Friday 18 November 2011

கூடங்குளம் 50 கேள்விகள் - தொடர்ச்சி ....


எனது சென்ற பதிவின் (கூடங்குளம் - 50 கேள்விகள் ...ஆனால் ஒரே பதில் ) தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத முற்படுகிறேன் .   சென்ற பதிவில் கூடங்குளம் போராட்ட குழுவின் 50  கேள்விகளுக்கு அரசு பதில் கொடுப்பதில் சந்தேகம் இல்லை என்றும் ஆனால் போராட்ட குழு அதை ஏற்று கொள்ளுவதில் எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் எழுதியிருந்தேன் .   எனது சந்தேகம் இன்று நிறைவேறியதால் இந்த தொடர் பதிவை எழுதுகிறேன் .


கடந்த சில நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருந்த மத்திய ஆய்வு குழுவினர் , 50 கேள்விகளுக்கான பதில்களோடு , தமிழக அரசு அமைத்த குழுவோடு பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் ,  கூட்டத்தின் நடுவில் போராட்ட குழுவினர் வெளிநடப்பு செய்ததாகவும் தொலைகாட்சிகளில் செய்தி வெளியாகி உள்ளது .  


இப்பொழுதும் எனது கேள்வி ஒன்றே ஓன்று தான் .   திரு உதயகுமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசும் போது , " நாங்கள் 50  கேள்விகளை கேட்கிறோம் . அதற்கு பதில் தமிழ் ,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வேண்டும் .  அதை மக்களிடம் நாங்கள் சமர்ப்பித்து அவர்கள் கருத்தை கேட்டு அறிந்த பின்பு மக்களின் அச்சம் நீங்கி விட்டால் ,  நாங்கள் போராட்டதை கைவிடுகிறோம் "  என்று கூறினார் .


அது எப்படி ஐயா , நீங்கள் 50  கேள்விகளுக்கான பதிலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் , அந்த இடத்திலே வெளிநடப்பு செய்ய முடியும் ...?  எங்கே மக்கள் அச்சம் நீங்கி விடுவார்கள் என்ற பயமா உங்களுக்கு ...?.    இப்பொழுது தான் நீங்கள் மக்களின் அச்ச உணர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது ....
 

ரெட்டை வேடம் .... ரெட்டை வேடம் என்று அடிக்கடி சொல்லுவீர்களே ... அது இது தானோ ....?  காலம் பதில் சொல்லும் வரை நானும் கொஞ்சம் காத்திருக்கிறேன் .

Wednesday 16 November 2011

கூடங்குளம் - 50 கேள்விகள் ...ஆனால் ஒரே பதில்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் சில வாரங்களாக போராடி வருகிறதை  நாளேடுகள் மூலம் அறிந்திருக்கிறோம் .   மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளும் தலைவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றனர் .  

போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது .  அந்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் மத்திய ,  மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .


 பேச்சு வார்த்தையின் முதல் சுற்றில் போராட்ட குழுவின் சார்பில் 50  கேள்விகள் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டதையும்  , அதற்க்கான பதில் தமிழ் , மலையாளம் , இந்தி  ( இது தமிழன் போராட்டம் என்று சொல்லுபவர்கள் கவனிக்க )  மொழிகளில் வேண்டும் என்று சொன்னதையும் ,  அதை மக்கள் மத்தியில் நாங்கள் விநியோகித்து அவர்கள் கருத்தை கேட்போம் என்று சொன்னதையும் நான் அறிந்த போது உண்மையில் கொஞ்சம் மகிழ்வடைந்தேன் .  ஏன் எனில் பாதுகாப்பான அணுமின் நிலையத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மக்கள் அச்சம் தீர்ந்து விடும் என்பது எனது எண்ணமாயிருந்தது . 

 இந்த சூழலில் தான்  போராட்ட தலைவர் திரு . உதயகுமார் மற்றும்  திரு . பொன்ராஜ்  ( திரு . அப்துல் கலாம் அவர்கள் உதவியாளர் )  இருவரும் கலந்து  கொண்ட ஒரு நேரடி நிகழ்ச்சியை  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது .  அது தான் இந்த பதிவு எழுதப்படுவதின் மூலக்காரணம் .

 பதிவுலக நண்பர்கள் பல பேரும் இந்த அணுமின் நிலையத்தை பற்றி எழுதும் போது இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள் , " அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் பக்கத்தில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...?"  என்று .   நான் அந்த கேள்வியை படிக்கும் போது , என்ன இது சிறு பிள்ளை போல கேள்வி என்று நினைத்து கொள்ளுவேன் .

 ஆனால் இதே கேள்வியை  ( அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...? ) நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது திரு .  உதயகுமார் அவர்கள் திரு . பொன்ராஜ் அவர்களிடம் கேட்டார் .  திரு . பொன்ராஜ் சொன்னார் , " ஐயா , நீங்கள் மிகுந்த அறிவாளி என்று நான் பேசிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் " என்று.   இந்த பதிலுக்கு திரு.  உதயகுமாரின் எதிர்ப்பு பலமாய் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள் .  ஆமா .... ஒரு அசடு வழிந்த சிரிப்பு ஒன்றை தான் திரு . உதயகுமார் பதிலாக கொடுத்தார் .

 இங்கே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .  ஐயா , உங்களுக்கும் தெரியும் .   அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைக்கமுடியாது என்று .  பின் ஏன் நீங்கள் இதே போல ஒரு கேள்வியை மக்கள் மத்தியில் கேட்டு மக்களை குழப்புகிறீர்கள் ....?  அதற்கு காரணம் என்ன ...?

எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தது போல , கடைசியில் அந்த நிகழ்ச்சி நிறைவுறும் போது திரு . உதயகுமார் ஒரு கருத்து சொன்னார் , " யார் சொன்னாலும் சரி , பிரதமர் சொன்னாலும் சரி , மூன்று அல்ல முப்பதாம் தலைமுறை அணுஉலை வந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம் " என்று .  

இங்கு தான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது .... அப்படியானானால் .....
  1. நீங்கள் எதற்கு குழு அமைத்தீர்கள் ...?
  2. எதற்கு 50  கேள்விகள் அமைத்து கொடுத்தீர்கள் ...?
  3. மக்கள் ஏற்று கொண்டால் போராட்டம் வாபஸ் என்று எப்படி சொன்னீர்கள் ...?
  4. உங்கள் கேள்விக்கு திரு . பொன்ராஜ் பதில் கொடுக்கும் போது ஏன் இடைமறித்து பேசினீர்கள் ...?
  5. தமிழனுக்கு எதிரான அணு உலை என்று சொல்லி ஏன் மூன்று மொழிகளில் பதிலை கேட்டீர்கள் ...?
இதெல்லாம் என்னுடைய சில கேள்விகள் ....ஏன் தெரியுமா ,  யார் சொன்னாலும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுபவர் கேள்விக்கு கொடுக்கப்படும் பதிலை எப்படி ஆய்வு செய்வார் ...?

இப்படி இவர் எடுக்கும் பல காரியங்கள் , இவர் மக்களின் அச்சத்தை தீர்க்கும் வழிமுறைகளை விரும்பவில்லை என்பதையும்  ,  மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் எனபதையும் மிக தெளிவாக் சுட்டி காண்பிக்கிறது .

இது இவரின் ரெட்டை வேடம் அல்லாமல் வேறென்ன ....? என்ற என கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் .  காத்திருக்கிறேன் அது வரை ...!

Sunday 13 November 2011

SUN TV செய்தது சரியா ...?


இன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது .   தொடர்ந்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும் , உண்மை நிலையை மக்கள் அறியும் விதத்திலும் இந்த செய்திகள் ஒளி பரப்ப பட்டது வரவேற்க தகுந்தது .  

கிட்ட தட்ட இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் சென்னை பட்டணத்தின் பெரும்பாலான ATM இருக்கும் இடங்களை SUN TV யின் தொலைகாட்சி பதிவு செய்தது .  அதில் இரவு 9 மணிக்கு ஒரு ATM ல் காவலாளி இல்லை என்றும் அதிகாலை 1  மணிக்கு ஒரு காவலாளி தூங்கி கொண்டு இருப்பதையும் ,  அதிகாலை 1 . 30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பியும் அற்புதமான ஒளி பரப்பை செய்து முடித்தது SUN TV யின் செய்திகள் .



அண்ணா சிலையின் முன் உள்ள ATM ல் இரவு 9 மணிக்கு காவலாளி இல்லை என்று ரிப்போர்ட்டர் பேசினார் .  அந்த இரவில் விழித்திருக்கும் சக்திக்காக ஏன் அவர் ஒரு தேநீர் அருந்த சென்றிருக்க கூடாது ....?

ICICI வங்கியின் ATM ஒன்றில் தூங்க கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பி அவரது முகம் திரையில் நன்கு விழும் படி காண்பித்து அவரிடம் தூங்கி கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க அவர் மிகுந்த தர்ம சங்கடத்துடன் இப்பொழுது தான் என்று தலை குனிந்து சொல்ல ,  நான் ரொம்பவே நொந்து தான் போனேன் .

அந்த காவலாளி தூங்கினதை  நான் நியாயப்படுத்தவில்லை .  இருந்தாலும்   அவர் என்ன மாதிரி சூழ்நிலையில் அந்த இரவு வேலையை தேர்ந்து எடுத்தாரோ .. அநேக இரவு நேர காவலாளிகள் பகல் நேரம் வேறு வேலை செய்கிறதை நான் அறிந்திருக்கிறேன் .  எல்லாம் குடும்பத்தை காப்பாற்ற தான் .  நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் பேசியிருக்கலாம் ( TV யில் காண்பிக்காமல் ) ,   இல்லை என்றால் ஒரு பொதுவான ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் .  எதுவும் செய்யாமல் ஒரு அப்பாவியின் முகத்தை அழகாக காட்டி விட்டீர்கள் .   இனி மேல் அவருக்கு எப்படி அந்த வேலை நீடிக்கும் ..?
இப்படி அப்பாவி மக்களை முன்னால் நிறுத்தி , பிரபலமாகும் அநேகர் இந்த நாட்களில் எழும்புகிறார்கள் .  அதனால் பாதிக்கப்படுவது என்னவோ ... மக்கள் தான் 



என்னடா ... இந்த இருதயம் இப்படி எழுதுகிறார் என நினைக்கலாம் ...!  ஆம் ... வேறென்ன செய்ய ... பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?  என்பதை  இப்பொழுதும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் .

Friday 11 November 2011

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை ( ஆனால் நடக்கலாம் )



அக்கா.. கருணாநிதி பெயர் இருக்கிற எல்லாவற்றையும் மாத்தனும் .   தமிழ் செம்மொழி அப்படின்னு நான்தான் அறிவிக்க செய்தேன் என்கிறாரேதமிழ் செம்மொழி இல்லை..... அப்படின்னு ஒரு சட்டம் போட்டுடுவோம் .....

ஐயையோ... அப்படியெல்லாம் செய்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும்வேணும்ன்னா ... இந்த மேம்பாலங்களை எல்லாம் இனிமேல் கார் போககூடாது அப்படின்னு ஒரு சட்டம் போட்டுட்டு அதை நடைபாதை ஆக்கிடலாம் ....






அப்பா ... என்ன தான் நடக்குது இங்க .... ஒன்னுமே எனக்கு புரியவில்லை ....


ஏம்பா ... எனக்கே புரியவில்லைநான் வேற என் காலத்திற்கு பிறகு என் வீடு மருத்துவமனை ஆகும் அப்படின்னு சொல்லிட்டேன்எங்கே அதை மருத்துமனையிலிருந்து மார்ச்சுவரியா மாற்றிடுவாங்களோ என பயமாயிருக்கு ...   




அப்பா ... என்ன யோசனை பலமாய் இருக்கு ....?


அட ..ஆமாப்பா .... எத்தனை முறை தான் அன்பு சகோதரிக்கும்கலைஞர் ஐயாவுக்கும் மாறி மாறி ஜால்ரா அடிப்பது .   மக்கள் வேற யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க .... மூணாவது அணி ஏதாவது வந்தால் தான் நாம பிழைச்சோம் ...







தம்பி ... இத்தனை நாள் தமிழன் தமிழன்னு சத்தம் போட்டேன்ஆனால் செந்தமிழன் பட்டம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது ...


அண்ணே ... ஒண்ணுமில்ல .. சினிமாவில படம் எடுத்து பார்த்தேன் ஒன்னும் ஓடல ... ஆனா .. அதே படத்தை மக்கள் மத்தியில நானே ஒட்டி பார்த்தேன் ... பாருங்க அமோக வெற்றி .   ஆனா பாருங்க ....படம் எப்படியும் ஒரு நாள் முடியத்தான் வேணும் .





ஏம்பா ... யாரை பார்த்தாலும் நான் உளறு வாயன்னு சொல்லுறாங்க ..  என்ன செய்ய .. படத்தில தான் என்னாலே வேகமா பேசமுடியும் ..  சரி சரி .... சிவப்பு கண்ணை வெள்ளையா காண்பிக்கிற கண்ணாடி எதாவது இருந்தால் சொல்லுங்களேன்எப்படி தான் கூலிங்க்ளாஸ் போட்டாலும் கண்ணை பார்க்கிறாங்க .... ரொம்ப மோசம் ..!







சார் , தமிழ்நாட்டிலே நீங்க தலைவராய் இருந்து ஏன் செயல்பாடுகள் சரி இல்லை ..?

  யார் சொன்னது ...? தமிழ்நாட்டில் 7 கோடி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேர்த்திருக்கிறோம்ஆனால் என்னை தவிர யாரும் ஒட்டு போடவில்லைதீவிர ஆலோசனைக்கு பிறகு மேலிடத்திற்கு ரிப்போர்ட் கொடுப்பேன்





அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை .   வரும் சட்டமற்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் .  


Wednesday 9 November 2011

திரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் .? - ஒரு வேதனை குமுறல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்த சூழ்நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானியும்  , முன்னாள் குடியரசு தலைவருமான திரு. அப்துல் கலாம் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து " கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது " என்று அறிக்கை வெளியிட்டார் . 

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் பதிவுலகம் அவருக்கு கொடுத்த கொடுமையான் சில பட்டங்களை கண்டு மிகவும் அதிர்ந்து போன இந்திய குடிமக்களில் நானும் ஒருவன் .  வெகு சிலரே இந்த மாதிரி பதிவுகளை எதிர்த்தபோதிலும்  , அநேகர் அற்புதம் , அதிசயம் என்று அந்த பதிவுகளை பாராட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை .


 ஒரு பதிவர்  எழுதியுள்ளார்  அப்துல் கலாம் ஒரு கோமாளி என்று .  அந்த பதிவர் பெரும் அறிவாளியாக தான் இருக்கமுடியும் .

1981 ல்   -  பத்ம பூசன்
1990 ல்  -   பத்ம விபூஷன்
1997 ல்  -  பாரத ரத்னா
2009 ல்   - அமெரிக்காவின் ஹூவர் மெடல்
இப்படி பல பதக்கங்களும் ,  விருதுகளும் அவரின் அறிவியல் அறிவுக்காக , அவர் ஆற்றிய தேசப்பணிக்காக கொடுக்கப்பட்டிருக்கிறதே  , அவரை பார்த்தா கோமாளி என்று சொல்லுகிறீர்கள் ...?


இன்னும் ஒரு பதிவர் சொல்லுகிறார் , "  இவரின் உபதொழில் கூலிக்கு மாரடிப்பது என்று "
இப்படி கேள்வி கேட்பவர் எந்த கூலிக்கு மாரடிப்பவர் என்று நானும் கேட்டால் அது மிகவும் அசிங்கம் .  வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை பார்க்காமல் அரசை ஏமாற்றி சம்பளம் வாங்கி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வாழ்கிற பதர்களுக்கு மத்தியில் நாட்டிற்காக உண்மையாய் உழைத்து  நாட்டின் பாதுகாப்பு துறையிலும் ( DRDO )  , விண்வெளி துறையிலும் ( ISRO ) பணியாற்றி இந்தியாவின் முதல் செயற்கை கோள் செலுத்தும் வாகனத்தின் ( SLV ) தலைவராய் விளங்கினாரே ,  அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " கூலிக்கு மாரடிப்பவர் என்று "


 இன்னும் ஒரு பதிவர் கருத்து சொல்லி உள்ளார் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது "
இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையை குழந்தைகளுக்காக திறந்து விட்ட தலைவர் என்று நாளேடுகள் செய்தி வெளியிட்ட போது நீங்கள் பார்க்கவில்லையா .....?   சாதாரண MLA அடிபொடிகளுடன் ரகளை பண்ணும் போது ,  முதல் குடிமகனாய் இருந்த போதும் எளிமையாய் இருந்தாரே , அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது " என்று 


காரணம் இவர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று சொல்லி விட்டாராம் ..  அதனால் இவருக்கு அணு அறிவியலில் அறிவு இல்லையாம் ... 

ஏம்பா ...  அக்னி  மற்றும் ப்ரித்வி போன்ற ஏவுகணைகளை பறக்க விட்டு  ... உங்களை போல நாட்டின் மானத்தை பறக்க விடாமல் ,  தேசத்தின் பெருமையை நிலை நிறுத்தினாரே , அப்பொழுது ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று ...." 


 2020 ல் இந்தியா எல்லாவிதங்களிலும் தன்னிறைவு பெற்று உலகத்தில் முதல் இடத்திற்கு வரும் என்று  INDIA 2020 என்ற புத்தகத்தில் சொன்ன போது தேசமே அவரை கொண்டாடினதே அப்பொழுது நீங்கள் ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று 

 பொக்ரானில் அணு சோதனையை நடத்தின போது உலகமே இந்தியாவை வியப்பாய் நோக்கி பார்க்கும் போது அவரை எல்லாரும் பாராட்டினார்களே ,  அப்பொழுது ஏன் சொல்லவில்லை அவருக்கு அறிவு இல்லை என்று ...

Phd (Political சயின்ஸ்)  படித்தவர் தான் உங்கள் அணு விஞ்ஞானி போலவும் திரு , அப்துல் கலாம் ஒன்றும் அறியாதவர் போலவும் கதை விடும் நண்பர்களே ,  உங்களால் அவரை பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து அவரை இகழாதீர்கள் ...

வானத்தை நோக்கி துப்புகிறவர்களின் ( உங்களின் ) முகத்தின் மேல் எச்சில் விழுவதை அறியாமல்  , இச்சகம் பேசும் நண்பர்களே  , எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான் " நீங்கள் இந்தியர்கள் தானா ...?" 

Sunday 6 November 2011

கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானது - திரு . அப்துல் கலாம்


ரஷ்ய நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டின் கூடங்குளம் பகுதியில் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ளது .   இந்த நிலையில் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுவதால் அணு மின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகிறார்கள் .   இந்த சூழ் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக விஞ்ஞானி அப்துல் கலாம் இன்று கூடங்குளம் வருகை தந்தார் .


 ஆய்வை முடித்த பின்பு நிருபர்களிடம் பேசிய திரு .  அப்துல் கலாம் அவர்கள் " கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உயர் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது " என்று தெரிவித்துள்ளார் .   கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்படுவது அந்த பகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அறிவித்துள்ளார் .  தேசத்தின் அத்தனை மனிதர்களாலும் மதிக்கப்படும் உன்னத விஞ்ஞானியான திரு, அப்துல் கலாம் இப்படி சொல்லி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இந்த கருத்துகளை ஏற்று கொள்வதில்லை என போராட்ட குழுவினர் அறிவித்திருப்பது வேதனையான விஷயம் தான் 

இந்த சூழலில் போராட்ட குழு தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்ன சில காரியங்களை நினைத்தால் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது .
  1. திரு . அப்துல் கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி அல்ல அதனால் அவரின் கருத்துகள் ஏற்றுகொள்ள முடியாது என்றார். 
     உண்மை தான் .  திரு, அப்துல் கலாம் அவர்கள் ஏரோநாட்டிகல் பொறியாளர் தான் .  ஆனால் அணுசக்தி துறையிலும் அவரது பணிகள் இருந்தது என்பதை உலகம் அறியும் .   சரி .... திரு . உதயகுமார் அவர்களே ... நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .. உங்களை பார்த்து ....  நீங்கள் அணு விஞ்ஞானியா ...? அணுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ...?  அப்படியே அணு விஞ்ஞானிகள் சொன்ன கருத்துகள் கூட உங்களுக்கு ஆகாதே ....!
  2. USA ,  ஜப்பான்  , பிரான்ஸ் விஞ்ஞானிகளை விட இந்திய விஞ்ஞானிகள் பெரியவர்களா என்று கேட்டார் ...  
     திரு உதய குமார் அவர்களே .... ஆமா  நம்ம நாட்டு விஞ்ஞானிகள் பெரியவர்கள் தான் ....  நீங்கள் மேற்சொன்ன எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டுபிடிக்காத உண்மையை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் தான் கண்டுபிடித்தது என்பதை மறந்து போக கூடாது
  3. மக்களாகிய எங்களை என் திரு . அப்துல் கலாம் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் .
     ஐயா .  நீங்கள் தானே அப்துல் கலாமை சந்திக்க விரும்பவில்லை என்று நாளேடுகளுக்கு பேட்டி கொடுத்தீர்கள் .  என்ன பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுகிறீர்களா...?


 இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான திரு . அப்துல் கலாமின் கருத்தை இவர்கள் என்று கொள்ளாதபோது யார் கருத்தை தான் ஏற்று  கொள்ளுவார்கள்.   பொறுத்திருந்து பார்ப்போம் .

Wednesday 2 November 2011

அரசியலுக்கு வர என்ன தகுதி - பொதுவான பார்வை


அரசியல் என்பது ஒரு பெரிய துறை .  ஆழம் தெரியாமல் அதில் காலை விடமுடியாது என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன் .   திடீரென்று இன்று காலை என் நண்பன் கேட்டான் "  அரசியல்வாதியாய் மாற என்ன தகுதி வேண்டும்? "   இந்த கேள்வி கொஞ்சம் என்னை அசைத்தபடியால் இதை குறித்து ஒரு கட்டுரை எழுத முற்பட்டேன் .  

 இன்னும் ஒரு நண்பனிடம் இதை குறித்து விவாதிக்கலாம் என்று அவனிடம் என் நண்பன் கேட்ட அதே  கேள்வியை கேட்டபோது , அவன் பொறுமையுடன் என்னை பார்த்து ஒரு சின்ன கதை சொன்னான் ....

பள்ளிகூடத்தில் நன்கு  படிக்கிற மாணவர்கள் முதல் பெஞ்சில் இருப்பார்கள் .  கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் நாடு வரிசையில் இருப்பார்கள் .  தேர்ச்சி பெறாத மாணவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற கடைசி பெஞ்சில் இருப்பார்கள் .

இதில் நன்கு படிப்பவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகிறார்கள்

கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் ஒரு டிகிரி முடித்து விட்டு பிறகு MBA போன்ற மேலாண்மை படிப்புகள் முடித்து முதல் பிரிவினரை ஆளுகிறார்கள் .  

மாப்பிளை பெஞ்ச் மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு ஒரு கட்சியில் சேர்ந்து MLA , MP ஆகி இரண்டாம் பிரிவையும் , முதல் பிரிவையும் ஆளுகிறார்கள் ..


இப்பொழுது புரிகிறதா .....?  என்று கேட்டான் ..

 ஓரளவுக்கு அவன் சொன்ன காரியங்கள் இன்றைக்கு அரசியலில் நடந்து கொண்டு தான் இருக்கிறது ?   எத்தனயோ புண்ணியவான்கள் இந்த அரசியலை புனிதமாக கருதி சேவை செய்த வாசனையான காலங்கள் போய் அரசியல் என்றால் சாக்கடை என்று சொல்ல கூடிய நிலையில் இன்று உள்ளது .  இன்றைய அரசியல் வாதியின் சில அடிப்படை தகுதிகளை பார்க்கும் போது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாய் தான் உள்ளது
  1. குறைந்தது ஒரு கோடியாவது சொத்து இருக்கவேண்டும் ( தேர்தலில் போட்டி இடுவதற்கு ) .  இந்த முறை தேர்தலில் நான் சில பேரின் சொத்து மதிப்புகளை ( கட்சி பாகுபாடு இல்லாமல் ) பார்த்த போது தான் இந்த தகுதியை கண்டு கொண்டேன் .  இந்த பணத்தை கொண்டு பதவியை பிடிப்பதற்கு செலவு செய்து ( பாருங்கையா ....சேவை செய்வதற்கு பிறந்தவர்கள் ) வெற்றி பெற வேண்டும் .
  2. குறைந்தது 2 வழக்குகளாவது இருக்க வேண்டும் ( அடிதடி , ஊழல்  மற்றும் பிற ).  ஏன் எனில் ஜெயித்தபிறகு சட்டமன்றத்தில் /  நாடாளுமன்றத்தில் சண்டை போடுவதற்கு .
  3. கல்வி தகுதி என்று ஒன்றும் இல்லை ( மிக குறைந்த அளவில் நன்கு கற்றவர்கள் ஜெயிக்கிறார்கள் )
  4. ஆள்பலம் , சாதி பலம்
  5. இன்னும் பிற

என்னை பொறுத்த வரை அரசியலில் ஒருவர்  ஈடுபட வேண்டுமானால் அவர் கீழ்க்கண்ட தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் .

  1. குறைந்தது ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில்  நேரடி பட்டம் ( தொலை தூர கல்வியில் அல்ல ) பெற்று இருக்க வேண்டும் . ஒரு சாதாரண இளநிலை ஊழியனின் பதவிக்கு உள்ள தகுதி தான் இது  ( அரசியலில் சேர்ந்து பின் நான் எப்படியாவது Doctor பட்டம் வாங்கி விடுவேன் என்று சொல்லகூடாது .  ஏன் எனில் இப்பொழுது நிறைய Doctor அரசியலில் இருக்கிறார்கள் )
  2. கூடுதலாக ஆட்சிமுறை குறித்து 2  ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் .  இந்த வகுப்புகள் தாய் மொழியில் திறமைமிக்க கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும் .  Closed book system என்ற முறை உபயோகபடுதப்படாமல் Open book system என்ற முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் .
  3. ஒருமுறை MLA ஆக இருந்தவர் மாத்திரம் MP பதவிக்கு போட்டியிட தகுதி செய்யப்பட வேண்டும் .
  4. ஒரு குற்றப்பத்திரிகை இருந்தால் கூட அந்த வழக்குகள் முடிந்த பிறகு தான் அரசியலில் ஈடுபட வேண்டும்
இதெல்லாம் நடக்குமா என்றால் ,  நடக்காது தான் .. ஆனால் நடந்தால் தான் அரசியல் சாக்கடை என்ற நிலையில் இருந்து பரிசுத்தமான சேவை நிலைக்கு கடந்து வரமுடியும் .

குறிப்பு :  சில நல்ல , தியாகம் உள்ள அரசியல்வாதிகளை கருத்தில் கொள்ளாமல் பொதுவான ஒரு கண்ணோட்டமே இது .   ஆகவே அரசியல் தூய்மை உள்ளவர்களுக்கு இந்த கட்டுரை பொருந்தாது .  நன்றி