Tuesday 31 January 2012

திட்டமிட்ட வன்முறையா ...? - கூடங்குளம் பரபரப்பு ..!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவினருடன் நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்திய குழுவினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் .  இந்த சூழலில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இந்து முன்னணியினர்  மற்றும் போராட்ட குழுவினர் மோதி கொண்ட காட்சிகள் பரபரப்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின .   தொலைக்காட்சியின் மூலம் கிடைத்த தகவல்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் , திட்டமிட்ட சில செயல்கள் திரை மறைவில் நடந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது ...



பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளுவதற்காக திரு,. புஸ்பராயன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது காரில் வந்துள்ளார் .  அவருடன் கூட இடிந்தகரையில் இருந்து 20 பெண்களும் மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்கள் .  ஏற்கெனவே முன் அனுமதியோடு மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக காத்திருந்த இந்து முன்னணியினர் மற்றும் போராட்ட குழு பெண்கள் காரசாரமாக பேசி கொண்ட விவகாரம் அடி தடியில் முடிவுற்றது .   இந்த சூழலில் வன்முறையில் ஈடுபட்டதாக சொல்லி இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுளார்கள் .  இது தான் நடந்த விவகாரம் .  இப்பொழுது எனது கீழ்க்கண்ட கேள்விகளை தொகுத்து பாருங்கள் .



1 .  இந்த 20  பெண்களும் ஏன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் ...?  அதுவும் முன் அனுமதி இல்லாமல் ...?  31 ம் தேதி பேச்சு வார்த்தை நடக்கிறது என்று ஒரு மாதத்திற்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்ட படியினால்  ,  முன் அனுமதி வாங்குவதற்கு தேவையான கால அவகாசம் இருந்ததே ...?  அதை ஏன் செய்யவில்லை ...?  செய்தால் தேவையான பாதுகாப்பு போட்டு விடுவாகள் என்ற பயமா ...?

2 .  மத்திய குழு நாங்கள் அமைத்த குழுவிடம் பேசவில்லை எனில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரு .  உதயகுமார் நேற்று வரை சொன்னார்  , இன்று எப்படி 20 பெண்களை மத்திய குழுவிடம் மனு கொடுக்க அனுப்பினார் ...?


 3 .  போராட்ட பெண்களும் , ஒரு ஜோல்னா பை வைத்திருந்தவரும் உடனடியாக கோஷம் போட்டதை பார்த்தால் ,  இவர்கள் தயாராய் தான் வந்திருப்பார்கள் போல அல்லவா தோன்றுகிறது ...

கலவரம் செய்தது இந்து முன்னணியாய்  இருப்பின்  , அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .  ஆனால் அதே நேரத்தில் பேச்சு வார்த்தையை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது திரை மறைவு வேலைகளை செய்து மக்கள் மத்தியில் சமாதானத்தை கெடுக்கிறார்களோ  அவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் ஆசை

Monday 30 January 2012

பாரத ரத்னாவுக்கு சச்சின் தெண்டுல்கர் தகுதியானவரா ? - ஒரு பார்வை

சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில மாதங்களாக பலரினால் எழுப்பப்பட்டு வந்தது .  இந்த நிலையில் இந்த விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்றது விமரிசனங்கள் எழுந்ததும் நமக்கு தெரியும் .  ஆனால் உண்மையில் சச்சின் இந்த பெரிய விருதுக்கு தகுதியானவரா என்பதை சிந்தித்து பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு எழுதப்பட காரணம் .


லிட்டில் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் தனது 16 வது வயதில் முதல் முறையாக Internation cricket ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் .  அன்றில் இருந்து இன்று வரை அவர் கிரிக்கெட்டில் அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் நெடிய பயணம் சாதனையாகவே இருக்கிறது .  இது வரை 99 சதங்களை அடித்துள்ள அவர் முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் படைத்தவர் .
மாத்திரமல்ல ... பல விருதுகளுக்கும் இவர் சொந்தகாரர் என்பதயும் நாம் குறிப்பிட்டாக வேண்டும் .  ராஜீவ் காந்தி கேல் ரத்னா ,  அர்ஜுனா  , பத்ம பூசன் ,  பத்ம விபூசன் போன்ற விருதுகள் இவரின் பெருமையை எடுத்து சொல்லும் .  அப்படியெனில் இவருக்கு பாரத ரத்னா தகுதியானது தான் என்று நினைக்க தோன்றுகிறது ....... சரி ... ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு பாரத ரத்னா குறித்கு கொஞ்சம் நாம் பார்ப்போம் .


இந்திய குடியரசின் மிக பெரிய விருதான் பாரத ரத்னா 1954 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .   நாட்டிற்காக செய்த மிகப் பெரிய சேவையை மதித்து இந்த விருது வழங்கப்படுகிறது .   அன்றில் இருந்து இன்று வரை 41 நபர்கள் இந்த விருதை பெற்று இருக்கிறார்கள் .  மேலும் தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Bharat_Ratna .   இந்த சூழலில் தான் விளையாட்டு துறைக்கும் இந்த விருது வழங்கப்படலாம் என்று மாற்றம் கொண்டு வரப்பட்டது .



 இங்கு தான் இடிக்கிறது .....  நாட்டிற்காக செய்த மிகபெரிய சேவைக்கு அளிக்கப்படும் விருதை உண்மையில் சச்சினால் பெறமுடியுமா ...?  சில காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம் என்று தான் நினைக்கிறேன் .

 முதலாவது  சச்சின் தெண்டுல்கர் நாட்டிற்காக விளையாடவில்லை என்பது தான் உண்மை .   அவர் BCCI எனப்படும் ஒரு கிளப் அணிக்காக தான் விளையாடுகிறார் .   இந்த BCCI ஒரு அரசு துறை என்று நினைத்தால் ஏமாந்து தான் போவோம் .  இது முழுவதும் ஒரு தனியார் கிளப் .  தமிழ்நாடு சொசைட்டி விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது .   கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அரசால் வரிவிலக்கு பெற்ற இந்த நிறுவனம் IPL போன்ற போட்டிகளை நடத்தை கல்லா கட்டி கொண்டது நாம் அறிந்தது தான் .  இப்படி நாட்டிற்காக விளையாடாத ஒரு நபருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்க முடியும் ...?


 நீங்கள் கேட்கலாம் ... சச்சின் தெண்டுல்கருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிட்டவில்லை என்று சொல்லி ......   சில உதாரணங்களை  தருகிறேன்  பாருங்கள் .   முதல் முதலாக 1998 ம வருடம் காமன் வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட போது  சச்சின் டொராண்டோவில் நடைபெற்ற விளையாட்டிற்கு அனுப்பபட்டார் . அதற்க்கு சொல்லப்பட்ட காரணங்கள் அபத்தமானவைகள் .  தகவலுக்கு : http://indiatoday.intoday.in/story/comedy-of-errors--cricket-at-the-1998-commonwealth-games/1/103765.html

சரி முதன் முதலாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட போது BCCI நேரடியாக் சொல்லிவிட்டது இந்திய  கிரிக்கெட் அணி கலந்து கொள்ளாது என்று சொல்லி .  தகவலுக்கு : http://cricketnext.in.com/news/no-indian-cricket-teams-in-asian-games/48725-13.html 


சரி ... இதில் சச்சினின் பங்கு என்ன ....?  நாட்டிற்காக விளையாட வாய்ப்பு கிடைத்த போது சச்சினின் பங்கும் , அவரின் பங்களிப்பும் என்ன ...?  ஒன்றுமில்லை ... BCCI என்ன சொன்னதோ ... அதன் படி அவர் நடந்து கொண்டார் .  ஏன் எனில் , சச்சின் BCCI ன் ஆட்டக்காரர் தானே தவிர ,  இந்தியாவின் ஆட்டக்காரர் அல்ல  எனபது தான் உண்மை .


சரி .... கிரிகெட் வளர்ச்சியில் இவரின் பங்கு என்ன என்று பார்த்தோம் என்றால் .... தான் உண்டு ... தன் வேலை உண்டு என்று தான் இருப்பவர் .  உண்மையில் விளையாட்டிற்கு இவர் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் எனில் கபில்தேவ் முதன்முதலில் ICL ஆரம்பித்த போது அவருக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும் .   ஆனால் BCCI யின் சம்பளம் வாங்கும் உண்மையான ஆட்டக்காரர் என்பதால் IPL போட்டிகளில் விளையாடி ICL யை நசுக்கிய பெருமைக்கும் ஓரளவு சொந்தக்காரர் .

மேற்கண்ட காரணங்களை பார்க்கும் போது சச்சின் தேசத்திற்காகவும் ,  விளையாட்டிற்கும் எதுவும் செய்யவில்லை  ( பாரத ரத்னா பெருமளவுக்கு )  என்று தான் நினைக்க தோன்றுகிறது .   சச்சின் தெண்டுல்கர் எளிமையான  , மிகப்பெரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதை நான் ஒத்து கொள்ளும் அதே நேரத்தில் பாரத ரத்னா அம்பேத்கார்  , பாரத ரத்னா MGR போன்றவர்களுடன் ஒப்பிட என மனம் துணியவில்லை ......
  


Saturday 28 January 2012

கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு



கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்று பல நண்பர்கள் நேரிலும் , பதிவுலகத்திலும் கடந்த சில நாட்களாக கேட்க ஆரம்பித்தனர் .  ஒரு நண்பர் ஒரு படி மேலே போய் , அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வு பாதிக்கப்படும் என்பதினால் தான் மீனவ சமுதாயமே போராடுகிறது என்ற பொழுது நான் ஆச்சரியப்பட்டு போனேன் .  அதன் விளைவு தான் இந்த பதிவு எழுத முனைந்தது .
 
 
 முதலாவது என்னிடம் அநேகர் கேட்ட கேள்வி என்னவெனில் , " அணுமின் நிலையத்தின் கழிவுகள் / கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்படுவதால் கடலில் உள்ள மீன்கள் செத்து போய் விடும் என்று சொல்லுகிறார்கள் .  அது உண்மையா ? " என்பது தான்.
 

இந்த கேள்வி அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை குறித்து அறியாத நண்பர்கள் கேட்பதினால் , நாம் இதை குறித்து எழுதுவது / சொல்லுவது அவசியம் எனக் கண்டேன் .    அணுமின் நிலையத்தின் மூன்றாம் சுற்றின் தண்ணீர் ( அதாவது அணு உலைக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத சுற்று ) கடலில் கலப்பதால் , எந்த கதிர்வீச்சும் கடலில் சேரமுடியாது .  இதை குறித்து நான் ஏற்கெனவே " அணுமின் நிலையங்கள் சில கேள்விகள் சில பதில்கள் " என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன் .  தகவலுக்கு : http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html கொஞ்சம் படியுங்கள் .
 
 
கதீர்வீச்சு கடலில் கலக்க வாய்ப்பிலாததால் கடல் சார் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட முடியும் ?  மாத்திரமல்ல .   பொதுவாக மீனவ மக்கள் அதிகமாக  இருக்கும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை 22 - 28 டிகிரி செல்சியஸ் . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Indian_Ocean . பொதுவாக அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கடல் நீர் 4 - 6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமுடையதாக இருக்கும் . ஆனால் அதுவும் இந்த மகா சமுத்திரத்தில் கலக்கும் போது கடலில் வெப்பநிலை உயர்வு அதிகபட்சம் 1 அல்லது 2 டிகிரி தான் இருக்கும் . அப்படி வெப்பநிலை சிறிது உயர்ந்து வெதுவெதுப்பு உண்டாகும் போது மீன்கள் இனவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் . இது தான் உண்மை,.



ஒருவேளை நான் இப்படி எழுதுவது சந்தேகத்தை கொடுக்கும் என்பதினால் , அணுமின் நிலையங்கள் அமைந்திருக்கும் மற்ற நாடுகளில் மீன் பிடிக்கும் தொழிலை குறித்து ஆராய முனைந்தேன் .   மற்ற நாடுகள் எல்லாம் கொஞ்சம் நிலம் , கொஞ்சம் கடல் என்று இருப்பதால் ,  முழுவதும் கடல் சூழ்ந்த நாட்டை குறித்து ஆராய்ந்தால் என்ன என்று நினைத்து பார்த்தேன் .  ஜப்பானை தவீர வேறு ஒன்றையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை .  என்ன ஜப்பான் ஒரு நல்ல உதாரணம் தானே .
 
 
 ஜப்பான் - கிட்டத்தட்ட 54  அணுமின் நிலையங்கள் இருக்கிறது . அனைத்தும் கடற்கரையில் தான் இருக்கிறது .  ஜப்பான் அணுமின் நிலையங்கள் எப்படி அமைந்துள்ளது என்பதை கொஞ்சம் பாருங்கள் 
 
 ( Source:http://energybusinessdaily.com/wp-content/uploads/2011/03/japan_nuclear_plants_locations.gif )


Tomari :   இந்த பகுதியில் ஜப்பான் 3 அணுமின் நிலையங்களை அமைத்துள்ளது   ( 2 X  579 MWe  and  1 X 912 MWe ).  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Tomari_Nuclear_Power_Plant .   சரி .  இந்த பகுதியில் மீன் பிடி தொழில் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்ற உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுவதை விட  கொஞ்சம் இந்த youtube video வை பாருங்கள் . http://www.youtube.com/watch?v=H7cGCXct8fc 
 
Onagawa :  இந்த பகுதியிலும் ஜப்பான் 3 அணுமின் நிலையங்களை அமைத்துள்ளது  ( 1 X 524 MWe and 2 X 825 MWe ).  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Onagawa_Nuclear_Power_Plant .   இந்த பகுதியில் தான் Saury எனப்படும் மீன்கள் விற்கப்படும் ஜப்பானின் மிகப்பெரிய சந்தை இருக்கிறது .  மேலும் தகவலுக்கு : http://www.houseofjapan.com/local/onagawa-fish-market-auctions .
 
 
என்ன நான் சொல்லுவது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா ...?   இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு நான் தருகிறேன் .  உலகின் அதிக மீன் கிடைக்கும் ( 3 வது இடம் ) இடமாக ஜப்பான்  உள்ளது .   அட அப்படியா ....  ஆமாம் ...தகவலுக்கு : http://www.nationsencyclopedia.com/Asia-and-Oceania/Japan-FISHING.html 

நண்பர்களே .., நான் எழுதியுள்ள அனைத்தும் ஆதாரங்களுடன் தந்திருக்கிறேன் .   நான்கு பக்கமும் கடல் சூழ்ந்துள்ள ஜப்பான் 54 அணுமின் நிலையங்களை கொண்டு இருக்கிறது ஆனால் மீன் வளத்தில் உலகில் மொன்றாவது இடத்தில இருக்கும் போது ,  அதி நவீன கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வு பாதிக்கப்படும் என்ற வாதத்தை நாம் எப்படி ஏற்று கொள்ளமுடியும் ...?  என்பது தான் இந்த இந்தியனின் கேள்வி .



எனவே ... சுற்று சூழலை பாதிக்காத அணுமின் நிலையத்தை வரவேற்ப்பதில் நமக்கிருக்கும் தயக்கத்தை தூர எறிந்து விட்டு , நமது நண்பர்களிடமும் , மீனவ சமுதாயத்திடம் சொல்லுவோம் உண்மையை .... ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்ப்போம் .
 
 

Tuesday 24 January 2012

மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்

கடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது  ( கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில்  கூட )  .  இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .  சில தினங்களுக்கு முன்பு இந்த மின்சார சேமிப்பை குறித்து எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் , இந்த கட்டுரை எழுதலாம் என முற்ப்பட்டேன் . 


மின்சாரம் பொதுவாக யூனிட் என்ற அளவுகளில் நாம் அறிந்திருக்கிறோம் .  அந்த யூனிட் அளவுகளுக்கு தான் நாம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம் . எனவே யூனிட் என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ளுவோம் .  மின்சாரத்தை நாம் WATTS ( பல்புகளில் பார்ப்போமே ) என்ற அளவுகளில் கணக்கிடுகிறோம் .   ஒரு மணி நேரத்தில் 1000  வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அதுவே ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது .  இதை ஒரு கிலோ வாட் என்றும் அழைக்கலாம் .  


சரி இப்பொழுது கவனிப்போம் .  குண்டு பல்புகள் குறைந்தது 40W , 60W , 100 W என்ற அளவுகளில் இருக்கிறது என்று வைத்து கொள்ளுவோம் .  நீங்கள் 40W பல்பு ஒன்றை 25   மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 40 x 25 = 1000 ).  ஆனால் அதே நேரம் 18 W CFL பல்பு உபயோகப் படுத்தினால் கிட்டத்தட்ட 55  மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 55 .5 x  18  =  1000 ). . எனவே குண்டு பல்புகளை நாம் மாற்றினால் நாம் மின்சாரம் சேமிக்கலாம் .  இந்த சேமிப்பு இருந்தால் போதுமே , அணுமின் நிலயங்கள் எதற்கு என்பது தான் எனது நண்பர்களின் வாதம் .  


சரி அப்படியானால் நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களை ஏன் நீங்கள் நினைத்து பார்க்கவில்லை என்று கேட்டேன் .  அவர்களுக்கு விளங்கவில்லை .  நமது வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு ஆகும் மின்சார செலவை கணக்கிட ஆரம்பித்தேன் .  சில உங்கள் பார்வைக்கும் ...



Appliances

Watts
Electric Heater
-
5000
Refrigerator    - 20 Cu Ft
-
800
Freezer  - 20 Cu Ft
-
550
Well Pump ½ HP
-
1000
Well Pump 1HP
-
2000
Microwave Oven 800W
-
1200
Microwave Oven 1000W
-
1500
Coffee Maker
-
900
Toaster
-
900
Computer
-
250
TV - 32" Color
-
170
Stereo System
-
140
Clothes Iron
-
1100
Washing Machine
-
1000
Electric Clothes Dryer
-
6000
Hair Dryer
-
1600
Air Conditioning 1 Ton
-
2000
Air Conditioning 2 Ton
-
3000
Air Conditioning 3 Ton
-
4500
Window A/C
-
2000
Ceiling Fan
-
100
Vacuum Cleaner
-
780
Central Vacuum
-
1750


இப்பொழுது  சொல்லுங்கள் , நமது தேவை எவ்வளவு என்று ..?  யாரும் பதில் சொல்லவில்லை . நாம் சேமித்தாலும் நமது தேவையை எட்டமுடியாத தொலைவில் உள்ளோம் என்று சொன்ன போது கொஞ்சம் புரியாமல் விழித்தார்கள் .  நான் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன் .


இந்தியாவில் சராசரி தனிமனித பயன்பாடு 800 Kwh அதாவது 800 யூனிட் ஒரு ஆண்டிற்கு . ஆனால் அமெரிக்காவில் 5000 யூனிட்டும் ,  ஐரோப்பிய நாடுகளில் தனி மனித பயன்பாடு சராசரியாக 10000 யூனிட்டும் உள்ளது .  உலக அளவில் சராசரியாக தனிமனித பயன்பாடு கிட்டத்தட்ட 3000 யூனிட் .   இந்தியா அந்த 3000 யூனிட் சராசரி பயன்பாட்டை அடைய வேண்டும் எனில் 500 GWe மின்சாரம் தேவை . அதாவது 500000 MWe மின்சாரம் தேவை .  ஆனால் தற்பொழுது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களின் அளவும் 182 GWe மின்சாரம் மட்டுமே . அதாவது 182000 MWe மின்சாரம் மட்டுமே .  இன்னும் நமது தேவை கிட்டத்தட்ட 150  சதவீதம் அதிகம் என்ற பொழுது ஒரு திகைப்பு அவர்களுக்கு ஏற்ப்பட்டது .

உடனே கேட்டார்கள் ... அப்படியெனில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்று ...  அவர்கள் கேள்வியில் நியாயம் உள்ளது .  நமது தேவையை இன்னும் அதிகம் சந்திக்கலாம் . 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுவதால் அணுமின் நிலையங்கள் நிறைந்த பலனை கொடுக்கும் என்ற பொழுது எப்படி என்ற கேள்வி தான் மேலோங்கி நின்றது .


சரி ... விளக்குவோம் என்று ஆரம்பித்தேன் .  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அளவு 1000 MWe என்பது நமக்கு தெரியும் .  1 MWe என்றால் 1000 கிலோ வாட் / மணி  அதாவது ஆயிரம் யூனிட் .  ஒரு மணி நேரத்தில் 1000 MWe என்றால் 10 லட்சம் யூனிட் ( அதாவது 1000 x 1000 ).  அப்படியெனில் 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 240 லட்சம் ( அதாவது 24000000 யூனிட் )  யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வல்லமை கொண்டது .  அதாவது ஒருமாதத்தில் 72 கோடி யூனிட் ( 720000000 ) மின்சாரம் தயாரிக்க முடியும் .  இப்பொழுது புரிகிறதா .... வளரும் இந்திய மின் தேவைக்கு அணுமின் நிலையங்களின் பங்கு என்றபொழுது .... அனைவரும் ஒருமித்து சொன்ன பதில் ஆம் என்பது ......


மின்சாரத்தை சேமிப்போம்  ,  அணுமின் நிலையங்களை நாம் வரவேற்ப்போம் .  எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்பது இந்த இந்தியனின் கோரிக்கை .

Monday 23 January 2012

நார்வேயில் இப்படி ஒரு சட்டமா ...? ஒரு அதிர்ச்சி தகவல்

நார்வே என்றவுடன் நமது நினைவுக்கு வருவது " நோபல் பரிசு " தான் .  அமைதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பது பெரும்பாலோனோரின் கணிப்பு .  ஆனால் நார்வே நாட்டின் திரட்சி அடைய வைக்கும் ஒரு சட்டத்தை குறித்து நாளேடுகளில் படித்ததின் விளைவு தான் இந்த பதிவு.



சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த முதிய தம்பதியினர் நமது நாட்டின் ஜனாதிபதியை அணுகி தங்கள் பேரக் குழந்தைகளை நார்வே அரசிடம் இருந்து மீது தர சொல்லி ஒரு மனுவை கொடுத்தார்கள் .   அதன் விளைவு தான் இந்த அதிர்ச்சி தகவல் .

 இந்த வயதான பெற்றோரின் மகனும் , மருமகளும் நார்வே நாட்டில் பணியாற்றி வருகிறார்கள் .  அவர்களுக்கு 3  வயதில் ஒரு மகனும் , 6  மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர் .   இந்த மூன்று வயது மகன் அங்கு உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான் .  அங்கு மிக அதிகமாக குறும்பு செய்ததால் பள்ளியின் ஆசிரியர்கள் , அந்த பையனின் பெற்றோர் மீது CHILD CARE ACT ல் (பிள்ளைகளை சரியாக வளர்க்கிறார்களா இல்லையா என்பதற்கான சட்டம் )  புகார் செய்தார்கள். .

 
புகாரின் நிமித்தம் ஒரு குழுவினர் ஒரு வாரத்திற்கு ,  தினம் ஒரு மணி நேரம் அந்த வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்ப்பதை கவனித்து பார்த்தார்களாம் .   இது தான் விசாரணை .  இந்த விசாரணையின் முடிவில் , அந்த தாய்க்கு குழந்தையை வளர்க்கும் தகுதி இல்லை  ( அதிகமாக உணவூட்டுகிறார் என்றும் பொறுமையாக இல்லை ) என்று தீர்ப்பு செய்து அவர்களின் 2  பிள்ளைகளையும் எடுத்து கொண்டு நார்வே அரசின் காப்பகங்களில் சேர்த்து விட்டார்கள் .   அதுவும் இரு பிள்ளைகளையும் இரண்டு வெவ்வேறு காப்பகங்களில் சேர்த்து உள்ளார்கள் .
 

தங்களது விசா இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளதால் , தாங்கள் பெற்ற பிள்ளை தங்களுக்கு கிடைக்குமா என்ற பதை பதைப்பில் பெற்றோர்கள் உள்ளனர் .  தாயும் , தந்தையும் பிரிந்தால் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க தயார் என நார்வே அரசு அறிவித்துள்ளது .
 
 
 சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் குழந்தைகளை எடுத்து சென்று நாங்கள் வளர்க்கிறோம் என்று அரசு கூறுவது ஒரு முன்னேற்றம் போல காணப்பட்டாலும் , இந்த சிறுவயதில் தாயின் , அத்தந்தையின் அன்பை இலனது விட்ட குழந்தைகளுக்கு உங்களால் /  அங்கள் சட்டத்தால் அந்த அன்பை கொடுக்க முடியுமா ...?   என்பது தான் இந்த இந்தியனின் கேள்வி ...

Friday 20 January 2012

கூடங்குளம் போராட்டம் - பணம் எங்கிருந்து ..? - ஒரு அலசல்

சமீப காலமாக கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது ..? எங்கிருந்து வருகிறது என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது .  மத்திய அமைச்சர் திரு . நாராயண சாமி பேசுகிற போது , " வெளிநாட்டின் பணம் இதற்க்கு பயன்படுகிறது " என்ற பொருளில் பேசினார் .  இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூடங்குளம் போராட்டக் குழுவினர் , " போராட்டத்திற்கு தேவையான பணம் மீனவர்கள் கடலுக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் பதில் ஒரு பங்கு பணத்தை அவர்கள் கொடுத்ததினால் வந்தது " என்று கூறுகிறார்கள் .

இதுவரையிலும் இதை குறித்து எனது பதிவுகளில் நான் எழுதாமல் இருந்தேன் . அனால் உண்மையில் இதன் பின்னணி என்ன என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த பொழுது , எனக்கு தெரிய வந்த சில காரியங்களும் , என்னுடைய சில கேள்விகளும் நியாயமானவை என்பதை நீங்களும் ஒப்பு கொள்ளுவீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன் .


சரி ... விடயத்திற்கு வருவோம் .  கூடங்குளம் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இந்நாள் வரையிலும் அதற்க்கு மிக குறைந்தது 50 லட்சம் ( அதிக பட்சம் பல கோடிகள் ) செலவாகியிருக்கிறது என வைத்து கொள்ளுவோம் .  இந்த 50 லட்சம் பணமும் , மீனவ நண்பர்கள் போராட்ட காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை கடலுக்கு சென்று மீன் பிடித்து , அதில் கிடைக்கும் வருமானத்தில் 10 ல் ஒன்றை போராட்டதிற்கு கொடுத்திருக்கிறார்கள் என்று திரு . உதயகுமார் அறிவித்துள்ளார் .  இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம் .

பத்தில் ஒரு பங்கு 50 ௦ லட்சம் என்றால் மீனவ நண்பர்களின் மொத்த வருமானம் 5 கோடி ( போராட்ட காலத்தில் ) .  நல்ல விடயம் தானே . உமக்கு ஏன் ஐயா இந்த கணக்கு என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்க்கிறது .


காரணம் இருக்கிறது .  அப்படியெனில் ,  போராட்ட காலத்தின் போது மக்களின் பசியை போக்க  ( இதே இடிந்தகரையில் ) கஞ்சி தொட்டிகள் திறக்கப்பட்டதே ...! அது ஏன் ?  .  இந்த தகவல்கள் எல்லாம் திரு. உதயகுமார் அவர்கள் பல தருணங்களில் தொலை காட்சில் கூறியவற்றின் தொகுப்பே ....! என்ன ஐயா ...!  3 மாதத்தில் 5 கோடி லாபம் பார்த்த உழைக்கும் வர்க்கத்தை கஞ்சி தொட்டி திற்நது அவமானம் செய்தீர்களா ....? இல்லை உண்மையிலே அவர்களுக்கு தான் கஞ்சி தொட்டி என்றால் அந்த 50 லட்சம்  எங்கிருந்து தான் வந்தது ..?


தொண்டு நிறுவனங்களுக்கும் , உண்ணாவிரத போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற கருத்தை நானும் ஏற்கிறேன் .  ஆனால் அணுமின் நிலையத்திற்கு எதிரான கையேட்டை CHRISEN என்ற தொண்டுநிறுவனம் எப்படி அச்சிட்டது எனபதை எனக்கு யாரும் விளக்கவில்லை .


பயத்தின் காரணமாக தான் மக்கள் போராடுகிறார்கள் என்றால் அந்த பயத்தை அரசு நீக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை .  மக்கள் பணம் பெற்று போராடுகிறார்கள் என்ற அவப்பெயர் நீங்க வேண்டுமானால் திரு உதயகுமார் கணக்குகளை வெளியிடலாமே .  அதன் மூலம் அவரின் மதிப்பல்லவா கூடும் .


இல்லை .... அந்நிய பணத்தை பெற்று கொண்டு , அப்பாவி மக்களை ஏமாற்றி தூண்டிவிடுவது உண்மை என்றால் , அது யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .



Wednesday 18 January 2012

இன்றைய தேவை - அறிவியல் தமிழா ..? அறிவியல் தமிழனா ..?


தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...?  கொஞ்ச நாட்களாக என் மனதிற்குள் ஓடி கொண்டிருக்கும் நினைவுகளும்  , எண்ணங்களும் தான் இந்த பதிவு எழுதப்படுவதின் காரணம் .


அறிவியல் தமிழ்  என்ற வார்த்தை அதிகமாக நான் பள்ளி படிக்கும் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை நான் அறிவேன் .  அது என்ன அறிவியல் தமிழ் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ..?  ருசியா நாட்டில் அனைத்து அறிவியல் பாடங்களும் ருசிய மொழியில் தான் இருக்குமாம் .  அதனால் அந்த நாட்டு குழந்தைகள் அறிவியலை எளிதாக கற்று கொள்ளுமாம் .   ஜெர்மன் தேசத்தில் அனைத்து அறிவியல் பாடங்களும் ஜெர்மன் மொழியில் தான் இருக்குமாம் . அதனால் அந்த நாட்டு குழந்தைகள் எளிதாக அறிவியலை கற்று கொள்ளுமாம் . 


ஆனால் நமது இந்திய திரு நாட்டில் பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் , அறிவியல் பாடங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்  ( பொறியியல் மற்றும் மருத்துவம் ) தான் கற்ப்பிக்கப்பட்டு வந்தன /  வருகின்றன .  இந்த சூழலில் தமிழ் இளையோர்கள் அறிவியலை தமிழில் கற்கவேண்டும் எனவும் அதற்காக அறிவியல் பாடங்கள் தமிழில் இயற்றப்படவேண்டும் என்பது தான் அறிவியல் தமிழ் என்ற  வார்த்தை தோன்றுவதின் ஆரம்பம் .  இதன் முக்கிய காரணம் அறிவியலை தமிழ் இளையோர்கள் நன்றாக கற்று தேறவேண்டும் என்பது தான் . 


ஆனால் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது அறிவியல் தமிழ் தமிழகத்தில் வென்றுள்ளதா என்று தான் நினைக்க தோன்றுகிறது.  அணுமின் நிலையங்கள் என்றவுடன் மக்களும் சரி ,  மாணவர்களும் சரி , ஏன் சில ஆசிரியர்களும் சரி நினைக்கிற காரியம் என்னவெனில்   " அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது " என்று. ஏன் எனில் அணுமின்சாரத்தை குறித்தும்  , அணுமின் நிலையங்களை குறித்தும் கற்று அறிந்து பேசுகிற மக்கள் மிகு குறுகிய அளவில் தான் உள்ளனர் .  மீதி மக்கள் அனைவரும் யாராவது சொல்லும் வதந்திகளை மாத்திரம் பேசுகிறார்கள் .  எங்கே போனது அறிவியல் தமிழ் ?


சரி அறிவியல் தமிழன் தேவையா ? என்ற கருத்துக்கு வருவோம் .  இன்று உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று போராடும் சில செந்தமிழர்களையும்   ,  தன்மான தலைவர்களையும் நினைக்கையில் எனக்கு கோபமும் , வெறுப்பும் தான் வருகிறது .  இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் ?  

உணர்ச்சி பொருந்திய உரைகளை அள்ளி வீசும் இவர்கள் செய்த மாபெரும் சாதனை என்ன தெரியுமா ...?  அறிவியலை தமிழன் கற்கவிடாமல் செய்தது தான் .. வேறென்ன சொல்ல முடியும் ...?  

பள்ளியில் கற்கும் சிறுவர்களை அழைத்து அவர்களை பள்ளிக்கு போகவிடாமல் செய்து அவர்களை கொண்டு போர்ராட்டங்களையும் , உண்ணாவிரதங்களையும் நடத்தும் இவர்கள் வருங்கால சமுதாயத்தை தவறான பாதையில் நடத்தி படுகுழியில் நடத்துகிறார்கள் என்ற ஏன் குற்றசாட்டை எப்படி இவர்கள் மறுக்க முடியும் ..?   

அறிவியலுக்கு விரோதமான எதிர்ப்பை சிறுவயதில் பாலகர்க்கு புகட்டும் இவர்கள் வளமிக்க தமிழ் சமுதாயத்தை எப்படி உருவாக்குவார்கள் ...?  நான் நினைக்கிறேன் ... ஒரு வேளை தமிழ் சமுதாயம் அறிவியலை கற்றுவிட்டால் இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு யார் போவார்கள் என்று நினைக்கிறாகளோ ...?

என்னுடைய எழுத்துகள் பரிபூரணமாக மாயையை உடைத்து எறிவதற்காக தான் எழுதப்படுகின்றன .  அறிவியல் தமிழ் பெருகவேண்டும்  , அறிவியல் தமிழை கற்று அறிவியல் தமிழர்கள் பெருக வேண்டும் , அறிவியலில் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .

Sunday 15 January 2012

அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ...?


அணுமின் நிலையங்கள் குறித்து பலரும் பல விதமாக பல தருணங்களில் பேசி வருகிறார்கள் .  அணுமின் நிலைய்னங்கள் சுற்று சூழலுக்கு எதிரானவை என்ற கருத்துகள் பரவலாக எல்லாராலும் பேசப்படுகிறது . உண்மையில் அணுமின் நிலையங்களினால் சுற்று சூழலுக்கு ஆபத்து உண்டா என்ற ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டது இந்த கட்டுரை ... 


புவி வெப்பமயமாதல்  :   உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து புவி வெப்பமயமாதல் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம் .  அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரையை நான் கொடுக்க விரும்புகிறேன் . நமது அநேக தொழிற்சாலைகள்  , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . 


அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2  மற்றும் SO2  ஆகியவை உள்ளது .  இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை.  அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் .  தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன .  அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் .  கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும் .




அணுமின் நிலையங்கள் இந்த மாதிரி வாயுக்களை வெளியிடாது என்பது ஒன்றே போதாதா .... நமது எதிர்காலத்தை அணுமின் நிலையங்கள் பாதுகாக்கிறது என்பதற்கு .  உண்மையில் மீனவ நண்பர்களின்  வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் , பூமியின் பசுமை குறைந்து பூமி வறண்டு கொடும் பஞ்சம் பூமியில் ஏற்ப்படும் .  அணுமின் நிலையங்கள் SO2 மற்றும் CO2 வாயுக்களை வெளியிடாததால் இந்த பாதிப்புகளை குறைக்கும் ,
ஒரு வேளை என்னுடைய கட்டுரை கண்ணை மூடி கொண்டு நான் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறேன் போன்ற எண்ணத்தை உங்களுக்கு உருவாக்கலாம் .  ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  வருங்கால பூமியை பாதுகாக்கும் வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் இந்த மாதிரி அணுமின் நிலையங்களை சுற்று சூழலின் நண்பன் என்று நான் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது ....?



Monday 9 January 2012

புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

புகுஷிமாவில் நடந்த விபத்துக்கு பின்பு உலகம் முழுவதும் அணுமின் நிலையங்கள் மூடப்படுவதாகவும் அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் எனவும் போராட்ட குழுவினர் தங்கள் கூட்டங்களில் பேசி , மக்களை குழப்பி வருகின்றனர் .  இந்த நிலையில் ,  உண்மையில் உலக அளவில் அணுசக்தி துறையின் பாதிப்பு /  மேம்பாடு  ( புகுஷிமாவுக்கு பிறகு )  என்ன என்பதை ஆராய முற்ப்பட்டதன் விளைவு தான் இந்த கட்டுரை ...


ஜப்பான் : முதலாவது ஜப்பானில் இருந்து நாம் ஆரம்பிப்போம் .  புகுஷிமாவுக்கு பிறகு ஜப்பான் அணுமின் திட்டங்களை கைவிடாமல் 17 - 08  - 2011  அன்று டோமாரி அணுமின் நிலையத்தின் 3 வது யூனிட்டை இயக்கியது .

 சீனா :  25 - 10 - 2011  அன்று சீனா Qinshan Phase II யூனிட்டில் அணு எரிபொருளை நிரப்பியது .  27 - 07 - 2011  அன்று தனது முதல் ஈனுலையில் ( Fast Breeder reactor ) இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை மின் இணைப்பில் இணைத்தது. 


கொரியா  : 02 - 08 - 2011  அன்று கொரியா தனது Shin Kori Nuclear Power Plant ன்  நான்காவது யூனிட்டில் அணு கொள்கலனை நிறுவியது . இந்த அணுமின்நிலையம் அதி நவீன APR - 1400 வகையை சேர்ந்தது .

பங்களாதேஷ்  : 02 - 11 - 2011  அன்று பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்தை கட்டுவதற்காக ருசிய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது .


துருக்கி  : 17  - 08  - 2011  அன்று தனது நாட்டில் அணுமின் நிலையம் கட்டுவதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சு நடத்தி கொண்டு இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது .


 ஜோர்டான் : 17 - 08 - 2011  அன்று தனது நாட்டின் அணுமின் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை சில மாதங்களில் அறிவிக்க போவதாக ஜோர்டான் அறிவித்தது .

 வியட்நாம்  : 06 - 10 - 2011  அன்று தனது நாட்டின் முதல் அணுமின் திட்டத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பானுடன் கையெழுத்து இட்டுள்ளது .



அமெரிக்கா : ஏறக்குறைய 20 புதிய அணுமின் திட்டங்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது . தவிர இரண்டு அதி நவீன ABWR வகை அணுமின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது . இவற்றில் பல 2020 ல் இயங்கும் என தெரிகிறது .   நான்கு AP 1000 வகை அணுமின் திட்டங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட 1 . 6 பில்லியன் டாலர் செலவில் Vogtle மற்றும் Georgia பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது .

 கனடா  : ஏறகனவே 15 சதவீத அணுமின் சக்தியை பெற்று வரும் கனடா வரும் 10  ஆண்டுகளில் ஒன்பது புதிய அணுமின் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது .

 பிரான்ஸ்  : Flamnaville என்ற இடத்தில கட்டப்பட்டு வரும் 1600 MWe அணுமின் நிலையம் இந்த வருடத்தில் செயல் பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து :  2019 வருடத்திற்குள் , நான்கு 1600 Mwe அணுமின் நிலைய்னகளை இயக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது .


 ருமேனியா  : 2017 ம் வருடத்திற்குள் 2  அணுமின் நிலையங்கள் கனடா தொழில் நுட்பத்தில் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ஸ்லோவாகியா :  2012 ம் வருடத்தில் , தற்பொழுது கட்டப்பட்டு கொண்டிருக்கும் 470 MWe அணுமின் நிலையம் ( Mochovce ) செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பல்கேரியா :  ருசிய தொழில் நுட்பத்தில் இரண்டு 1000 MWe அணுமின் நிலயங்கள் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டுளது.

 ரஷ்யா  :  10  அணுமின் நிலையங்கள் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றன .  ஒரு அதிநவீன ஈனுலையும் அதில் அடக்கம் .   புதிய 14  அணுமின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது . 2016 ம் வருடத்திற்குள் 9 . 8 GWe மின்சாரம் புதிய அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தைவான்  :  இரண்டு அதிநவீன ABWR அணுமின் நிலையங்களை Taipower நிறுவனம் கட்டி வருகிறது .

பாகிஸ்தான் :  சீனாவின் உதவியுடன் 300 MWe அணுமின் நிலையத்தை Chashma பகுதியில் கட்டி வருகிறது .

UAE :  2020 ம் வருடத்திற்குள் நான்கு 1400 Mwe அணுமின் நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை தென் கொரியாவுக்கு அளித்துள்ளது .

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சில பிரசாரங்களை பொய் என்று தோலுரித்து காட்டுவதை நாம் மறுக்க முடியாது . தற்காலத்தில் மின் திட்டங்களுக்கு பயன்படும் எரிபொருட்கள் வேகமாக குறைந்து வருவதாலும்  , தினமும் மின் தேவைகள் அதிகரித்து வருவதாலும்  , உலகம் அனைத்தும் அணுமின் திட்டங்களுக்கு நேராக சென்று கொண்டிருக்கும் போது ,  அதி நவீன , மிகவும் பாதுகாப்பான  ,  மூன்றாம்   தலைமுறை  கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது ...?

Friday 6 January 2012

ஹசாரே தாத்தாவின் சாயம் வெளுக்கிறது



ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே அறிவித்த போது அவர் யார் என்பது தெரியாத நிலையிலும் அவருக்கு பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன் என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் தொடர்ந்து நிலவி வரும் சில சூழ்நிலைகளை பார்க்கும் போது அன்னா ஹசாரேவின் குழுவின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து போய் விட்டது என்பது தான் உண்மை.   அடுக்கடுக்காக அவரது குழுவின் நபர்கள் மேல் குற்றசாட்டுகள் வரும் நிலையில் , குழுவின் மூத்த உறுப்பினரும்  , மூத்த வக்கீலுமான திரு . சாந்தி பூசன் அவர்கள் அரசை ஏமாற்றிய செய்தி வெளியானது தான் தாமதம் .,  இந்த லேட்டஸ்ட் இந்தியன் தாத்தாவின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும் .
 
 
 
 2010 ம் வருடம் அலஹாபாத்  நகரில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ள ஒரு பங்களாவை வாங்கிய விவகாரத்தில் தான் இந்தியன் தாத்தாவின் மூத்த சீடர் சிக்கி உள்ளார் .    " 84  ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் மற்றும் அதின் மேல் உள்ள பங்களாவின் சந்தை மதிப்பு சுமார் 20  கோடி எனவும் அதற்கு 1 . 35  கோடி முத்திரை தாள் தீர்வை செலுத்த வேண்டும் எனவும் ..,  ஆனால் திரு பூசன் அவர்கள் இந்த பங்களாவின் மதிப்பு வெறும் 5 லட்சம் என்று பத்திரத்தில் குறிப்பிட்டு வெறும் 46 ஆயிரம் மாத்திரம் முத்திரை தீர்வை செலுத்தி உள்ளதால் திரு . சாந்தி பூசனுக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் முத்திரை தாள் தீர்வையுடன் சேர்த்து ரூபாய் 1 . 62  கோடியை அரசுக்கு செலுத்த வேண்டும்"  என முத்திரை தாள் உதவி ஆணையர் திரு . கே.பி. பாண்டே தெரிவித்துள்ளார்  ( நன்றி . தினகரன் ,  பக்கம் 8  , நாள் : ஜனவரி 7 , 2012 )
 
 
 இந்த கதையை படிக்க கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ....?  எனக்கும் தான் .... எங்கள் ஊரில் பொதுவாக இப்படி பட்ட காரியங்களை சொல்லும் போது  " கருவாட்டிற்கு பூனை காவலா ...?"  என்று கேட்பது தான் நினைவிற்கு வருகிறது .
 
 
 நவீன இந்தியாவின் காந்தி என்று உங்களை அழைத்தார்களே ......! ஹசாரே தாத்தா ...... இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள் ...? உங்கள் கருத்து படி திரு. பூசனை ஜெயிலுக்கு அனுப்ப நீங்கள் தயாரா ...? அல்லது உங்கள் ஊர் பழக்கத்தின் படி தண்டனை கொடுக்க முடியுமா ....?

ஊழல் கொடுமையான வியாதி என்பதிலும்  , அது சமூகத்தை விட்டு அறவே களையப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக நிற்கிறேன் .  ஆனால் தனி வாழ்வில் சுத்தம் இல்லாத ஆனால் பொது வாழ்வில் ஈடுபடும்  இந்த மாதிரி " காந்திக்களும்  ,  மகாத்மாக்களும் "  இனம் காணப்பட வேண்டும் என்பதும் ஊழலுக்கு எதிரான தனி மனித ஒழுக்கம் வளரவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ....