Saturday 22 October 2011

அணு மின் நிலையங்கள் - சில கேள்விகள் - சில பதில்கள்


அணு மின் நிலையங்களை குறித்து செய்திகள் இப்பொழுது எங்கும் விவாதிக்கப்படுகிறது.   இது ஒரு நல்ல விஷயம் தான்.   விதண்டாவாதத்திற்கு சில பேர் சில கேள்விகளை கேட்கும் போது ,  உண்மையான பொது அக்கறையோடும் சில கேள்விகள் எழும்ப தான் செய்கிறது.   இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு  பதில்கள் சொல்லப்படாத பட்சத்தில் ,  கேள்விகள் எந்த விதமான உணர்சிகளோடு கேட்கப்பட்டதோ  அதே உணர்சிகளை மக்களிடம் தவறாக சேர்க்கவும் வாய்ப்புண்டு.    எனவே தான் இந்த பதிவுலத்தின் மிக முக்கியமான (  நான் மிகவும் மதிக்கிற )  ஒரு பதிவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ,  அதன் மூலம் அணு மின் நிலையங்களை குறித்து நாம் அறிந்து கொள்ளவும் இந்த இடுகையை இட முயற்சி மேற்கொண்டேன் .    
 
 
இந்த கேள்விகள் அனைத்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்து மாண்புமிகு பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளவையாக அந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.   ஆனால்  ஒரு சாதாரண  குடிமகனாக இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்க முற்பட்டுள்ளேன்.
 
கேள்வி :   When  Tsunami hit our Coast ?  ( எப்பொழுது சுனாமி நம்முடைய கடற்கரையை தாக்கும் ..? )
இந்த கேள்விக்கு சிறந்த பதில் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் .   ஆனால் அப்படி சுனாமி தாக்கினாலும் ,  அது கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் பாதிக்கமுடியாது என்பதற்கு இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் சுனாமி என்ற கருத்தின் கீழ் காணலாம்  ( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html )
 
கேள்வி :  How Will an Earthquake miss Kudankulam ? ( பூகம்பம் எப்படி கூடங்குளத்தை தாக்காதிருக்கும் .? )
இந்த கேள்விக்கும் இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் பூகம்பம் என்ற தலைப்பின் கீழ் காணலாம்.  (   http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html


கேள்வி :   Where will you Store your Radioactive Waste ?   &  How Long will you guard the Waste ?
இது ஒரு நல்ல கேள்வி .   பொதுவாக Radioactive Waste என்று வருகிற ப்ளுட்டோனியம் 239  மிக பத்திரமாக காரிய கொள்கலனில் (  காரியம் கதிர்வீச்சை வெளிவிடாது  என்று எங்கோ படித்த நியாபகம் வருகிறதா )  பாதுகாக்கப்பட்டு  , மிக சிறந்த Concrete கொள்கலனுக்குள் வைக்கப்பட்டு  பாதுகாக்கப்படும் .  அந்த Concrete கொள்கலனுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்..    இந்த வசதிகள் எல்லாம் அணு மின்  உலைகளுக்குள்  தான் செய்யப்பட்டிருக்கும் .   இது பொதுவான முறை .
 
இரண்டாவது கேள்விக்கு ,  தயவுசெய்து  இதே  வலைதளத்தில்  பதியப்பட்ட  எனது  பதிவான்  " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு "  என்ற கட்டுரையில்  காணலாமே ..  (  http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html )  
 
 
கேள்வி :  How  will You Cool the Nuclear Core ?   &  Where will you keep the hot Water after cooling the Core ?   ( எப்படி அணு எரிகோலை குளிர்விப்பீர்கள் ?  அப்படி குளிர்விக்கப்பட்ட பின் தண்ணீரை கடலில் தானே கலக்கவிடுவீர்கள் ? )
இந்த கேள்வி மிக மிக முக்கியமான கேள்வி .  அநேகர் இப்படி தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.   நேரடியாக கடல் நீர் அணு உலைகளுக்குள் செலுத்தப்பட்டு பின் நேரடியாக கடலுக்குள் விடப்படும் எனவும் அதனால் கதிரியக்கம் கடலில் கலந்து விடும் என்றும் கருதுகிறார்கள்.  இது ஒரு தவறான கருத்து.   கொஞ்சம் இதை விளக்கமாக காண்போமே ..
 
 
 
மேற்கண்ட படத்தை ( அணு உலைகள செயல்படும் முறை )   நன்கு ஒரு விசை பாருங்கள் .     மூன்று சுற்றுகள் ( Three Circuits )  தெரிகிறதா ..?   
 
முதல் சுற்று :  அணு பிளவு நடக்கும் உலைக்கும் நீராவி உருவாக்கும் எந்திரத்திற்கும் ( Primary Circuit is between Reactor Pressure vesel & Steam Generator ) .    இந்த சுற்றில் கடல் நீர் பயன்படுத்தப்படாது .  மாறாக  சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் தான் பயன்படுத்தப்படும் .  நமக்கு தெரியும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சிஸ் என்று சொல்லி.    ஆனால் இந்த முதல் சுற்றில் Pressurizer என்ற கருவி மிக அதிக அழுத்தத்தில் நீரை அழுத்துவதால் ,  முதல் சுற்றில் ( Primary Circuit )  நீரானது அணு மின் உலைக்குள் இருந்து வெப்பத்தை மாத்திரம் எடுத்து கொண்டு Steam Generator என்ற நீராவி உருவாக்கும் இயந்திரத்திற்கு வருகிறது..
 
இரண்டாம் சுற்று :   Steam Generator என்ற நீராவி இயந்திரத்தில் இருந்து Turbine என்ற விசையாழி வழியாக Condenser என்ற பகுதியை அடைந்து மறுபடி Steaam Generator யை அடைகிறது.   நன்கு கவனிக்கவும் முதல் சுற்றும் இரண்டாம் சுற்றும் ஒன்றுடன் ஓன்று கலவாது .  மறுபடி படம் பாருங்கள்.    இந்த இரண்டாம் சுற்றிலும் கடல் நீர் பயன்படுத்தபடாது .   இங்கும் நன்னீர்தான்.    இங்கு தான் நீராவி உற்பத்தி செய்யபடுகிறது.   இந்த இரண்டாம் சுற்றில் Pressurizer என்ற அழுத்த கருவி இல்லாததால் இங்கு நீர் 100 டிகிரி செல்சியஸ் அடைந்தவுடன் நீராவியாகிறது.  
 
இப்பொழுது உங்களுக்கு ஒரு நியாயமான கேள்வி வரலாம் ...  அதெப்படி இரண்டு சுற்றுகளும் ஒன்றோடு ஓன்று கலவாது என்று சொல்லுகிறீர்கள் .   எப்படி வெப்பம் இரண்டாம் சுற்றுக்கு மாற்றப்படும்  என்று .    அப்படி கேட்ப்பீர்கள் ஆனால் மிக சரியான கேள்வியை கேட்டீர்கள்.    வெப்பமானது முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு Heat Exchanging ( வெப்ப பரிமாற்றம் )  என்ற முறையில் தான் மாற்றப்படுகிறது.   இன்னும் புரியவில்லையா ..?   ஒரு சின்ன உதாரணம் சொல்லுகிறேன் .   நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது என்னுடைய சூடான பாலை ஆற்றுவதற்கு எனது அம்மா என்ன செய்வார்கள் தெரியுமா ..?   அந்த பாலை ஒரு பாத்திரத்தில் வைத்துகொண்டு அந்த பாத்திரத்தை வேறு தண்ணீரின் மேல் வைப்பார்கள்.   அப்பொழுது அந்த பாலின் வெப்பம் பரிமாற்றத்தின் மூலம் அந்த தண்ணீருக்கு மாற்றப்படும்  .
 
இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.   இரண்டு பொருட்களும் ஒன்றுடன் ஓன்று கலவாது ஆனால் ஒரு சுற்றில் உள்ள நீரின் வெப்பம் (  பாத்திரத்தின் பாலின் வெப்பம் )  இரண்டாம் சுற்றுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.   
 
இப்படி இருக்கும் போது முதல் சுற்றில் இருக்கும் கதிர்வீச்சு எப்படி இரண்டாம் சுற்று நீருக்கு பரவ முடியும் ?   யோசித்து பாருங்கள் 
 
 
சரி தொடர்ந்து கவனிப்போம் .   இப்போது இந்த நீராவி Turbine  எனப்படும் விசையாழியில்  மோதும் போது அதனுடன் இணைக்கப்படிருக்கும் Rotor என்ற சுழலி சுற்றப்படுவதால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.   சரி ... இந்த நீராவி Turbine ல் மோதும்போது என்ன ஆகும் என்று பார்த்தோமானால் ,  அந்த நீராவி குளிர்ந்து நீராய் மாறிவிடும் .  ( நம்முடைய பழைய காலத்து சமையல் அறையில் சாதம் பொங்கும்போது நீராவி வெளியேறும்.   அப்பொழுது நாம் அந்த பாத்திரத்தை மூடி கொண்டு மூடினால் ,  அந்த மூடியில் தண்ணீர் இருக்கும் .   அதே முறை தான் )  
 
மூன்றாம் சுற்று :    இந்த சுற்றில் தான் கடல் நீர் உள் வந்து Condenser என்ற பகுதி வரை வந்து செல்லுகிறது (  Condenser என்ற பகுதியில் குளிர்ந்த நீராவி அதாவது நீர் இருக்கும் )   இப்பொழுது படத்தை பாருங்கள் .  இந்த கடல் நீரும் இரண்டாம் சுற்றுடன் கலப்பதில்லை.  அப்படியெனில் ,  ஆமா  இந்த இடத்திலும் வெப்ப பரிமாற்றம் மாத்திரம் தான் நிகழும்.   அப்படியெனில் மிக குறைந்த வெப்பம் உள்ள கடல் நீர் தான் மறுபடி கடலுக்கு திரும்பும்.
 
இப்பொழுது கவனியுங்கள் ...   கடல் நீர் அணு உலைகளுக்குள் செல்லாது .   கடல் நீரில்  கதிரியக்கம் கிடையாது.    அதனால் கடல் நீரில் கதிரியக்கம் இருக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என நாம்  விளங்கி  கொள்ள  முடியும். 
 
 
இன்னும் சில கேள்விகள் அந்த பதிவில் கேட்கப்பட்டுள்ளது ..  அவற்றுக்கான பதிலை அடுத்த இடுகையில் இடுகிறேன் .   ஏன் எனில் இவை அனைத்தும் தொழில் நுட்ப சந்தேகங்கள் ,  அவைகள் அனைத்தும் மேலாண்மை சந்தேகங்கள் .   அதனால் இரண்டு பதிவுகளாக இட்டால் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறேன்.
 
மேற் கூறிய காரணங்களின் படி பார்க்கும் போது அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானது எனவும் அதினால் எந்த கதிரியக்க பாதிப்பும் கடல் வாழ் உயிரினங்களுக்கு நேராது எனவும் புலப்படுவதால் அணுமின் நிலையங்களை வரவேற்கும் நம்முடைய தயக்கங்களை அகற்றுவோம் ..    நன்றி

Thursday 20 October 2011

புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை


புகுஷிமா அணு உலைகளுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்ட வசமான நிகழ்வுகள் நாம் எல்லாரும் அறிந்ததே.   மிக கடும் பூகம்பத்தில் சிக்கி கொண்ட ஜப்பான் நாட்டில் அதை தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான சுனாமி தாக்குதல்களும் புகுஷிமா அணு உலைகளில்  பாதிப்பை ஏற்படுத்தியது.  உலகம் முழுவதும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த நிகழ்வு சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.   இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட துவங்கி உள்ளனர்.   பெரும்பாலானவர்களின் கேள்வி என்னவெனில் புகுஷிமாவை போன்ற விபத்து கூடங்குளத்தில் நிகழாது என்பதற்கு என்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதே.
இது ஒரு நியாயமான கேள்வி என்பதாலும் ,  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு முடிவு காணவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கட்டுரை எழுத முற்பட்டேன்.   

புகுஷிமாவில் என்ன நடந்தது?  :  2011 ம் வருடம் மார்ச் மாதம் 11 ம் தேதி ஜப்பான் நாட்டை 9  ரிக்டர் அளவிலான மிகப் பெரிய பூகம்பம் தாக்கியது.    பூகம்பத்தை உணர்ந்தவுடன் புகுஷிமாவின் அணு உலைகளில் பொருத்தப்பட்டிருந்த கட்டுபடுத்தும் கழிகள் ( Control Rods )  தானாகவே இறங்கி அனுப்பிலவின் தொடர் வினையை நிறுத்திவிட்டன.   ஆனாலும் சிதைவு வெப்பம் என அழைக்கப்படும் Decay heat யை குளிர்விப்பத்ர்க்கான மின்சார பம்புகளை இயக்குவதற்கான மின்சாரம் தடைபட்டு விட்டது ( பூகம்பத்தினால் ) .   
இந்த மாதிரி தருணங்களில் மின்சார பம்புகளை இயக்குவதற்காக டீஸல் ஜெனரேட்டர் இருக்கும்.   ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த டீஸல் ஜெனரேட்டர்  மற்றும் பாட்டரிகள் சுனாமியால் எழுந்த தண்ணீரினால் மூழ்கியதால் இயக்கமுடியாம்ல் போனது.   இந்த சூழ்நிலை காரணமாக Reactor Coolant pumps  செயல்படமுடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் அதி சூடு நிறைந்த Zircaloy  உலோகத்துடன் நீராவி இடைப்பட்டு ஹைட்ரஜென் உருவாக ஆரம்பித்தது.   இந்த  Hydrogen அதிகமாக சேர்ந்து அணு உலை கட்டிடத்தில் இருந்து வெளியேறிவிட்டது .   ( நாம் தொலைகாட்சியில் பார்த்தோமே ,  அது இது தான் ).  ஏற்கெனவே உள்ளே இருந்த கதிரியக்க துகள்களும் அதனுடன் சேர்ந்து வெளியேறிவிட்டது.  
இந்த சம்பவத்தில் இருந்து இந்த விபத்து நடப்பதற்க்கான காரணிகளை வகைபடுத்துவோமே .
1 .  பூகம்பம்
2    சுனாமி
3    டீஸல் ஜெனரேட்டர் செயல் இழப்பு
4   எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை இல்லை.
5   அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள் இல்லை .
6   அணு எரி கோல்கள் உருகினால் அவற்றை பரவாமல் பாதுகாக்கும் கருவி இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் எப்படி வேறுபட்டது ..?
பூகம்பம்  :  ஜப்பான் அடிக்கடி பூகம்பம் நடைபெறுகிற இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.   அங்கு 7  ரிக்டர் அளவிற்கு மேல் ஏற்ப்பட்டுள்ள பூகம்பத்தின் விபரங்களை நாம்  http://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Japan   காணலாம்.  


ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம் அபாய பகுதி 2  ( மிக அரிதாக பூகம்பம் நிகழும் பகுதி )  என்ற வரையறைக்குள் உள்ளது.  எனவே பூகம்ப அபாயம் கூடங்குளத்திற்கு இல்லை எனலாம் .  இந்தியாவின் பூகம்ப நிலைகளை கீழே காணலாம் .  

சுனாமி :   சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானில் இருந்து தான் தோன்றியது என்பதை நாம் அறியாமல் இருக்க மாட்டோம்.  துறைமுக அலை என பெயரிடப்பட்ட இந்த சுனாமி பல மீட்டர் உயரத்திற்கு புகுஷிமாவில் வந்தது.  என் இதே போல ஒரு சுனாமி கூடங்குளத்தில் வர முடியாது என்பது அநேகரின் கேள்வி .   இது ஒரு நியாயமான கேள்வி தான்.
சுனாமி போன்ற பெரிய ஆழி பேரலைகளை உருவாக்க கூடிய இடம் tsunamigenic fault  என்று அழைக்கபடுகிறது.   இந்த இடத்தில உருவாகும் சுனாமியின் உயரம் அது பயணம் செய்யும் தொலைவை பொறுத்து மாறுபடுகிறது.   தொலைவு குறைவாக இருந்தால் அலைகளின் உயரம் அதிகமாகவும் ,  தொலைவு அதிகமாக இருந்தால் அலைகளின் உயரம் குறைவாகவும் இருக்கும்.   ஜப்பானில் இந்த சுனாமி உருவான Fault புகுஷிமாவில் இருந்து 130 கிமீ.  அதனால் ஏற்பட்ட சுனாமியின் உயரம் அதிகம். 
ஆனால் ,  கூடங்குளம் பகுதியில் சுனாமி உருவாகும் Fault 1300  மற்றும் 1500  கிமீ தூரத்தில் தான் உள்ளது.   அதாவது அதனால் உருவாகும் சுனாமி அலைகளின் உயரம் அதிகபட்சம் 2  முதல் 3  மீட்டர் உயரம் தான் வரமுடியும்.   தகவலுக்கு ( http://www.tsunamisociety.org/272Jaiswal.pdf
அதனால் தான் 9  மீட்டர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற கருது ஏற்றுகொள்ள கூடியதே.
 டீஸல் ஜெனரேட்டர் செயல்   :   புகுஷிமாவின் டீஸல் ஜெனரேட்டர் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டு இருந்ததால் அந்த ஜெனரேட்டர் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது.  ஆனால் கூடங்குளம் டீஸல் ஜெனரேட்டர்  9 . 3  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் செயல் இழப்பு என்ற பேச்சு அர்த்தமற்றதாகி விடும். 
மாத்திரமல்ல கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ஒன்றுக்கு நான்கு டீஸல் ஜெனரேட்டர் கொண்டுள்ளபடியால் அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யபடுகிறது .  ( நன்றி :   Facts on KKNPP )
எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை  :   இது ஒரு முக்கியமான பாதுகாப்பு முறை.   புகுஷிமாவில் இந்த முறை இல்லை .  அப்படியே 4  டீஸல் ஜெனரேட்டர்களும் செயல் இழந்தாலும் Passive heat removal system என்ற அதி நவீன பாதுகாப்பு அமைப்பின் படி கூடங்குளம் அணுமின் நிலையங்கள் அணு உலைகளின் வெப்பத்தை குளிர்விக்கும் ஆற்றல் உள்ளவை .  அதனால் புகுஷிமாவில் ஏற்பட்டது போல Decay Heat யை குளிர செய்ய முடியாத நிலை ஏற்படாது என்பது திண்ணம்.
அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள்  ;    Hydrogen யை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் புகுஷிமாவின் அணு உலைகள் சேதத்திற்கு உள்ளானது என பார்த்தோம்.   அனால்  கூடங்குளம் அணுமின் நிலையங்களில் இந்த கருவிகள் ( Hydrogen recombiner )  ஏராளம் பொருத்தப்பட்டிருப்பதால் அவைகள் இந்த hydrogen உருவானாலும் அவற்றை நீராக மாற்றும் சக்தி கொண்டவை.
Core  Catcher :   கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முக்கியமான் பாதுகாப்பு அரண்களில் இதுவும் ஓன்று.   பொதுவாக அணு உலைகள் வெடிக்கும் என்ற கருத்துகள் தவறு.   மாறாக அவைகள் உருகிவிடும் என்ற கருத்துகளே சரி.   அப்படி எல்லா பாதுகாப்புகளும் செயல் இழந்து போனாலும் ,  உருகிய அணு எரி கோல்களை வெளியில் விடாமல் இந்த கொள்கலன் தனக்குள் வாங்கி கொள்ளும்.    இந்த செயல்பாடு புகுஷிமாவில் இல்லை என்பது குறிப்பிட தகுந்தது.
இப்படி பல பாதுகாப்பு அரண்களை கொண்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் புகுஷிமாவின் அணு உலைகளுடன் ஒப்பிட்டு பயப்படுவது தேவை அற்றது என்பது எனது கருத்து .  இந்திய அணு மின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் ( பல அடுக்கு ,  பல எண்ணிக்கைகள் )  நமது அணு மின் நிலையங்களை கட்டுவதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகிறது என்பது எனது கருத்து.    
இப்படி பல நவீன தொழில் நுடபங்களுடன் உருவாகி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த தேவையல்லாத வீணான வதந்திகளையும் ,  அச்சத்தையும் உதறி தள்ளி விட்டு பசுமையான மின்சாரத்தை நாம் வரவேற்கலாமே ....!
 உங்கள் கருத்துகளை பகிரலாமே
குறிப்புகள்  :   The Upside Down  , written by  Mr . Jha
                             Facts of  KKNPP
                             World wide Web

Tuesday 18 October 2011

கதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை

கதிரியக்கம் ( Radiation )  என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள்.   சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது ,  எல்லாரும் கதிரியக்கம் என்ற Radiation யை குறித்து மிகவும் பயந்து பேசினார்கள்.   என்னுடைய முறை வந்தபோது நான் பொதுவாக அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் .
 
கதிரியக்கம் ( Radiation )  என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் ?    அவர்கள் அளித்த பல பதில்களை பார்த்து நான் கொஞ்சம் வியந்துதான் போனேன்.  ஏன் எனில் ஒருவர் சொன்னார் Radiation என்பது விஷம் என்றார் ( அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்) .  இன்னும் ஒருவர் சொன்னார் Radiation என்பது ஒரு வாயு ( Gas ) , அது மக்களை கொல்லும் சக்தி படைத்தது என்று.    அன்று தீர்மானித்தேன் இந்த radiation என்ற கதிரியக்கத்தை குறித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று.   புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் கடினமான பகுதி என்றாலும் , எளிதில் விளங்ககூடிய அளவில் இந்த கட்டுரையை எழுத நான் யாசிக்கிறேன்
 
 
Radiation  அல்லது கதிரியக்கம் என்றால் என்ன ?
இயற்பியலின் படி கதிரியக்கம் என்பது ஒரு ஊடகம் அல்லது பரந்த வெளியாக செல்லும் ஆற்றல் அல்லது அலைகள் அல்லது சக்திமிகுந்த சிறு துகள்கள் என்று வரையறுக்கபடுகிறது.
 
இந்த கதிரியக்கம் அயனியாக்க  ( Ionizing )  மற்றும் அயனியாக்கம் அல்லாத ( Non Ionizin ) என்று இரு வகைப்படும்.
 
இதில் அயனியாக்க கதிரியக்கம் ( Ionizing  Radiation )  என்பதை குறித்த அச்சமே நிலவுவதால் அதை குறித்தே இந்த கட்டுரையில் எழுத அதிகம் கவனம் கொண்டுள்ளேன்.   இந்த வகையில் கீழ்க்கண்ட கதிரியக்கங்கள் வருகிறது...
1 .   ஆல்பா கதிர்கள்  ( Alpha Rays )
2     பீட்டா  கதிர்கள்  ( Beta Rays )
3     காமா கதிர்கள் ( Gamma Rays )
4     நியூட்ரான்  கதிர்கள் ( Neutraan Rays )
5     X  கதிர்கள்   ( X  Rays  )
6     காஸ்மிக் கதிர்கள் ( Cosmic Rays )
 
இந்த கதிர்கள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்ததால் மனுக்குலத்திற்கு தீங்கு விளைவிக்கவும் இவைகளால் முடியும் என்ற என் கருத்தை நண்பர்கள் ஏற்று கொண்டவுடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? 
அதனால் தான் சொல்லுகிறோம் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்று  .   
நான் அவர்களிடம் கேட்டேன் கதிர்வீச்சின் பிறப்பிடமே அணுமின் நிலையங்கள் தான் என்று நினைக்கிறீர்களா ?
உடனே கோரசாக பதில் வந்தது " ஆம் என்று "
 
இந்த கதிரியக்கங்கள் பெருமளவு இயற்கையாகவும் ,  கொஞ்சம் செயற்கையில் இருந்தும் மனிதனுக்கு கிடைக்கிறது.   என்ற என் பதிலுக்கு ஒரு சேர வியப்பும் ,  எதிர்ப்புகளும் எழும்பியதால் இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.
 
Radiation அல்லது கதிரியக்கம் என்பது  சிவேர்ட் ( Sievert ) என்ற அலகினால் அளக்கப்படுகிறது.   அதனுடைய பழைய அளவு ரெம் ( Rem ) என்ற அலகினால் அளக்கப்பட்டது.   இந்த அலகுகளின் மாற்றம் குறித்து கீழே காணுங்கள்
 
1  ரெம் (Rem)                     =   0 .01   சிவேர்ட்                   =      10  மில்லி சிவேர்ட்
1 எம்ரெம் (mrem )           =   0 .01  மில்லி  சிவேர்ட்   =      10   மைக்ரோ சிவேர்ட்
1  சிவேர்ட்                         =   100  ரெம்
1  மில்லி சிவேர்ட்        =   100  mrem                              =     0.1  ரெம்
1  மைக்ரோ சிவேர்ட் =  0.1  mrem
 (நன்றி :  http://en.wikipedia.org/wiki/Sievert )
 
மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு , அதாவது 81 % இயற்கையில் இருந்து பெறுகிறான்.   அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்க படுகிறது.   இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55 % ,   இயற்கையாக கடல் , மண்  , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15  சதவீதம் மற்றும்  இயற்கையாக மனிதன் உடலுக்குள் ( Tritium  , Carbon - 14  , மற்றும் பொட்டாசியம் - 40  )  11  சதவீதம் .  இது அநேகம் பேருக்கு ஆச்சரியமாக தான் இருக்கும் என்பதி சந்தேகம் இல்லை . 
 
 
 
மீதம் 19  சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான் .  அதாவது மருத்துவ சேவைகளினால் 15  சதவீதமும் ,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் ( டிவி , கம்ப்யூட்டர் , மற்றும் பல )  3  சதவீதமும்  , மீதம் 1  சதவீதம்  அணு மின் நிலையங்கள்  , ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது என்பது நமது எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது அல்லவா .?
 
 
இப்பொழுது யாரோ ஒருவர் கேட்கிறார்கள் மருத்துவ துரையின் மூலமாக கதிரியக்கம் நமக்கு கிடைக்குமா ..?  எப்படி இதை நம்ப முடியும் என்று ..?   நம்புங்கள் .. சில ஆதாரங்களை தருகிறேன் ..
மார்பக எக்ஸ்ரே    (  14   x   17   இன்ச் )                  =    15  mrem
பல் எக்ஸ்ரே  ( 3  இன்ச் சுற்றளவு )                      =    300 mrem
முதுகு தண்டு எக்ஸ்ரே ( 14   x   17   இன்ச் )     =    300 mrem
thyroid uptake study                                                             =   28000  mrem
Thyroid  Oblation                                                                  =   18000000  mrem
ஒரு நாளைக்கு நீங்கள் 20  சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280 mrem  /  day கதிரியக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றபொழுது அநேகரின் முகத்தில் ஈயாடவில்லை. 
 
ஒரு முறை 30000  அடி உயரத்தில் பறக்கும் ஒருவர் , தன் ஆயுள் காலம் முழுவதும் அணுமின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒரு தொழிலாளியை விட கதிரியக்கத்தை அதிகமாக பெறுகிறார் ( நன்றி  : The Upside Down , Book of Nuclear Power  , Page No : 148  , Written by . Mr  Jha )
 
நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் ,  அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன ( கொஞ்சம் http://www.ciol.com/Networking/News-Reports/Mobile-tower-radiation-fear-grips-Delhi/137567/0/ படியுங்களேன் )
 
முடிவுரை :   இன்னும் இவைகளை குறித்து எழுத வேண்டுமெனில் ஏராளம் இருக்கிறது  ,  ஆனாலும் 99  சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றபோது என் நண்பர்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைகளை அசைத்தார்கள்.  
 
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆக்கப்பூர்வமான் கேள்விகளை தொடுக்கலாமே ..   நாம் விவாதிப்போம் ...  நன்றி

 

Sunday 16 October 2011

அணுமின்சாரம் தேவையா ..? - ஒரு பார்வை


மின்சாரம் ஏன் தேவை :   ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும்.   தனிமனித வருமானம் வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படுகிறது.   வேலைவாய்ப்புகள் அநேக தொழிற்சாலைகள் மூலமாக பெறப்படுகிறது.   ஆனால் தொழிற்சாலைகள் பெருகவேண்டுமானால் அதற்கு மூலப் பொருளாக மின்சாரம் தேவைப்படுகிறது.

மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது .  
1 .  அனல் மின் நிலையங்கள்
2 .  நீர் மின்நிலையங்கள்
3 . காற்றாலைகள் .
4 . சூரிய ஒளி மின் ஆலைகள்
5 .  அணுமின் நிலையங்கள் .


இப்படி இத்தனை வழிகள் இருக்கும் போது அணுமின்சாரம் தற்பொழுது நாட்டிற்கு தேவையா என்பது தான் அநேகம் பேரின் வாதம்.   குழப்பம் என்று கூட சொல்லலாம் .   அதனால் இந்த வழிகளை பற்றி கொஞ்சம் எழுத வேண்டியது அவசியம் என கண்ட படியால் இந்த பதிவை எழுத் துணிந்தேன் .    நண்பர்கள் உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுவதால் நம் கருத்துகள் மேம்படும். 



1 .  அனல் மின் நிலையங்கள் :   நமது நாட்டின் அனல் மின் நிலையங்கள் தேசிய அனல் மின் நிர்வாகத்தால் அருவக்கப்பட்டு வருகின்றன.    ஜூன் 30 ,  2011  ன் படி 1 ,15 , 649 . 48  MWe  மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது .  இது கிட்டத்தட்ட தேசிய மின் தேவையில் 66  சதவீதமாகும்.

2011 - 2012 -  வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி தேவை 696  மில்லியன் டன் .  ஆனால் உள்நாட்டில் இருந்து 554 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   மீதி 114  மில்லியன் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பது தான் உண்மை  ( நன்றி :  http://www.goldenocean.no/?menu=2&id=175  )

இதனால் இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் தேவையான அளவு மின்னுற்பத்தி செய்யமுடியவில்லை எனபது தான் திண்ணம்.   இந்த பதிவு எழுதப்படும் போது அனல் மின் நிலையங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு தான் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று நிலக்கரித்துறை அமைச்சரின் கூற்றை நினைத்து பார்க்கிறேன்.

இந்நிலையில் 2040  வருடத்திற்குள் இந்தியாவின் மொத்த நிலக்கரியும் தீர்ந்துவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது .   தகவலுக்கு http://www.business-standard.com/india/storypage.php?autono=333749 

பெருகி வரும் மின் தேவைகள் ஒரு பக்கம் இருக்க , எப்படி வருங்காலத்தில் அனல் மின் நிலையங்கள் எதிர்பார்த்த மின்சாரத்தை கொடுக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வி தான்.    5 . 78 % சதவீத  CO2  ( மொத்த உலகத்தின் )   இந்தியாவில் இருந்து  வெளியிடப்படுகிறது .      ( தகவலுக்கு :  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_carbon_dioxide_emissions  )   அதனால்  சுற்று  சூழலுக்கு  கேடு    விளைவிக்கும் நச்சு புகையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாம் உள்ளோம் என்பது மறுக்க இயலாது.


2 . நீர் மின் நிலையங்கள் :   இன்யாவில் தற்பொழுது நீர் மின் நிலையங்களின் உருவாக்கு திறன் கிட்டத்தட்ட 30,920   Mwe .   நீர் மின்சாரங்கள் இருக்கும் இடங்களை கீழே பார்க்கலாம்



ஆனால் இந்த நீர்மின் நிலையங்களிலும் பெரும்பாலானவற்றில் மின்சாரம் சரிவர தயாரிக்க முடியவில்லை என்பது தான் உண்மை .  ஏன் என்றால் இவையும் இயற்கையை சார்ந்து ( மழையை ) இருக்கிறது.   உலகின் அதிக மலை பொழியும் பிரதேசம் என்று கருதப்படும் சிரபுஞ்சியில் கடந்த 5  வருடங்களாக மழை இல்லை என்றால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ..  தற்பொழுது 26  சதவீத மின்சாரம் நீர் மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது.



3 .  காற்றாலைகள் :   இது ஒரு தூய்மையான் மின் சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.     31  மார்ச் 2011  கணக்கின் படி இந்தியாவின் மொத்த காற்றாலைகளின் உற்பத்தி திறன் 14550  Mwe .  அதிலும் தமிழ்நாடு அதிகபட்சமாக 6007  Mwe  உற்பத்தி திறனை கொண்டுள்ளது .  இன்னும் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு கொண்டே இருக்கின்றன.
( நன்றி : http://en.wikipedia.org/wiki/Wind_power_in_India ))

ஆனால் ஏன் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு வருகிறது   மே ,  ஜூன் ,  ஜூலை ,  ஆகஸ்ட் , செப்டம்பர்  மாதங்களில் மாத்திரம்  WIND TURBINE சுழற்றுவதற்கு தேவையான காற்று வேகம் உள்ளது .  அதாவது  11 KM /H ல் இருந்து 19 KM / H  வரை உள்ளது .  மற்று தருணங்களில் மிகவும் குறைவாக காற்று வீசுவதால் தேவையான் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை .  ( தகவலுக்கு :  http://rangareddy.nic.in/profile-pdfs/91.pdf  ) .    இதற்க்கு அரசை குறை சொல்லுவதிலும் எந்த லாபமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.



4 .  சூரிய ஒளி மின் ஆலைகள் :    சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அனைத்து நாடுகளும் யோசிக்க தான் செய்கிறது .  ஏன் எனில் ,  இதில் தயாரிக்கப்படும் மின்சாரம் பசுமையானது .   இதற்க்கு எந்த மூலப் பொருளும் தேவை இல்லை.   மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின் கம்பங்கள் இல்லாத போது அந்த வீடுகளுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அற்புதமானது.

ஆனால் சில பிரதிகூலங்களும் உள்ளன.   இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகம்.   உலகின் மாசு காரணமாகவும் சூரியன் இல்லாத தருணங்களிலும் மின்சார உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.   தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிற அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை.   இந்தியாயவின் பெரிய சோலார் மின் உற்பத்தி 40 Mwe  ( Adani Bitta Solar Plant,குஜராத் ) என்பது ஆச்சரியம் தானே.  


5 .  அணு மின் நிலையங்கள் :   இப்பொழுது தான் இந்தியா இந்த துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்று நாம் நினைக்க கூடாது.  இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய அணுசக்தி தந்தை என்று அழைக்கப்படுகிற ஹோமி பாபா அவர்களின் கனவுகளோடு அணு சக்தி திட்டங்கள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 20  அணு மின் நிலையங்கள் மூலம் 4780  Mwe மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் அணுமின்சாரத்தின் அளவு வெறும் 3  சதவீதம் என்பது தான் அநேகரின் கேள்விக்கு காரணம்.  ஏன் இந்த அணு மின்சாரம் நமக்கு தேவை.?   இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை.   மேற்குறிப்பட்ட எல்லா மின்சார வழிகளும் நிரந்தரமான ஒரு மின்சாரத்தை வகை செய்யாத போது அணு மின் நிலையங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் , எல்லா காலங்களிலும் மின்சாரத்தை கொடுக்கும் என்ற நிலை நாம் அதை தேட செய்கிறது.  

உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் எல்லாம் அணு மின்சாரத்தை பெரும் அளவில் பயன்படுத்துகிறது என்பது தான் உண்மை .   அமெரிக்காவில்    104  அணு உலைகள் மூலம் 101119 Mwe  மின்சாரமும் ,  பிரான்ஸ் 63473  Mwe  மின்சாரமும் ,  ஜப்பான் 48900  Mwe  மின்சாரமும் அணுமின் நிலையங்களில் இருந்து பெறுகின்றன.   அப்படியெனில் நாம்  மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று தான் அர்த்தம்.



இந்தியா தன்னுடைய அணுமின்சார தேவையை 2050 ஆவது வருடத்தில் மொத்த மின்தேவையில் 50  சதவீதமாக உயர்த்த திட்டம் கொண்டுள்ளது .   அதற்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாமா என்பது ஏன் பதிவுலக நண்பர்கள் பலரின் கேள்வி.   நான் மறுபடியும் உங்களுக்கு சொல்லுகிறேன் " முதாலவது பாதுகாப்பு ,  பிறகு உற்பத்தி "    என்ற கொள்கையை தான் இந்திய அணு சக்தி துறை பின்பற்று வருகிறது.  அதனால் தான் கடந்த 50  வருடங்களாக அணு மின் திட்டங்களை நிறைவேன்றி வருகிறோம் என்ற அணு சக்தி ஆணையத்தின் கூற்றை நாம் புறம் தள்ள முடியவில்லை. 


அணு மின் நிலையங்களில் இருந்து சுற்று சூழலை தடுக்கும் எந்த நச்சு புகையும் வெளியிடப்படாது என்பது கூடுத தகவல் .   பசுமையின் திட்டமாகிய அணு மின் திட்டங்களை குறித்த அச்சங்கள் விளக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவனின் நோக்கம் கூட.   24  மணி நேரமும் ,  எந்த காலத்திலும் மின்சாரத்தை கொடுக்கும் அணு மின் நிலையங்களை நாம் ஏன் வரவேற்க கூடாது ?




Saturday 15 October 2011

அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை


அணுக்கழிவு என்றால் என்ன அதின் மேலாண்மை எப்படிப்பட்டது என்று பதிவுலகின் பல நண்பர்கள் கேள்வி எழுப்பியதால் இந்த கட்டுரையை எழுத முற்ப்பட்டேன்.  மிகவும் தெளிவாக விளங்கும்படி எழுதவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.  அப்படி ஏதாவது உங்களுக்கு விளங்கவில்லை எனில் தயை கூர்ந்து கேள்விகளை /  கருத்துகளை எழுப்பும்படி வேண்டுகிறேன்.  இதை ஒரு ஆரோக்கியமான் விவாதமாக காண்போம்.
 
அணுக்கழிவு :  அநேகமாக எல்லா அணுமின் நிலையங்களும் யுரேனியம் என்ற தனிமத்தை தான் எரிபொருளாக கொண்டுள்ளது.  தோரியம் என்று இன்னொரு தனிமம் இருந்தாலும் ( நமது கடற்கரையில் கருப்பு கலரில் காணப்படும் மண் )  அதனுடைய பிளவுபடும் வேகம் குறைவாக இருப்பதால் தோரியத்தை விட யுரேனியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.   யுரேனியம் 238  என்ற  யுரேனியாத்தின்  Isotope யை ஒரு Neutron  கொண்டு பிளக்கும் போது யுரேனியம் 238 ( U238 ) சிதைவடைந்து  U239  ஆக மாறுகிறது.   தொடர்ந்து U239  சிதைவடைந்து Np -239 என்ற இடைப்பட்ட எரிபொருளாக மாறி பின் சிதைவடைந்து PU -239  ( ப்ளுட்டோனியம் 239 ) ஆக மாறுகிறது.
 
இந்த ப்ளுட்டோனியம் 239  தான் அணுக்கழிவு என்று மக்களால் அழைக்கப்படுகிறது. 
 
அணுக்கழிவு மேலாண்மை :  இப்படி கிடைக்கும் அணுக்கழிவை எப்படி பாதுகாப்பது என்பது தான் அணுக்கழிவு மேலாண்மை என அழைக்கப்படுகிறது.  இதற்காக அணுமின் நிலையங்களில் Waste  Management  என்று ஒரு பெரிய விஞ்ஞானிகள் குழு இருக்கும்.  இந்த ப்ளுட்டோனியம் 239  பெரும்பாலும் நல்ல காரீய கொள்கலனுக்குள் ( காரீயம் கதிர்வீச்சை வெளிவிடாது என எங்கோ படித்த நியாபகம் வருகிறது அல்லவா )  சேமிக்கப்பட்டு மிகப்பெரிய Concrete  கொள்கலனுக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.    1 கிலோ எரிபொருளை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 10 கிராம் PU239  கிடைக்கும். 
 
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்கின்றனர்.  ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இதை மறுசுழற்சி செய்யாமல் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ளனர்.   ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
 
இந்தியாவின் அணுசக்தி திட்டம் :   இந்தியா  தற்பொழுது  யுரேனியம்  பயன்படுத்தி அணுமின்சாரத்தை ( 1st  Stage ) தயாரிக்கிறது.   நமது  நாட்டில்   செறிவூட்டப்பட்ட  யுரேனியம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது அவை மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
 
ஆனால் இந்தியாவின் 2 ம் அணுசக்தி நிலை மிக அற்புதமானது.   ஆம் 1st  stage  அணு மின் நிலையங்களில் மீந்திருக்கும் PU239  மற்றும் நமது நாட்டில் மிக வளமாக கிடைக்கும் தோரியம் ( கிட்டத்தட்ட 300000 டன் ,  உலகில் 3 ல் ஒரு பங்கு )  இரண்டையும் எரிபொருளாக பயன்படுத்தும்.  இது ஆச்சரியம் தானே.   இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவே தயாரித்து அதை TEST REACTORS செய்து பயன்படுத்தியும் பார்த்துவிட்டது என்பது தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.    பெரிய அண்ணாச்சி அமெரிக்கா அதனால் தான் 123  உடன்பாட்டில் " மறு சுழற்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் " என சொல்லுகிறது.  ஆனால் இந்தியா அதற்காக போராடுகிறது என்பது நாம் அறிந்த விடயம்.  
 
இந்த 2nd stage  அணு மின்சாரம் பயன்பாட்டிற்கு வரும்போது முதல் படியில் கழிவு என்று எப்படி இருக்க முடியும்..?   மாத்திரமல்ல இப்பொழுது உள்ள NSG ( Nuclear  Supplier  Group ) பதிலாக இந்தியாவே ஒரு குழுமத்தை ஆரம்பித்து தோரிய அணு உலைகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யமுடியும்.   இது எப்படி வளர்ந்த நாடுகளால் பொறுக்க முடியும்.  ஓகே.  இது இன்னொரு பெரிய topic .  நீங்கள் இப்பொழுது கேட்கலாம் .   அப்படியானால் 2nd  stage  அணுமின் நிலையங்களில் கழிவு /  spend fuel  கிடையாதா ? என்று 
 
 
உண்டு ..  அந்த இரண்டாவது நிலை அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் PU239  + TH232  இவற்றில் இருந்து கழிவாக U233  கிடைக்கும்.  ஆஹா .. உங்களுக்கு நம்ப முடிகிறதா...?  இந்த U233  எரிபொருளாக AHWR  என்ற Advanced Heavy  Water  Reactor ல் பயன்படுத்தப்படும்.   இந்த அனுமின்சக்தியில் கிடைக்கும் கழிவாக PU239  மறுபடியும் கிடைக்கும்.
 
இப்பொழுது உங்களின் ஊகத்திற்கே விடுகிறேன் .   அணுக்கழிவு மேலாண்மையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை..    இந்த காரியங்கள் நடைபெறும் போது இந்தியா உலகில் யாரிடமும் கை ஏந்தாத பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடாக மாறும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.  இந்தியா உலகுக்கே முன்னோடியாய் மாறப்போவதிலும் எனக்கு பெருமை தான்.   
 
நன்றி :  THE UPSIDE DOWN BOOK OF NUCLEAR POWER Written by Mr  Saurav Jha   ( Harper collins publishers India )