Monday, 28 November 2016

டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் - காரணம் யார்....?

இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் என்ற வார்த்தைகள் பரவலாக பேசப்படுவதை நாம் கேட்கமுடியும். நமது நாடு கூட டிஜிட்டல் இந்தியா என்று முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன...? இதற்கான விதை விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது எவ்வாறு என்பதை நாம் சிந்திப்போம்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பதிவேடுகளுக்கு பஞ்சமே இல்லை...இலட்சக்கணக்கான பதிவேடுகள் ஒவ்வொரு அலுவலகத்திலேயும் பராமரிக்கப்படுகிறது. மாத்திரமல்ல 125 கோடி மக்களின் அநேக விவரங்கள் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , சொத்து விவரங்கள் , வங்கி கணக்குகள் இன்னும் ஏராளம் ) தனி தனி கணக்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.  இதனால் ஏற்ப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம் இருக்க , ஏராளமான போலி விவரங்கள் உருவாக்கப்பட்டன.  இதையெல்லாம் தடுக்க மாபெரும் பொருளாதார மேதை மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் ஒரு அற்புதமான திட்டம் தீட்டப்பட்டது.... ( கார்கில் யுத்தம் முடிந்தவுடன் எல்லையில் யாரும் நுழையாமல் இருக்க ஒரு தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவேண்டும் என்ற திட்டமே முன்னால் இருந்தது ) அந்த திட்டமே ஆதார் என்று அழைக்கப்பட கூடிய தனிமனிதனின் அடையாள அட்டை என்பது....

இது ஒரு மாபெரும் தொலைநோக்கு திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இதுவரை அருமையாக செயல்படுவதில் இருந்தே இந்த திட்டம் எவ்வளவு தீவிரமாக அதேநேரத்தில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம் . 

2௦௦6 ம் வருடத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு துறைரீதியான அனுமதி ௦3 மார்ச் 2௦௦6 அன்று வழங்கப்பட்டது. அதே நாளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த திட்டத்தை கணினியில் செயலபடுத்த வேண்டியதாகையால் விப்ரோ நிறுவனத்தின் திட்ட செயல்பாடு பெறப்பட்டு 3௦ ஆகஸ்ட் 2௦௦7 ல் திட்ட கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த சமயத்தில் தான் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது , தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் எடுத்தார்கள்.

இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காக பல துறை அமைச்சர்கள் அடங்கிய குழு ஓன்று அமைக்கப்பட்டது. ௦2 ஜூலை 2௦௦9 ம் ஆண்டில் UIDAI யின் தலைவராக நந்தன் நீல்கேணி நியமிக்கப்பட்டார். இவர் இன்போசிஸ் என்ற பிரபல கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

செப்டம்பர் 2௦1௦ ல் முதல் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்ட போதே அநேக போலி அடையாளங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் மிகுந்த ஆச்சரியத்துக்கு உரியது. எந்த பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுவே செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கி 2 வருடத்தில் 21 கோடி ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 21 வது கோடி அடையாள அட்டையை ராஜஸ்தானில் உள்ள dudu என்ற இடத்தில் வழங்கும்போது மாண்புமிகு முன்னாள் பிரதமர் பேசிய வார்த்தைகளை நான் சொல்லாமல் போகமுடியாது.... "I would like to compliment UIDAI Chairman Shri Nandan Nilekani and his team for achieving so much in such a short duration" (இத்தனை குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்திய திரு.நந்தன் நீல்கேணி மற்றும் அவரது குழுவினர் தான் பாராட்டுக்கு உரியவர் ) என்று பாராட்டிய தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...

தொடர்ந்து ஆதார் அட்டைக்கு பின்பு ஒளிந்து இருந்த பல பெரிய திட்டங்கள் அடங்கி இருந்ததை அறிந்த போது , எவ்வளவு திட்டமிடப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று அறிந்து கொள்ளமுடிந்தது...

1.       ஆதார் அடையாள அட்டை என் வங்கி புத்தகத்துடன் இணைக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

2.       LPG காஸ் வாங்கும் போது அரசு கொடுக்கும் மானியம் வங்கி மூலமாக நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் 26.11.2௦12 ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பெருமளவில் கருப்புப்பணம் உருவாவது தடுக்கப்பட்டது.

இந்த திட்டம் ஆரம்பித்த போது பாஜக வின் தேசிய செய்தி தொடர்பாளர் திருமதி மீனாக்ஷி லேகி , பாஜக பொது செயலாளர் திரு ஆனந்த் குமார் , திரு சுப்பிரமணியசாமி போன்றவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. 1௦ ஜூன் 2௦14 ல் ஆதார் செயல்பாட்டை கவனித்து கொண்டு இருந்த அமைச்சக குழுவை மாண்புமிகு தற்போதைய பிரதமர் கலைத்தார்கள். இருந்தாலும் இந்த திட்டத்தின் அடித்தளத்தை 1 ஜூலை 2014 ல் திரு .நந்தன் பிரதமரிடம் கீழ்க்கண்டவாறு விவரமாக விளக்கி கூறினார்...

1.       பாஸ்போர்ட் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்...
1.       சிம் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.
2.       PF கணக்குடன் ஆதார் இணைக்கப்படும்.
3.       திருமண தகவல் மையங்களில் ஆதார் இணைக்கப்படும்.
4.       வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
5.       ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்
6.       மக்கள் தொகை பதிவேட்டுடன் ஆதார் இணைக்கப்படும்... என்று பல ....

இந்த திட்டத்தில் ஒளிந்திருக்கும் தொலைநோக்கு பார்வையை உணர்ந்த பிரதமர் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று 5 ஜூலை 2௦14 ல் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட 1௦3 கோடி ஆதார் அட்டைகள் வழங்கபட்டு இருப்பதாக UIDAI அறிவிக்கிறது..

டிஜிட்டல் இந்தியாவை குறித்து நாம் பேசுகிற போது அதை உருவாக்க கனவு கண்டு அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களை நினைவுகூறாமல் இருக்கமுடியாது.....


டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் என்றால் ஆதாரின் ஆதாரம் எவர் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்...!

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி