்ல 2௦௦௦ ரூபாய் நோட்டை கொடுக்கிறாங்க.....!

2௦௦௦ ரூபாய் நோட்டை பார்த்தால் , எவனும் பொருள் தரமாட்டேங்குறான்....ஹோட்டல் போய் சாப்பிட முடியல.....ஒரு கிலோ பழம் வாங்க முடியல.....வயிறு பசிக்குது ஐயா....! துரித உணவகம் போய் கேட்டால் , சில்லரை இருக்கா என்று தான் முதலில் கேட்கிறான்.  பேப்பர் காரனுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை....பால்கார அம்மாவுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை......பிள்ளைகளுக்கு சாப்பிட முட்டாய் வாங்க முடியவில்லை.....

நீங்க பெரிசா அறிமுகப்படுத்தின 2௦௦௦ ரூபாய் என் பாக்கெட்டில் இருக்கு...ஆனா என் வயிறு எரியுது.....!  இந்த சாபம் உங்களை விடாது.....

Wednesday, 7 December 2016

ரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...?


விஜயகாந்த் நடித்த ரமணா என்ற படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சி நான் மிகவும் ரசித்த காட்சி.... எனக்கென்னவோ இன்று அந்த காட்சி அதிகம் நினைவுக்கு வருவதால் , அந்த காட்சியை பகிருகிறேன்...பாருங்கள்...!


இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் என் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வு.....!

அந்த ஆஸ்பத்திரி எங்கே என்று உங்களுக்கு தெரியுமா....?


டிஸ்கி :- சத்தியமாக இந்த பதிவுக்கும் அப்......எல்.......ஒ க்கும் சம்பந்தம் இல்ல.....!

Monday, 5 December 2016

ஜோசியம் பொய்.....! அம்மா மறைந்தார்...!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவினால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது , தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் அம்மா குணமடைந்து சீக்கிரம் திரும்புவார் என்று கூறினர்....



அவர்கள் உரைத்த ஜோதிடத்தை தந்தி தொலைக்காட்சி கூட ஒளிபரப்பியது.  அக்டோபர் மாதம் 2 ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ கீழே.....





ஜோசியம் பொய்த்து விட்டது....தமிழகத்தின் இரும்பு மனுஷி அம்மா காலமானார்கள்......

இனியாவது ஜோசியத்தை நம்பும் கூட்டம் குறையுமா.....?

Monday, 28 November 2016

டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் - காரணம் யார்....?

இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் என்ற வார்த்தைகள் பரவலாக பேசப்படுவதை நாம் கேட்கமுடியும். நமது நாடு கூட டிஜிட்டல் இந்தியா என்று முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன...? இதற்கான விதை விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது எவ்வாறு என்பதை நாம் சிந்திப்போம்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பதிவேடுகளுக்கு பஞ்சமே இல்லை...இலட்சக்கணக்கான பதிவேடுகள் ஒவ்வொரு அலுவலகத்திலேயும் பராமரிக்கப்படுகிறது. மாத்திரமல்ல 125 கோடி மக்களின் அநேக விவரங்கள் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , சொத்து விவரங்கள் , வங்கி கணக்குகள் இன்னும் ஏராளம் ) தனி தனி கணக்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.  இதனால் ஏற்ப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம் இருக்க , ஏராளமான போலி விவரங்கள் உருவாக்கப்பட்டன.  இதையெல்லாம் தடுக்க மாபெரும் பொருளாதார மேதை மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் ஒரு அற்புதமான திட்டம் தீட்டப்பட்டது.... ( கார்கில் யுத்தம் முடிந்தவுடன் எல்லையில் யாரும் நுழையாமல் இருக்க ஒரு தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவேண்டும் என்ற திட்டமே முன்னால் இருந்தது ) அந்த திட்டமே ஆதார் என்று அழைக்கப்பட கூடிய தனிமனிதனின் அடையாள அட்டை என்பது....

இது ஒரு மாபெரும் தொலைநோக்கு திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இதுவரை அருமையாக செயல்படுவதில் இருந்தே இந்த திட்டம் எவ்வளவு தீவிரமாக அதேநேரத்தில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம் . 

2௦௦6 ம் வருடத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு துறைரீதியான அனுமதி ௦3 மார்ச் 2௦௦6 அன்று வழங்கப்பட்டது. அதே நாளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த திட்டத்தை கணினியில் செயலபடுத்த வேண்டியதாகையால் விப்ரோ நிறுவனத்தின் திட்ட செயல்பாடு பெறப்பட்டு 3௦ ஆகஸ்ட் 2௦௦7 ல் திட்ட கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த சமயத்தில் தான் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது , தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் எடுத்தார்கள்.

இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காக பல துறை அமைச்சர்கள் அடங்கிய குழு ஓன்று அமைக்கப்பட்டது. ௦2 ஜூலை 2௦௦9 ம் ஆண்டில் UIDAI யின் தலைவராக நந்தன் நீல்கேணி நியமிக்கப்பட்டார். இவர் இன்போசிஸ் என்ற பிரபல கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

செப்டம்பர் 2௦1௦ ல் முதல் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்ட போதே அநேக போலி அடையாளங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் மிகுந்த ஆச்சரியத்துக்கு உரியது. எந்த பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுவே செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கி 2 வருடத்தில் 21 கோடி ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 21 வது கோடி அடையாள அட்டையை ராஜஸ்தானில் உள்ள dudu என்ற இடத்தில் வழங்கும்போது மாண்புமிகு முன்னாள் பிரதமர் பேசிய வார்த்தைகளை நான் சொல்லாமல் போகமுடியாது.... "I would like to compliment UIDAI Chairman Shri Nandan Nilekani and his team for achieving so much in such a short duration" (இத்தனை குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்திய திரு.நந்தன் நீல்கேணி மற்றும் அவரது குழுவினர் தான் பாராட்டுக்கு உரியவர் ) என்று பாராட்டிய தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...

தொடர்ந்து ஆதார் அட்டைக்கு பின்பு ஒளிந்து இருந்த பல பெரிய திட்டங்கள் அடங்கி இருந்ததை அறிந்த போது , எவ்வளவு திட்டமிடப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று அறிந்து கொள்ளமுடிந்தது...

1.       ஆதார் அடையாள அட்டை என் வங்கி புத்தகத்துடன் இணைக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

2.       LPG காஸ் வாங்கும் போது அரசு கொடுக்கும் மானியம் வங்கி மூலமாக நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் 26.11.2௦12 ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பெருமளவில் கருப்புப்பணம் உருவாவது தடுக்கப்பட்டது.

இந்த திட்டம் ஆரம்பித்த போது பாஜக வின் தேசிய செய்தி தொடர்பாளர் திருமதி மீனாக்ஷி லேகி , பாஜக பொது செயலாளர் திரு ஆனந்த் குமார் , திரு சுப்பிரமணியசாமி போன்றவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. 1௦ ஜூன் 2௦14 ல் ஆதார் செயல்பாட்டை கவனித்து கொண்டு இருந்த அமைச்சக குழுவை மாண்புமிகு தற்போதைய பிரதமர் கலைத்தார்கள். இருந்தாலும் இந்த திட்டத்தின் அடித்தளத்தை 1 ஜூலை 2014 ல் திரு .நந்தன் பிரதமரிடம் கீழ்க்கண்டவாறு விவரமாக விளக்கி கூறினார்...

1.       பாஸ்போர்ட் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்...
1.       சிம் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.
2.       PF கணக்குடன் ஆதார் இணைக்கப்படும்.
3.       திருமண தகவல் மையங்களில் ஆதார் இணைக்கப்படும்.
4.       வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
5.       ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்
6.       மக்கள் தொகை பதிவேட்டுடன் ஆதார் இணைக்கப்படும்... என்று பல ....

இந்த திட்டத்தில் ஒளிந்திருக்கும் தொலைநோக்கு பார்வையை உணர்ந்த பிரதமர் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று 5 ஜூலை 2௦14 ல் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட 1௦3 கோடி ஆதார் அட்டைகள் வழங்கபட்டு இருப்பதாக UIDAI அறிவிக்கிறது..

டிஜிட்டல் இந்தியாவை குறித்து நாம் பேசுகிற போது அதை உருவாக்க கனவு கண்டு அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களை நினைவுகூறாமல் இருக்கமுடியாது.....


டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் என்றால் ஆதாரின் ஆதாரம் எவர் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்...!

Sunday, 27 November 2016

2G - 1,76,000 கோடி - ஊழலா / நஷ்டமா - ஒரு அலசல்

ஊழல் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது 2G தான். அதுவும் 1,76,௦௦௦ கோடி ரூபாய் ஊழல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இன்றும் 1,76,௦௦௦ கோடி ரூபாயை பணமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வாதிடுபவரும் உண்டு....உண்மையில் 1,76,௦௦௦ கோடி ரூபாயை ஊழல் செய்து விட்டார்களா...? உலகின் முதல் பணக்காரர் பில்கேட்சின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர் , அதாவது 4.25 லட்ச கோடி. அதேநேரத்தில் உலகின் 1௦௦ வது பணக்காரரின் மதிப்பு 10.2 பில்லியன் டாலர் , அதாவது கிட்டத்தட்ட 5,3௦௦ கோடி. எனவே 1,76,௦௦௦ கோடி பணத்தை யாராவது கையில் வைத்திருந்தால் , அவர் நிச்சயம் உலக அளவில் ஒரு 3௦ வது இடத்தையாவது பிடிக்க வாய்ப்புண்டு.... சரி...2G என்றால் என்ன...?

இரண்டாம் தலைமுறை தொலைபேசி / அலைபேசி களுக்கான அலைவரிசையே 2G ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்பட்டது.. 1997 ம் வருடம் மற்றும் 2௦௦௦ வருடங்களில் அலைவரிசைகள் ( 9௦௦ MHz) MTNL மற்றும் BSNL க்கு வழங்கப்பட்டது....2௦௦1 ம் வருடத்தில் முதல்முறையாக 1800 MHz அலைக்கற்றைகள் ஏலமுறையில் விடப்பட்டன....இந்த காலத்தில் தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக BPL அலைபேசி தன் சேவையை துவங்கியது. வாக்கி டாக்கி போல பெரிய செல்போன்களை கையில் வைத்திருப்பதே கவுரவம் என்று கருதிய காலம் அது.  அது ஒருவகையில் உண்மைதான்....ஏன் எனில் BPL அலைபேசி வகுத்திருந்த சேவைக்கட்டணம் அவ்வளவு அதிகம். ஒன்றுமில்லை அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 16ம் , இன்கம்மிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 4ம் வசூலிக்கப்பட்டது. இப்படி கட்டணம் இருந்தால் நம்மில் ஒருவர் கூட அலைபேசியை பயன்படுத்த மாட்டோம் என்பதை அரசு அறிந்தது.... அதே நேரத்தில் இந்தியாவின் அபரீதமான கணிணியல் வளர்ச்சிக்கும் அதிகவேக இன்டர்நெட் போன்றவை தேவைப்பட்டன...இக்காலத்தில் தான் நாட்டை கணினிமயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டது என்று தான் கூறமுடியும்....

சாமானிய மக்களும் அலைபேசியை / இணையத்தை பயன்படுத்தவேண்டும் , அதே நேரத்தில் அந்த சூழல் சீக்கிரமாக இந்தியாவில் உருவாகவேண்டும் என்று நினைத்த அரசு 2௦௦8 ல் 122 2G அலைகற்றைகளை 2௦௦1 விலையிலே கொடுக்கக் தீர்மானித்தது...ஏலத்தில் விடாமல் 2௦௦1 விலையிலே கொடுப்பதற்கு அரசு நினைத்த பிரதான காரணம் வளர்ச்சியே....! ஒருவேளை 2௦௦8 ல் ஏலம் விடப்பட்டு இருந்தால் பல ஆயிர கோடிக்கு ஏலம் போயிருக்கும். ஆனால் பல ஆயிர கோடிக்கு ஏலம் எடுக்கிறவன் தனது சேவையை எப்படி குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கமுடியும் என்ற நினைப்பு தான் அந்த முடிவுக்கு காரணம். எனவே First Come First Serve முறையில் அலைகற்றைகளை ஒதுக்க அரசு தீர்மானித்தது..

இங்கு தான் தமிழ்நாட்டின் சிங்கம் (!) ராஜா தனது வேலையை காண்பித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத / அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்தார். வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்யும் படி பிரதமர் கூறிய அறிவுரையை புறம் தள்ளியதால் இந்த முறைகேடான ஒதுக்கீடு நடந்தது....ஆனால் இந்த காலங்களில் தான் 1 நிமிடத்திற்கு 16ரூபாய் ஏற்று இருந்த அவுட்கோயிங் கால் 1 ரூபாய் அளவுக்கு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்....! இந்த காலகட்டத்திற்கு பின்பு தான் இந்திய தொலைபேசி வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்பட்டதை யாரும் மறுக்கமுடியாது.   சரி ...! இப்போது 1,76,௦௦௦ கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து சிந்திப்போம்...!

அரசின் திட்டங்களை ஆய்வுசெய்யும் CAG என்று சொல்லப்பட கூடிய மத்திய தணிக்கை துறை இந்த 2G ஒதுக்கீடு குறித்தும் ஆய்வு செய்தது. 2௦௦8 ல் First Come First Serve முறையில் ஒதுக்கீடு செய்யாமல் ஏலம் மூலம் அலைகற்றைகளை விற்று இருந்தால் அரசுக்கு லாபம் கிடைத்து இருக்கும் என்று தந்து அறிக்கையை சமர்ப்பித்தது. 2௦1௦ ம் வருடம் விடப்பட்ட 3G அலைகற்றை ஏலத்தை அடிப்படையாக கொண்டு 2௦௦8 ல் 2G அலைகற்றைகள் ஏலம் விடபட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் என்று அறிவித்தது.... அதாவது அரசுக்கு 1,76,௦௦௦ கோடி இழப்பு என்று அறிவித்தது....

சரி ....இவைகளை கருத்தில் கொண்டு நாம் பின்வரும் காரியங்களை சிந்திப்போம்....!

1.       ஏலம் விட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி கிடைத்து இருக்கலாம். ஆனால் 1,76,௦௦௦ கோடிக்கு ஏலம் வாங்கிய தொலைபேசி நிறுவனங்கள் மக்களிடம் தானே அந்த பணத்தை திரும்ப வாங்கும். அப்படியானால் சாமானிய மக்களுக்கு எப்படி அலைபேசி போய் சேரும்...?  இது ஒருவகையில் இலவச மின்சாரம் கொடுப்பது போலதான்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது அரசுக்கு இழப்பு தானே..! ஆகிலும் நமது நாட்டில் விவசாயம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மின்சாரம் கொடுக்கபடுகிறது....

2.       அப்படியானால் இதிலே ஊழல் இல்லையா...என்று கேட்டால் கண்டிப்பாக இருந்து இருக்கும்...சாவு சான்றிதழ் வாங்குவதற்க்கே பணம் வாங்குகிற இந்த நாட்டிலே , சும்மா ஒதுக்கீடு செய்து இருப்பார்களா...? கண்டிப்பாக வாங்கியிருப்பார்...ஆனாலும் இவ்வளவு தான் லஞ்சம் வாங்கினார்கள் என்று யாராலும் நிரூபிக்கமுடியவில்லை....! நான் நினைக்கிறேன் அதிகபட்சம் 5௦௦ கோடிகள் ....இருக்கலாம்....

3.       திரு.ராஜாவுக்கு நான் வக்காலத்து வாங்குகிறேனா...? இல்லை...ஊழல் செய்தது யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் தண்டனை வாங்கி கொடுங்கள்.....! எனவே தான் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறதோ , அவர்களை மடக்குங்கள் என்கிறேன்...


4.   1,76,௦௦௦ கோடி என்பது ஊழல் அல்ல அது இழப்பு...! அது மக்கள் மத்தியில் 1,76,௦௦௦ கோடி ஊழல் என்று பரப்பியது ஒரு அரசியல் தந்திரமே....!

Friday, 25 November 2016

கருப்பு பண மரணங்கள் - மௌனமே அஞ்சலி

5௦௦ / 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்தியா முழுவதும் நிகழ்ந்த பரிதாப மரணங்கள் உங்கள் மௌன அஞ்சலிக்காக....!

1.       டெல்லி :- 25 வயது நிரம்பிய இளம் தொழில் அதிபர் விரேந்தர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தன்னிடம் இருந்த 12 லட்சம் ரூபாயை மாற்ற வழி இல்லாததால் , மனம் உடைந்து தற்கொலை செய்ததாக மனைவி கூறினார் . தகவல் :- இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2.       ஆந்திர மாநிலம் சித்தூர் :- 7௦ வயது நிரம்பிய இரத்தின பிள்ளை வங்கி வாசலில் அதிக நேரம் நின்றதால் களைப்படைந்து வங்கி மேலாளரை அணுகிய நேரத்தில் இறந்தார் . தகவல் : தி இந்து.

3.       ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் :- 56 வயது நிரம்பிய வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் , 3 நாட்கள் இரவு பகல் வேலை செய்ததால் வங்கியில் இறந்து போனார். தகவல் :- இந்துஸ்தான் டைம்ஸ்.

4.       உபி மாநிலம் , அசம்கார் :- 7௦ வயது நிரம்பிய அஹமது வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் போது இறந்தார் . தகவல் டைம்ஸ் ஒப் இந்தியா

5.       ராஜஸ்தான் மாநிலம் , சிகார் மாவட்டம் :- 62 வயது நிரம்பிய டீ விற்கும் ஜகதீஸ் பன்வர் , தனது மகளின் திருமணத்திற்கு பணம் எடுக்கமுடியாததால் மாரடைப்பில் மரித்தார் . தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

6.       மீரட் :- நான்கு நாட்களாக வரிசையில் நின்றும் பணம் கிடைக்காத நிலையில் , வங்கி முன் வரிசையில் நிற்கும் போது மரணமடைந்தார் முகமது. தகவல் : தி இந்து.

7.       மத்திய பிரதேசம் : 7௦ வயது முன்னாள் இராணுவ வீரரான பாபுலால் தன்னிடமிருந்த 12௦௦௦ ரூபாயை மாற்ற போகையில் வங்கிக்கு 1௦௦ மீட்டர் அருகில் மரித்தார்.  தகவல் : தி வீக்கென்ட் லீடர்

8.       ஜார்கண்ட் , பலமு :-  வங்கியின் வாசலில் நிற்க்கும் போது ராம் சந்திர பாஸ்வான் மரித்தார்.  தகவல் : இந்திய எக்ஸ்பிரஸ்.

9.       உபி மாநிலம் , பல்லியா :- பல மணி நேரம் செலவழித்த பின்பும் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் மாரடைப்பில் மரித்தார் சுரேஷ் சோனார். தகவல் : பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா.

10.   புனே :- 53 வயது வங்கி உதவியாளரான துக்காராம் அதிக கூட்டத்தை கையாண்டதால் , மாரடைப்பில் உயிரிழந்தார். தகவல் : இந்துஸ்தான் டைம்ஸ்

இறந்த 65 பேர்களில் ஒரு பத்து பேர் மாத்திரமே இவர்கள்.....என்ன தப்பு செய்தார்கள்....? கொள்ளை அடித்தார்களா...? கருப்பு பணத்தின் மீது படுத்து கிடந்தார்களா...? இல்லை கள்ளப் பணம் அடித்தார்களா....?

நாட்டுக்காக இப்படி சில காரியங்களை சகிக்க தான் வேண்டும் என்று யாராவது கூறினால் , உங்கள் வீடுகளில் இப்படி யாரையாவது விட்டு தருவீர்களா என்று சிந்திக்கவும்....


மௌன அஞ்சலிகள் மாத்திரம்......!