Friday, 10 May 2013

மதிப்பெண் என்ற எமன் - வேதனையான தகவல்


+2 தேர்வு முடிவுகள் கடந்த 09 05 2013 அன்று வெளியிடப்பட்டது .   மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் குறித்து பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்க , அதிகம் வெளிவராத சில வேதனையான செய்திகளை உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை .போட்டிகள் மிகுந்த   உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் நினைப்பதும் ,  தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்கள் பிள்ளைகள் அடையவேண்டும் என்று ஆசைப்படுவதும் நியாயம் தான் .  ஆனால் அங்கு தான் அவர்களை அறியாமல் நெருக்கடியை உண்டாக்குகிறார்கள் என்பது தான் வேதனை உண்டாக்கும் விடயம் .குறிப்பாக 10 வது வகுப்பு அல்லது +2 படிக்கும் குழந்தைகள் வீட்டில் பிள்ளைகளை விட பெற்றோர்கள் படும் பாடு தான் அதிகமாக இருக்கும் .   காரணம் மதிப்பெண் என்ற போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஆசை தான் 


சில பெற்றோர்கள் பிள்ளைகளை வெகுவாக நெருக்குவதால் , அவர்களின் எண்ணம் சிந்தனை எல்லாம் யோசித்து செயல்படுவதை விட்டு விட்டு இயந்திர ரீதியில் பாடங்களை படிக்கிறார்கள் .    இவ்வாறு செய்வது மதிப்பெண்களை தரும் என்றாலும் அறிவை மழுங்கடிக்கும் எனபதே உண்மை .   மாறாக பிள்ளைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் .  எனவே தான் தேர்வு முடிந்த பின்பு ,மதிப்பெண்களை எதிர்கொள்ளுவது கூட மாணவர்களால் முடியவில்லை இப்படி மன நெருக்கடியில் நாகர்கோயில் பகுதியில் ஒரு மாணவனும் , சிந்துஜா என்கிற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாளேடுகளில் வாசிக்க நேர்ந்தது.  இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் ( மதிப்பெண் போட்டியில் பின் தங்கியவர்கள் ) இப்படி மன நெருக்கடியில் சிக்கி தான் உள்ளார்கள்


 அதிக மதிப்பெண்கள் பெற்றால் நல்ல பாடங்கள் எடுத்து படிக்க முடியும் என்பது உண்மை தான்.   ஆனால் மதிப்பெண்கள் எமனாக பிள்ளைகளை அழிக்கக்கூடாது .   வாழ்வதற்கும் , வளர்வதற்கும் அநேகம் வழிகள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது , மதிப்பெண்களை காரணம் காட்டி , பிள்ளைகளை ஒடுக்குவதை தவிர்த்து ,  சந்தோஷ வாழ்க்கையின் முகடுகளை பக்குவமாய் எடுத்து கூறினால் இளைய தலைமுறை வளரும் என்பதில் சந்தேகம் இல்லை


Thursday, 9 May 2013

IPL போட்டிகள் - ஆச்சரியம் கலந்த நிஜங்கள்சென்ற மாதம் ஆரம்பித்து இன்னும் முடியாமல் அநேகம் பேருடைய தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கும் IPL  கிரிக்கெட் போட்டிகளை குறித்து நாம் அறியாமல் இருக்கவே முடியாது .   இந்த போட்டிகளில் அநேகம் ஆச்சரியங்கள் கலந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது .  அவைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி கூட வரலாம் .  • 5 நாட்கள் கிரிக்கெட் விளையாடி விட்டாலே , ஓய்வு தேவைப்படுகிறது என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் நமது வீரர்கள் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று சளைக்காமல் விளையாடுவது எனது முதல் ஆச்சரியம்.
  • கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கபோவதாக சொல்லி ICL ( Indian Cricket League ) போட்டிகளை தொடங்கினார் திரு கபில்தேவ் .  பெரிய துரோகம் செய்துவிட்டது போல அவரை புறந்தள்ளிய பிசிசிஐ , ICL போட்டிகளுக்கு மாற்றாக IPL தொடங்கியது மாத்திரமல்ல , திரு கபில்தேவ் உடனான அனைத்து உறவுகளையும் முறித்தது .  ஆனால் அப்படிப்பட்ட கபில்தேவ் இந்த IPL போட்டிகளில் "ஜும்சிக்கு " என்று நடனம் ஆடுவது எனது பெரிய ஆச்சரியம்  .
  • தனது நிறுவனத்தில் ( Kingfisher ) வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத பரம ஏழை திரு விஜய் மல்லையா அவர்கள் பல கோடிகளை  ( 111.6 மில்லியன் USD, அதாவது கிட்டத்தட்ட 558 கோடி ) கொட்டி ராயல் challngers என்ற அணியை வாங்கி இருப்பது எனது வியப்பின் அடுத்த பக்கம்  .
  • பல ஆயிரம் கோடி பணத்தை IPL மூலமாக சம்பாதிக்கும் பிசிசிஐ , இன்னும் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிப்பணம் சில கோடிகளை செலுத்த தாமதிப்பது ஒரு ஆச்சரியம் தானே 
  • நாள் முழுவதும் ரத்த வியர்வை சிந்தி உழைத்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிள்ளைகளிடம் அன்பாக சில வார்த்தைகளை பேசுவதை கூட மறந்துவிட்டு IPL காட்சிகளில் மூழ்கி கிடக்கும் நண்பர்கள் என் வியப்பின் உச்சகட்டம் .
நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிரானவன் அல்ல .  ஆனால் விளையாட்டு என்ற போர்வையில் ஒரு வியாபாரம் எழும்பி இருப்பதை தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை