Monday, 28 November 2016

டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் - காரணம் யார்....?

இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் என்ற வார்த்தைகள் பரவலாக பேசப்படுவதை நாம் கேட்கமுடியும். நமது நாடு கூட டிஜிட்டல் இந்தியா என்று முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன...? இதற்கான விதை விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது எவ்வாறு என்பதை நாம் சிந்திப்போம்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பதிவேடுகளுக்கு பஞ்சமே இல்லை...இலட்சக்கணக்கான பதிவேடுகள் ஒவ்வொரு அலுவலகத்திலேயும் பராமரிக்கப்படுகிறது. மாத்திரமல்ல 125 கோடி மக்களின் அநேக விவரங்கள் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , சொத்து விவரங்கள் , வங்கி கணக்குகள் இன்னும் ஏராளம் ) தனி தனி கணக்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.  இதனால் ஏற்ப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம் இருக்க , ஏராளமான போலி விவரங்கள் உருவாக்கப்பட்டன.  இதையெல்லாம் தடுக்க மாபெரும் பொருளாதார மேதை மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் ஒரு அற்புதமான திட்டம் தீட்டப்பட்டது.... ( கார்கில் யுத்தம் முடிந்தவுடன் எல்லையில் யாரும் நுழையாமல் இருக்க ஒரு தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவேண்டும் என்ற திட்டமே முன்னால் இருந்தது ) அந்த திட்டமே ஆதார் என்று அழைக்கப்பட கூடிய தனிமனிதனின் அடையாள அட்டை என்பது....

இது ஒரு மாபெரும் தொலைநோக்கு திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இதுவரை அருமையாக செயல்படுவதில் இருந்தே இந்த திட்டம் எவ்வளவு தீவிரமாக அதேநேரத்தில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம் . 

2௦௦6 ம் வருடத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு துறைரீதியான அனுமதி ௦3 மார்ச் 2௦௦6 அன்று வழங்கப்பட்டது. அதே நாளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த திட்டத்தை கணினியில் செயலபடுத்த வேண்டியதாகையால் விப்ரோ நிறுவனத்தின் திட்ட செயல்பாடு பெறப்பட்டு 3௦ ஆகஸ்ட் 2௦௦7 ல் திட்ட கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த சமயத்தில் தான் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது , தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் எடுத்தார்கள்.

இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காக பல துறை அமைச்சர்கள் அடங்கிய குழு ஓன்று அமைக்கப்பட்டது. ௦2 ஜூலை 2௦௦9 ம் ஆண்டில் UIDAI யின் தலைவராக நந்தன் நீல்கேணி நியமிக்கப்பட்டார். இவர் இன்போசிஸ் என்ற பிரபல கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

செப்டம்பர் 2௦1௦ ல் முதல் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்ட போதே அநேக போலி அடையாளங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் மிகுந்த ஆச்சரியத்துக்கு உரியது. எந்த பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுவே செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கி 2 வருடத்தில் 21 கோடி ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 21 வது கோடி அடையாள அட்டையை ராஜஸ்தானில் உள்ள dudu என்ற இடத்தில் வழங்கும்போது மாண்புமிகு முன்னாள் பிரதமர் பேசிய வார்த்தைகளை நான் சொல்லாமல் போகமுடியாது.... "I would like to compliment UIDAI Chairman Shri Nandan Nilekani and his team for achieving so much in such a short duration" (இத்தனை குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்திய திரு.நந்தன் நீல்கேணி மற்றும் அவரது குழுவினர் தான் பாராட்டுக்கு உரியவர் ) என்று பாராட்டிய தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...

தொடர்ந்து ஆதார் அட்டைக்கு பின்பு ஒளிந்து இருந்த பல பெரிய திட்டங்கள் அடங்கி இருந்ததை அறிந்த போது , எவ்வளவு திட்டமிடப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று அறிந்து கொள்ளமுடிந்தது...

1.       ஆதார் அடையாள அட்டை என் வங்கி புத்தகத்துடன் இணைக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

2.       LPG காஸ் வாங்கும் போது அரசு கொடுக்கும் மானியம் வங்கி மூலமாக நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் 26.11.2௦12 ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பெருமளவில் கருப்புப்பணம் உருவாவது தடுக்கப்பட்டது.

இந்த திட்டம் ஆரம்பித்த போது பாஜக வின் தேசிய செய்தி தொடர்பாளர் திருமதி மீனாக்ஷி லேகி , பாஜக பொது செயலாளர் திரு ஆனந்த் குமார் , திரு சுப்பிரமணியசாமி போன்றவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. 1௦ ஜூன் 2௦14 ல் ஆதார் செயல்பாட்டை கவனித்து கொண்டு இருந்த அமைச்சக குழுவை மாண்புமிகு தற்போதைய பிரதமர் கலைத்தார்கள். இருந்தாலும் இந்த திட்டத்தின் அடித்தளத்தை 1 ஜூலை 2014 ல் திரு .நந்தன் பிரதமரிடம் கீழ்க்கண்டவாறு விவரமாக விளக்கி கூறினார்...

1.       பாஸ்போர்ட் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்...
1.       சிம் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.
2.       PF கணக்குடன் ஆதார் இணைக்கப்படும்.
3.       திருமண தகவல் மையங்களில் ஆதார் இணைக்கப்படும்.
4.       வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
5.       ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்
6.       மக்கள் தொகை பதிவேட்டுடன் ஆதார் இணைக்கப்படும்... என்று பல ....

இந்த திட்டத்தில் ஒளிந்திருக்கும் தொலைநோக்கு பார்வையை உணர்ந்த பிரதமர் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று 5 ஜூலை 2௦14 ல் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட 1௦3 கோடி ஆதார் அட்டைகள் வழங்கபட்டு இருப்பதாக UIDAI அறிவிக்கிறது..

டிஜிட்டல் இந்தியாவை குறித்து நாம் பேசுகிற போது அதை உருவாக்க கனவு கண்டு அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களை நினைவுகூறாமல் இருக்கமுடியாது.....


டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் என்றால் ஆதாரின் ஆதாரம் எவர் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்...!

Sunday, 27 November 2016

2G - 1,76,000 கோடி - ஊழலா / நஷ்டமா - ஒரு அலசல்

ஊழல் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது 2G தான். அதுவும் 1,76,௦௦௦ கோடி ரூபாய் ஊழல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இன்றும் 1,76,௦௦௦ கோடி ரூபாயை பணமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வாதிடுபவரும் உண்டு....உண்மையில் 1,76,௦௦௦ கோடி ரூபாயை ஊழல் செய்து விட்டார்களா...? உலகின் முதல் பணக்காரர் பில்கேட்சின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர் , அதாவது 4.25 லட்ச கோடி. அதேநேரத்தில் உலகின் 1௦௦ வது பணக்காரரின் மதிப்பு 10.2 பில்லியன் டாலர் , அதாவது கிட்டத்தட்ட 5,3௦௦ கோடி. எனவே 1,76,௦௦௦ கோடி பணத்தை யாராவது கையில் வைத்திருந்தால் , அவர் நிச்சயம் உலக அளவில் ஒரு 3௦ வது இடத்தையாவது பிடிக்க வாய்ப்புண்டு.... சரி...2G என்றால் என்ன...?

இரண்டாம் தலைமுறை தொலைபேசி / அலைபேசி களுக்கான அலைவரிசையே 2G ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்பட்டது.. 1997 ம் வருடம் மற்றும் 2௦௦௦ வருடங்களில் அலைவரிசைகள் ( 9௦௦ MHz) MTNL மற்றும் BSNL க்கு வழங்கப்பட்டது....2௦௦1 ம் வருடத்தில் முதல்முறையாக 1800 MHz அலைக்கற்றைகள் ஏலமுறையில் விடப்பட்டன....இந்த காலத்தில் தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக BPL அலைபேசி தன் சேவையை துவங்கியது. வாக்கி டாக்கி போல பெரிய செல்போன்களை கையில் வைத்திருப்பதே கவுரவம் என்று கருதிய காலம் அது.  அது ஒருவகையில் உண்மைதான்....ஏன் எனில் BPL அலைபேசி வகுத்திருந்த சேவைக்கட்டணம் அவ்வளவு அதிகம். ஒன்றுமில்லை அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 16ம் , இன்கம்மிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 4ம் வசூலிக்கப்பட்டது. இப்படி கட்டணம் இருந்தால் நம்மில் ஒருவர் கூட அலைபேசியை பயன்படுத்த மாட்டோம் என்பதை அரசு அறிந்தது.... அதே நேரத்தில் இந்தியாவின் அபரீதமான கணிணியல் வளர்ச்சிக்கும் அதிகவேக இன்டர்நெட் போன்றவை தேவைப்பட்டன...இக்காலத்தில் தான் நாட்டை கணினிமயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டது என்று தான் கூறமுடியும்....

சாமானிய மக்களும் அலைபேசியை / இணையத்தை பயன்படுத்தவேண்டும் , அதே நேரத்தில் அந்த சூழல் சீக்கிரமாக இந்தியாவில் உருவாகவேண்டும் என்று நினைத்த அரசு 2௦௦8 ல் 122 2G அலைகற்றைகளை 2௦௦1 விலையிலே கொடுக்கக் தீர்மானித்தது...ஏலத்தில் விடாமல் 2௦௦1 விலையிலே கொடுப்பதற்கு அரசு நினைத்த பிரதான காரணம் வளர்ச்சியே....! ஒருவேளை 2௦௦8 ல் ஏலம் விடப்பட்டு இருந்தால் பல ஆயிர கோடிக்கு ஏலம் போயிருக்கும். ஆனால் பல ஆயிர கோடிக்கு ஏலம் எடுக்கிறவன் தனது சேவையை எப்படி குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கமுடியும் என்ற நினைப்பு தான் அந்த முடிவுக்கு காரணம். எனவே First Come First Serve முறையில் அலைகற்றைகளை ஒதுக்க அரசு தீர்மானித்தது..

இங்கு தான் தமிழ்நாட்டின் சிங்கம் (!) ராஜா தனது வேலையை காண்பித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத / அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்தார். வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்யும் படி பிரதமர் கூறிய அறிவுரையை புறம் தள்ளியதால் இந்த முறைகேடான ஒதுக்கீடு நடந்தது....ஆனால் இந்த காலங்களில் தான் 1 நிமிடத்திற்கு 16ரூபாய் ஏற்று இருந்த அவுட்கோயிங் கால் 1 ரூபாய் அளவுக்கு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்....! இந்த காலகட்டத்திற்கு பின்பு தான் இந்திய தொலைபேசி வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்பட்டதை யாரும் மறுக்கமுடியாது.   சரி ...! இப்போது 1,76,௦௦௦ கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து சிந்திப்போம்...!

அரசின் திட்டங்களை ஆய்வுசெய்யும் CAG என்று சொல்லப்பட கூடிய மத்திய தணிக்கை துறை இந்த 2G ஒதுக்கீடு குறித்தும் ஆய்வு செய்தது. 2௦௦8 ல் First Come First Serve முறையில் ஒதுக்கீடு செய்யாமல் ஏலம் மூலம் அலைகற்றைகளை விற்று இருந்தால் அரசுக்கு லாபம் கிடைத்து இருக்கும் என்று தந்து அறிக்கையை சமர்ப்பித்தது. 2௦1௦ ம் வருடம் விடப்பட்ட 3G அலைகற்றை ஏலத்தை அடிப்படையாக கொண்டு 2௦௦8 ல் 2G அலைகற்றைகள் ஏலம் விடபட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் என்று அறிவித்தது.... அதாவது அரசுக்கு 1,76,௦௦௦ கோடி இழப்பு என்று அறிவித்தது....

சரி ....இவைகளை கருத்தில் கொண்டு நாம் பின்வரும் காரியங்களை சிந்திப்போம்....!

1.       ஏலம் விட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி கிடைத்து இருக்கலாம். ஆனால் 1,76,௦௦௦ கோடிக்கு ஏலம் வாங்கிய தொலைபேசி நிறுவனங்கள் மக்களிடம் தானே அந்த பணத்தை திரும்ப வாங்கும். அப்படியானால் சாமானிய மக்களுக்கு எப்படி அலைபேசி போய் சேரும்...?  இது ஒருவகையில் இலவச மின்சாரம் கொடுப்பது போலதான்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது அரசுக்கு இழப்பு தானே..! ஆகிலும் நமது நாட்டில் விவசாயம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மின்சாரம் கொடுக்கபடுகிறது....

2.       அப்படியானால் இதிலே ஊழல் இல்லையா...என்று கேட்டால் கண்டிப்பாக இருந்து இருக்கும்...சாவு சான்றிதழ் வாங்குவதற்க்கே பணம் வாங்குகிற இந்த நாட்டிலே , சும்மா ஒதுக்கீடு செய்து இருப்பார்களா...? கண்டிப்பாக வாங்கியிருப்பார்...ஆனாலும் இவ்வளவு தான் லஞ்சம் வாங்கினார்கள் என்று யாராலும் நிரூபிக்கமுடியவில்லை....! நான் நினைக்கிறேன் அதிகபட்சம் 5௦௦ கோடிகள் ....இருக்கலாம்....

3.       திரு.ராஜாவுக்கு நான் வக்காலத்து வாங்குகிறேனா...? இல்லை...ஊழல் செய்தது யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் தண்டனை வாங்கி கொடுங்கள்.....! எனவே தான் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறதோ , அவர்களை மடக்குங்கள் என்கிறேன்...


4.   1,76,௦௦௦ கோடி என்பது ஊழல் அல்ல அது இழப்பு...! அது மக்கள் மத்தியில் 1,76,௦௦௦ கோடி ஊழல் என்று பரப்பியது ஒரு அரசியல் தந்திரமே....!

Friday, 25 November 2016

கருப்பு பண மரணங்கள் - மௌனமே அஞ்சலி

5௦௦ / 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்தியா முழுவதும் நிகழ்ந்த பரிதாப மரணங்கள் உங்கள் மௌன அஞ்சலிக்காக....!

1.       டெல்லி :- 25 வயது நிரம்பிய இளம் தொழில் அதிபர் விரேந்தர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தன்னிடம் இருந்த 12 லட்சம் ரூபாயை மாற்ற வழி இல்லாததால் , மனம் உடைந்து தற்கொலை செய்ததாக மனைவி கூறினார் . தகவல் :- இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2.       ஆந்திர மாநிலம் சித்தூர் :- 7௦ வயது நிரம்பிய இரத்தின பிள்ளை வங்கி வாசலில் அதிக நேரம் நின்றதால் களைப்படைந்து வங்கி மேலாளரை அணுகிய நேரத்தில் இறந்தார் . தகவல் : தி இந்து.

3.       ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் :- 56 வயது நிரம்பிய வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் , 3 நாட்கள் இரவு பகல் வேலை செய்ததால் வங்கியில் இறந்து போனார். தகவல் :- இந்துஸ்தான் டைம்ஸ்.

4.       உபி மாநிலம் , அசம்கார் :- 7௦ வயது நிரம்பிய அஹமது வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் போது இறந்தார் . தகவல் டைம்ஸ் ஒப் இந்தியா

5.       ராஜஸ்தான் மாநிலம் , சிகார் மாவட்டம் :- 62 வயது நிரம்பிய டீ விற்கும் ஜகதீஸ் பன்வர் , தனது மகளின் திருமணத்திற்கு பணம் எடுக்கமுடியாததால் மாரடைப்பில் மரித்தார் . தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

6.       மீரட் :- நான்கு நாட்களாக வரிசையில் நின்றும் பணம் கிடைக்காத நிலையில் , வங்கி முன் வரிசையில் நிற்கும் போது மரணமடைந்தார் முகமது. தகவல் : தி இந்து.

7.       மத்திய பிரதேசம் : 7௦ வயது முன்னாள் இராணுவ வீரரான பாபுலால் தன்னிடமிருந்த 12௦௦௦ ரூபாயை மாற்ற போகையில் வங்கிக்கு 1௦௦ மீட்டர் அருகில் மரித்தார்.  தகவல் : தி வீக்கென்ட் லீடர்

8.       ஜார்கண்ட் , பலமு :-  வங்கியின் வாசலில் நிற்க்கும் போது ராம் சந்திர பாஸ்வான் மரித்தார்.  தகவல் : இந்திய எக்ஸ்பிரஸ்.

9.       உபி மாநிலம் , பல்லியா :- பல மணி நேரம் செலவழித்த பின்பும் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் மாரடைப்பில் மரித்தார் சுரேஷ் சோனார். தகவல் : பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா.

10.   புனே :- 53 வயது வங்கி உதவியாளரான துக்காராம் அதிக கூட்டத்தை கையாண்டதால் , மாரடைப்பில் உயிரிழந்தார். தகவல் : இந்துஸ்தான் டைம்ஸ்

இறந்த 65 பேர்களில் ஒரு பத்து பேர் மாத்திரமே இவர்கள்.....என்ன தப்பு செய்தார்கள்....? கொள்ளை அடித்தார்களா...? கருப்பு பணத்தின் மீது படுத்து கிடந்தார்களா...? இல்லை கள்ளப் பணம் அடித்தார்களா....?

நாட்டுக்காக இப்படி சில காரியங்களை சகிக்க தான் வேண்டும் என்று யாராவது கூறினால் , உங்கள் வீடுகளில் இப்படி யாரையாவது விட்டு தருவீர்களா என்று சிந்திக்கவும்....


மௌன அஞ்சலிகள் மாத்திரம்......!

Wednesday, 23 November 2016

ஏமாளிகள் ஊரில் கோமாளி ராஜா.....சத்தியமா இது கதைதான்....நம்புங்க....

ஒரு ஊரில ஒரு பெரிய குளம் இருந்ததாம்...அந்த குளத்தில நிறைய வகை மீன்கள் சந்தோசமா வாழ்ந்து கொண்டு இருந்ததாம்...அந்த குளத்தில சில முதலைகளும் வாழ்ந்து வந்ததாம்....அந்த குளத்திற்கு ஒரு நாள் ராஜாவை தேர்ந்தெடுக்கும் படி முடிவு செய்யப்பட்டதாம்....எனவே அந்த குளத்தின் மீன்களும் , முதலைகளும் சேர்ந்து கொக்கை ராஜாவாக தேர்ந்து எடுத்ததாம்...அந்த கொக்கு நல்லா பேசும் என்பது தான் அந்த கொக்கின் சிறப்பு....

இந்த கொக்கு பல குளங்களுக்கும் அப்பப்போ பறந்து போயிட்டு வரும்மாம். அப்படி வரும்போதெல்லாம் இந்த மீன்களுக்கு ஒரே சந்தோசமா இருக்கும்.. கொக்கு ஒவ்வொரு நாளும் சொல்லும் காரியங்களை கேட்க கேட்க சொர்க்கதிற்க்கே போன மாதிரி ஒரு பெருமை இந்த அப்பாவி மீன்களுக்கு.....

ஒரு நாள் இந்த கொக்கு ராஜா மீன்களை பார்த்து சொல்லிச்சாம்...நாளைக்கு உங்களுக்காக நான் ஒரு பெரிய காரியம் செய்யப்போகிறேன் என்று.!....மீன்களுக்கு ஒன்றுமே புரியவில்லை...
கொக்கு ராஜா சொல்லிச்சாம் , " இந்த குளத்தில முதலைகளுக்கு இனிமேல் வேலை இல்லை , ஏனென்றால் இந்த குளத்து தண்ணீரை கருப்பா மாத்திருச்சு அந்த முதலைகள் ". அப்பவும் நிறைய மீன்களுக்கு ஒன்னுமே புரியல...!  அப்பதான் கொக்கு ராஜா தனது திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தது...." மக்கா....இந்த குளத்தில இருக்கிற கருப்பு தண்ணிய எல்லாம் நான் தூர ஊத்திட்டு , முதலைகளை பிடிச்சுட்டு , பிறகு நல்ல சுவையான தண்ணியால இந்த குளத்தை நிரப்ப போறேன் " என்று....

இந்த திட்டத்தை கேட்டவுடன் , நிறைய மீன்களுக்கு கண்ணுல தண்ணியே வந்துட்டாம்....ஐயோ...! இந்த ராஜாவுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு ஊரெல்லாம் வாழ்த்த ஆரம்பிச்சாங்களாம்..! சில புத்திசாலி மீன்களுக்கு என்னவோ தப்பு நடக்கபோவதாக தோன்ற , சில கேள்விகளை கேட்டுச்சாம்...உடனே சில பெரிய மீன்கள் சொல்லிச்சாம் , " கேள்வி கேட்ககூடாது . சாமி குத்தம் ஆயிடும்....உனக்கு இந்த குளத்து மேல அக்கறையில்லையா...." என்று....

குளத்தில இருக்கிற தண்ணிய எடுக்க ஆரம்பிச்சாங்க...! மீன்கள் எல்லாம் ஒரே சந்தோசம்..... "நம்ம தண்ணியை அழுக்கா மாத்துற முதலைகளை நம்ம ராஜா பிடிக்க போறார் " . கொக்கு ராஜா வேலையை ஆரம்பிச்சிட்டு , தூரத்தில இருக்கிற ஒரு குளத்துக்கு வழக்கம் போல போயிட்டாம்...

குளத்தில உள்ள முதலைகள் எல்லாம் அழகா வெளியே வந்து ஒரு ஓரமா உட்கார்ந்து குளத்தில தண்ணி எடுக்கிறத ரசிக்க ஆரம்பிச்சுட்டுதான்.. முதலைகள் தான் நீரிலும் நிலத்திலும் வாழுமே....! என்ன காரணமோ தெரியல....இந்த முதலைங்க குளத்து பக்கத்துல சில நல்ல குழிகளை வெட்டி வச்சிருக்கு.....சந்தோசமா குதித்த மீன்களுக்கு திடீரென்று மூச்சு திணறல்....தண்ணீ குறைய ஆரம்பிச்சுட்டு......

கொக்கு ராஜாவை எங்க ...? யாரும் பாத்தீங்களா....? ஒரே கூக்குரல்.....கண்ணுக்கெதிரே சில வயசான மீன்கள் செத்து விழுது ....! குளமே ஒரே குழப்பமா இருக்கு....! இன்னும் சில சாக கிடக்குது....! கேள்வி கேட்ட மீன்களை எல்லாம் திட்டின மீன்களுக்கு ஒன்னுமே சொல்லமுடியல...! எல்லாம் காத்துக்காக தவிக்குது....! ஒரே பெருமூச்சு....!

கொக்கு ராஜா பறந்து வந்திச்சு....அய்யோ....! என் மீன்களே என்று அழுதிச்சாம்....! வீட்டுக்கு போய் சாப்பிடாம இருந்திச்சாம்....சாகபோகிற மீன்களுக்கு நம்ம ராஜாவுக்கு நம்ம மேல நல்ல பாசம் அப்படின்னு நினைச்சிகிட்டே ஒன்னொன்னா மயங்கிச்சு.....!

அடுத்த குளத்தில் கொக்கு ராஜா பேசிகொண்டிருக்கு , " அந்த குளத்தில இருந்த கருப்பை எல்லாம் சுத்தமாக்கியாச்சு....குளத்தை கருப்பாக்கின ஒருத்தனும் இன்னைக்கு இல்ல "....ஒரே கைதட்டல்....ஒரே விசில்....! யாருடா என்று திரும்பி பார்த்தால்...." அட நம்ம முதலைகள் .....". பாவம் ...இவைகளை பார்ப்பதற்கும் , கேட்பதற்கும் மீன்களுக்கு தான் கொடுப்பினை இல்லை....ஏனென்றால் செத்துவிட்டதே.....!


கதை முடிந்திச்சு....! கத்தரிக்காய் காய்ச்சிச்சு....!

Tuesday, 22 November 2016

கருப்பு பணம் - ஹவாலா பணம் - ஒரு அலசல்


இந்த பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக எழுதப்படுகிறது. கருப்பு பணத்தில் இன்னும் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது..அதன் பெயர் ஹவாலா பணம்.  அல்வா கேள்விப்பட்டு இருக்கிறோம். அது என்ன ஹவாலா என்று கேட்க தோன்றுகிறதா   ....? தொடர்ந்து படியுங்கள்....
சட்ட ரீதியாக அல்லாமல் பணம் பரிமாறுவது தான் ( அதாவது வங்கியின் மூலம் அல்லாமல் ) ஹவாலா என்று அழைக்கபடுகிறது. சரி இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்....

A என்று சொல்லகூடிய நபர் ( முந்தைய பதிவின் படி இவர் X பிரிவை அதாவது தொழில் அதிபர்கள் , நடிகர்கள் , அரசியவாதிகள் பிரிவை சேர்ந்தவர் ) இந்தியாவில் இருக்கும் B என்ற நபரிடம் ( இவர் ஒரு புரோக்கர் ) தனது கருப்பு பணத்தையும் , ஒரு பாஸ்வோர்ட் யும் கொடுப்பார். அந்த பாஸ்வோர்ட் மற்றும் பணமதிப்பு போன்றவை  B என்ற இந்திய புரோக்கரினால் வெளிநாட்டில் இருக்கும் C என்ற புரோக்கருக்கு கொடுக்கப்படும். அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் A என்ற நபர் வெளிநாட்டில் இருக்கும் D என்ற தனது பினாமிக்கு பாஸ்வேர்ட் மற்றும் பணமதிப்பை தெரியப்படுத்துவார். D என்ற வெளிநாட்டு பினாமி C என்ற வெளிநாட்டு புரோக்கரிடம் சென்று பாஸ்வோர்ட் கூறி பணத்தை அந்த நாட்டு பணத்தில் பெற்று கொள்ளுவார்.  அதற்க்கு கூலியாக இரு புரோக்கர்களும் ஒரு தொகையை எடுத்து கொள்ளுவார்கள்.  இது தான் ஹவாலா....

இந்த கட்டத்தில் A விடம் இருக்கும் கருப்பு பணம் B யிடம் இருப்பது உண்மைதான்...எனவே இப்போது 5௦௦ மற்றும் 1௦௦௦ ருபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்தால் B மாட்டிகொள்ளுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சில காரியங்களை சிந்திப்போம்...

1.       உண்மையான கருப்பு பண முதலை A தப்பி கொண்டார். அவரது பணம் மிக பாதுகாப்புடன் D உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டாயிற்று.....

2.       A யிடம் இருந்து வந்த கருப்பு பணத்தை B ஏதாவது ஒரு விதத்திலே சமூக பொருளாதாரத்தில் கலந்திருக்க வாய்ப்புண்டு...அதாவது நிலங்கள் , வீடுகள் , தங்கம் போன்றவற்றை வாங்கியிருந்தால் , B யும் பாதுகாப்பாகி விட்டார்...

3.       B தன்னிடம் இருக்கிற இந்திய பணத்தை அயல்நாட்டில் இருக்கிற C எஜெண்டுக்காக இந்தியாவில் செலவிடவும் வாய்ப்புண்டு....

4.       இப்போது நிலங்களை விற்ற சராசரி மனிதனிடம் கருப்பு பணம் வந்து விட்டது.....
சரி....வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு A யினால் சும்மா இருக்க முடியுமா....? அதை மறுபடியும் வெள்ளையாக்கினால் தானே அவருக்கு நிம்மதி....இருக்கவே இருக்கிறது FDI ( Foreign Direct Investment ).  

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் 49% முதலீடுகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டது.... இன்றைய அரசு பெரும்பாலான துறைகளில் அந்நிய முதலீட்டை தாராளமாய் நுழைத்தது....உதாரனத்திற்க்கு....

1.       பாதுகாப்பது துறையில் 49%  ல் இருந்து 1௦௦% மாக
2.       ஆன்லைன் வர்த்தகத்தில் 1௦௦% அனுமதி
3.       மருந்து துறையில் 74% அனுமதி..
4.       இந்திய விமான போக்குவரத்தில் 1௦௦ சதவீத அனுமதி...

இப்படி பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் தாராளமாய் அனுமதிக்கப்பட்டது..இதற்க்கும் நாம் சிந்திக்கும் ஹவாலா என்ற கருப்பு பணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா ...? என்றால் இருக்கிறது ....

வெளிநாட்டில் தனது பணத்தை வைத்து இருக்கிற A என்ற நபர் அந்த நாட்டில் தனது பினாமி D பெயரில் ஒரு கம்பெனி துவங்குவார். அந்த கம்பெனி இந்திய பங்கு சந்தை  மூலமாக தனது பணத்தை "Participatory Note / P-Note"  என்ற முறையில் முதலீடு செய்யும்.  இப்போது அந்த பங்குகளின் மூலமாக கிடைக்கும் லாபம் வெளிநாட்டில் உள்ள Dக்கு போய் சேர்ந்து விடும்....எனவே தான் ஒன்றுமில்லாத மொரிசியஸ் தீவுகள் நமது நாட்டில் 36% முதலீடு செய்துள்ளது....

இப்போது என் கேள்வி ஓன்று தான்....கருப்பு பணம் போகும் வழியும் , திரும்ப இந்தியாவுக்கு வரும் வழியும் தெரிந்து இருக்கிறதே....உடனடியாக Participatory Note மூலமாக இந்திய கருப்பு பணம் உள்ளே வருவதை அரசு தடுக்கலாமே....இதனால் A மாத்திரமே பாதிக்கப்படுவான்....அன்றாடம் கூலிவேலை செய்கிற குப்பனிடம் ஹவாலா என்று சொன்னால் அல்வா என்று தான் சொல்லுவான்.... அடித்தட்டு மக்களிடம் பெறப்பட்ட பணத்தை கருப்புப்பணம் என்று சொல்லி பெயர் வாங்க நினைக்கும் முயற்சி மிக்க வருந்த தக்கது.....


என் சிற்றறிவுக்கு எட்டியபடி எழுதியுள்ளேன்.....

ATM முன்பு மக்கள் கூட்டம் - அரசின் தவறான திட்டமிடல் - ஒரு அலசல்..

கூட்டம் கூட்டமாக மக்கள் ATM முன்பு வரிசையில் நிற்பது பலராலும் பல விதங்களில் விமரிசிக்கப்படுகிறது....சில பேர் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள் எனவும் , சிலபேர் அன்றாட தேவைகளுக்காக வரிசையில் நிற்கிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.....ஆனால் உண்மை நிலவரம் தான் என்ன...?

பணப்புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டில் அதிகரித்து வருவதை நாம் அறிந்து இருக்கிறோம். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை மாற்றுவதற்கு ஒரு புறம் மக்கள் முயற்சித்தாலும் , இன்னொரு புறம் அதற்க்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறதாகவே தோன்றுகிறது...  
ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சிறிய தகவலை தொகுத்து தருகிறேன்.... ஆகஸ்ட் மாதம் 2௦16 ம் வருடத்தில் பண அட்டைகள் மூலமாக பண பரிவர்த்தனை மற்றும் பண அட்டைகள் மூலமாக பொருள் வாங்கியதை குறித்த தகவலே அது... இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளின் பரிவர்த்தனை தொகுப்பு... தகவல் (https://www.rbi.org.in/scripts/ATMView.aspx )

கிரெடிட் கார்டு....
ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலமாக 39,54,292 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 2.57 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் 6,46,950 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 304.2 கோடி பணம் ATM மூலமாக எடுக்கப்பட்டு உள்ளது .  இதில் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும் . கிரெடிட் கார்டு பொதுவாக பணக்காரர்களும் , அரசு அதிகாரிகளும் தான் பயன்படுத்துவார்கள்.  இதை பயன்படுத்தி பொருட்கள் தான் அதிகம் வாங்கி உள்ளார்கள்.....

டெபிட் கார்டு... :
சராசரி மனிதர்கள் பயன்படுத்தும் கார்டு டெபிட் கார்ட்... சம்பளம் , பென்ஷன் , கூலி , LPG மானியம் முதலானவைகள் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படுவதால் , வங்கி கணக்கு தொடங்கும் போதே ATM கார்டுகள் ( டெபிட் ) இலவசமாக கொடுக்கப்படுகிறது.  ஆகஸ்ட் 2௦16ம் மாதத்தில் மாத்திரம் இந்த டெபிட் கார்டுகள் மூலமாக 13,05,29,004 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 1.83 லட்சம் கோடி மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 75.67 கோடி பரிவர்த்தனைகள் மூலமாக 21.96 லட்சம் கோடி பணம் ATM மையங்களில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 21.96 லட்ச கோடி பணமும் நியாயமான பணம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. 

சரி இப்போது கணக்குக்கு வருவோம்...இந்தியாவில் மொத்தம் 1,௦3,651 ATM வங்கிகளுடனும் ( On Site ) , 99,15௦ ATM வங்கிகள் இல்லாத இடங்களிலும்  ( Off Site ) ஆக மொத்தம் 2,02,801 ATM உள்ளன. 5௦௦ ரூபாய் / ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் 1௦௦ ரூபாய் நோட்டுகள் மாத்திரமே ஏடிம் களில் வைக்கமுடியும். எனவே ஒரு ATM ல் 2.5 லட்சம் ரூபாய்க்கு 1௦௦ ரூபாய் நோட்டுகள் வீதம் நாள் ஒன்றுக்கு 2 முறை வைத்தாலும் ( இது அதிக பட்ச கணக்கு ) , ஒரு ATM நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாயை அளிக்கும். எனவே நாடு முழுவதும் இருக்கும் எல்லா ATM களும் சேர்ந்து 1௦,140 கோடியை ஒரு நாளில் அளிக்கும் என்பது அதிகபட்ச கணக்கு.  அப்படி இருந்தாலும் ஆகஸ்டு 2௦16 ல் ATM மூலமாக எடுக்கப்பட்ட பணம் எடுக்கப்பட வேண்டும் என்றால் கூட கிட்டத்தட்ட 22 நாட்கள் எடுக்கும்.

ஆனால் இதுவும் சாத்தியமா என்பது தெரியவில்லை...அதற்க்கு சில காரணங்களை கருதுகிறேன்.....

1.       ATM ல் உள்ளவர்கள் 2௦௦௦ ரூபாய் எடுப்பதை தவிர்க்கிறார்கள். 2௦௦௦ என்று தேர்வு செய்தால் ஒரே ஒரு 2௦௦௦ ரூபாய் நோட்டு வருகிறது. எனவே 19௦௦ என்று தான் தேர்வு செய்கிறார்கள்...

2.       ATM களில் புது 1௦௦ ரூபாய் நோட்டுகளை தான் வைக்கமுடியும்....ஆனால் போதுமான அளவு புது 1௦௦ ரூபாய்கள் கைவசம் இல்லை என்று அரசு வழக்கறிஞர் மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்து உள்ளார்....

3.       ஆகஸ்ட் மாதத்தில் தேவைப்படும் போது மட்டும் ATM யை நாடியவர்கள் , பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூட எடுக்க முயலலாம். அதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பாட வாய்ப்புண்டு....

4.       ஆனால் அதேநேரத்தில் இந்தியாவின் 6,40,867 கிராமங்களில் 40,000 கிராமங்களில் மாத்திரமே வங்கி சேவை உள்ளது....

   மொத்தத்தில் அரசின் தவறான திட்டமிடல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. என்ன நடக்கும் என்று தெரியவில்லை....காலம் தான் பதில் சொல்லும்....!