Wednesday, 21 December 2011

வேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...?


தற்பொழுது தேசத்தில் நடந்து வரும் சில விரும்ப தகாத சம்பவங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக பெரிய பங்கு வகித்தாலும்  , அதை குறித்த செய்திகளை நாளேடுகளில் வாசிக்கும் போது பெரும் துயரம் அடைந்தேன் .

தமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும்  ,  சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .


சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் காலையில் உறுதி மொழி என்று ஒன்றை சத்தமாய் வாசிக்க சொல்லுவார்கள் . இப்பொழுதும் என் மனதில் அது ரீங்காரமிடுகிறது.

என் தாய் நாடு இந்தியா ....
இந்தியர்  அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...
என் தாய் திரு நாட்டை
உளமார நேசிக்கிறேன் ......
அதன் புகழுக்கு ஏற்ப
நன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....
அன்புடன் என்னை ஈந்த அன்னை ....
ஆருயிர் தந்தை ...
ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....
என் நாட்டிற்கும்  அதன் மக்களுக்கும்
என் வந்தனம் என்றும் உரியது ....
என் நாட்டவர் நலமும் வளமுமே
இன்பமென உளம் பூரிப்பேன் ........

ஒரு கோரசாய் உறுதி மொழியை சொல்லி முடித்த பிறகு நிலவும் சிறிய நேர அமைதியில் தேசத்திற்காக நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையை உணர்ந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாய் திரு நாட்டின் தாரக மந்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக முழங்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் .    முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக முக்கியமானது என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் அதே நேரம் ,  ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களையும்  , மலையாள நண்பர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ....?

நமது தேசத்தின் ஒற்றுமையை குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கலாம்  , தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம்  ,  நெருப்பு மூட்டி அனல் காயலாம் .  இந்த இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் அமைதி காத்து  , வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் , வன்முறைக்கு பாதிக்கபடுபவர்களுக்கு உதவுவோம் ...   தீய சக்திகளை அடையாளம் காண்போம் .... தேசத்தை காப்போம்  , தேசத்திற்காய் உழைப்போம் ...

நம் தேசம் ....நம் இந்தியா .... வந்தே மாதரம் ....!

Sunday, 18 December 2011

கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..?

இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...!
 
பிரதமர் அவர்களின் ரஷிய பயணத்தை கண்டித்து கூடங்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் 3  நாட்கள் ஈடுபட்டார்கள் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூறினார்கள் .  இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமார் அவர்களிடம் பேட்டி கண்டபோது , திரு . உதயகுமார் மத்தியில் ஆளும் அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று பேசினார் .  அதாவது 8  கோடி மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்து தான் அணுமின் நிலையத்தை அமைக்கிறது எனவும்  ,  கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் 3  பேரின் தூக்கு தண்டனையில் மத்திய அரசின் அணுகுமுறையை குறித்தும் பேசினார் ....

அட .... 8  கோடி தமிழனுக்கும் புது தலைவன் கிடைத்து விட்டான் போல என்று தான் நினைக்க தோன்றுகிறது .

Conflict management என்ற தலைப்பில் பல வருடங்கள் அமெரிக்காவில் பாடம் எடுத்த திரு . உதயகுமார் , தமிழ் வளர்ச்சிக்கும்  , தமிழனின் வளர்ச்சிக்கும் என்ன செய்தார் ...? இன்று வரை அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் திரு . உதயகுமார் தமிழன் என்று சொல்லும் தகுதியை எப்பொழுது பெற்றார் என்பது ஒரு புரியாத புதிர் தான் .


தமிழகத்தில் நிலவிய சில அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டு  , அணுமின் நிலையங்களை குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி  , இன்னும் அச்சம் தீரவில்லை என்ற ஒரு மாயையை உலகிற்கு ஏற்படுத்தி  , கடைசியில் வரும் 31  தேதிக்குள் அணு எரிபொருளை அணுமின் நிலையத்தில் இருந்து அகற்றாவிடில் குண்டு வீசி அணுமின் நிலையத்தை அழிப்போம் என்று பகிரங்கமாக மத்திய மாநில அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார் என்றால் ( தகவல் : தினகரன் , தினமலர் ) , இவரின் பின்னணி கொஞ்சம் ஆபத்தானது போல விளங்குகிறது .  இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது .


 இது வரையிலும் நானும் இந்த போராட்டத்தை மக்கள் அச்சத்தினால் விளைந்த போராட்டம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் .  இப்பொழுதும் என கோபம் மக்கள் மீது அல்ல .  அவர்கள் பயமுறுத்த பட்டதால் போராட விழைகிறார்கள்.  என கோபம் முழுவதும் தேசத்தின் நலனுக்கு எதிரான சில புல்லுரிவிகள்  மீது தான் .


வெளிநாட்டில் இருந்து பண உதவி வருவதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டின போதும்  , நான் அவ்வளவாக அதை ரசிக்கவில்லை .  ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்போவதாக பேட்டி கொடுத்து வந்த திரு. உதயகுமார்  , இதுவரை எந்த வழக்கு தொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதுவும் ஒரு புதிர்  தானே ...

126  வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியார் அணை பாதுகாப்பானது  , பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது  ( நானும் அப்படி தான் நம்புகிறேன் ) என்பதை நம்பும் அரசியவாதிகளும்  , தலைவர்களும்  , பல அடுக்கு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு புதிர் தானே ....

ஒரு வாரத்திற்கு முன்பு  மாண்புமிக தமிழக மின்துறை அமைச்சர் பேசும் போது மார்ச் மாதம் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் 930 MWe தமிழக மின்சார பற்றாக்குறையை தீர்க்கும்  ( நன்றி : தினகரன் ) என்றாலும்  , மாண்புமிகு தமிழக முதல்வர் வேடிக்கை பார்ப்பதும்  , கடிதம் எழுதுவதும் ஒரு புதிர் தானே ...

 இப்படி பல புதிர்களை தாங்கி கூடங்குளம் நின்றாலும்  ,  இந்த இந்தியனின் விருப்பம் என்னவெனில்  அப்பாவி மக்களை பயமுறுத்தி  , அவர்களை மனித கேடயங்களாக நிறுத்தி கலவர பேச்சை பேசும் சதிகார கூட்டத்திற்கு எதிரான குரல் மாத்திரமல்ல ஒரு கூட்டம் இளையோர்களும் எழும்பவேண்டும் .


 நிறுத்தி நிதானமாக வாசியுங்கள் .   என கருத்தும் , எழுத்தும்  அப்பாவி மக்களுக்கு விரோதமானது அல்ல  , ஆட்டு தோலை போர்த்தி கொண்டு உலா வரும் சில புத்திசாலிகளுக்கு எதிரானது ....

Monday, 12 December 2011

அரசியலே ... உன் பெயர் தான் ரெட்டை வேடமோ ...?


முல்லை பெரியார் என்ற பெயர் தான் இப்பொழுது தமிழகத்தை கலக்கி கொண்டு இருக்கிறது .   நமது ஊர் அரசியல் அண்ணாச்சிகளும் வேட்டியை மடித்து கட்டி கொண்டு கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .  அனைத்து நாளேடுகளிலும் வெளிவரும் பிரபல அரசியல் தலைவர்களின் பேட்டிகளை படித்த போது தான் , இந்த கட்டுரையை வெகு நாள் கழித்து எழுத வேண்டும் என்று உந்தப்பட்டேன் . 1887   ஆம் ஆண்டு  கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணை கேரள பிரதேச பகுதியில் கட்டப்படிருந்தாலும்  , அந்த அணையின் மூலம் பயன் பெறுவது தமிழ்நாடு என்பது தான் இந்த பிரச்சனையின் மூலக்காரணம்.  இந்த அணை பலவீனமடைந்து விட்டது என்று சொல்லி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதும்  ,  அந்த அணை பலமானது என்று தான் தமிழக அரசியல்வாதிகள்  கூறுவதும் இந்த பிரச்சனையை அதிகரித்து உள்ளது.   திரு . வைகோ அவர்கள் இந்த பிரச்னையை குறித்து சங்கரன்கோவில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது  " பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணை உடையாது " என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதிபடுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்  ( நன்றி :  தினகரன்  , பக்கம் 15  , தேதி  12 - 12 - 2011 )
திரு தா . பாண்டியன்   , சிவகிரியில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில் , " 116  ஆண்டுகளே ஆன வலுவான நிலையில் உள்ளது அணை " என்று கூறியுள்ளார் , ( நன்றி :  தினகரன்  , பக்கம் 3  , தேதி  12 - 12 - 2011 )

எல்லாவற்றுக்கும் மேலாக திரு. திருமாவளவன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் " அணை பாதுகாப்பு அற்றது என்று வதந்தியை பரப்பும் கேரள அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் .


இது எல்லாம் நல்ல விடயங்கள் தானே என்று நினைக்க தான் தோன்றுகிறது .   ஆனால் இந்த தலைவர்களை பார்த்து நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது .

முதலாவது .... திரு . வைகோ அவர்களே  ,  பூகம்ப பகுதி 3 ல் வரும் முல்லை பெரியார் அணை 116  ஆண்டுகள் ஆகியும் உடையாது என கூறுகிறீர்களே  ,  ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம்ப பகுதி 2 ல் வந்தாலும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் என்று போராடினீர்கள் அல்லவா ...... அதன் அர்த்தம் என்ன ....?
திரு . திருமா ,  வதந்தியை பரப்பும் கேரள அரசை தண்டிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள்  ,  116  ஆண்டுகள் ஆன அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறும் நீங்கள் ,  " கூடங்குளம் பாதுகாப்பானது என்று பெரும் அறிவியல்லாளர் திரு . அப்துல் கலாம் சொன்ன கருத்தை ஏற்க்கவில்லை .     வதந்திக்கு விரோதமாக போராடும் நீங்கள் ஏன்  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக வதந்திகளை பரப்பும் திரு . உதயகுமார் அவர்களோடு கை கோர்த்தீர்கள் ..?

அப்பாவி மக்களை உங்கள் அரசியலுக்கும்  , அதி புத்திசாலிதனத்திற்கும் பலியாக்காதீர் என்பதே இந்த இந்தியனின் கோரிக்கை