Tuesday 28 February 2012

அன்பார்ந்த கூடங்குளம் தாய்மார்களே ....!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி கொண்டு இருக்கும் அன்பார்ந்த கூடங்குளம் பகுதி தாய்மார்களே , தந்தைமார்களே , சகோதர , சகோதரிகளே  , தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது , உங்களுடன் மனம் திறந்து சில காரியங்களை பேச வேண்டும் என்று நான் நினைத்ததின் விளைவே இந்த பதிவு .



கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தின் பொழுது ஏற்ப்பட்ட சில சத்தங்களை கேட்டு தான் , அணுமின் நிலையம் ஆபத்தானது என்று நீங்கள் பயந்து போராட்டத்தை தொடங்கினதாக நான் நாளேடுகளில் , பதிவுகளில் வாசித்து அறிந்து கொண்டேன்.  தொடர்ந்து நிகழ இருந்த பாதுகாப்பு ஒத்திகை முயற்சியும் , உங்களின் அச்சத்தை அதிகமாக்கிற்று என்ற உண்மையை நானும் அறிந்து கொண்டேன்.  இந்த நிலையில் உயிருக்கும் , உங்களின் உடமைக்கும் எங்கே பாதுகாப்பு இருக்காதோ என்று நீங்கள் பயப்பட்டது ஒரு நியாயமான அச்சமே என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன் .  ஆனால் அணுமின் நிலையங்கள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது உங்கள் அச்சம் களையப்பட்டு விடும் என்பதில் அசையா நம்பிக்கையும் கொண்டிருந்தேன் .  இந்த நிலையில் தான் திரு . உதயகுமார் தலைமையில் ஒரு குழுவினர் உங்களுடன் போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .


உங்களின் அச்ச உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட அவர்கள் அணுமின் நிலையம் செயல்பட்டால் உங்கள் ஊர் காலி செய்யப்படும் என்றும் , இடிந்த கரை என்ற கடற்க்கரை கிராமத்தின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்றும் உங்களுடன் தொடர்ந்து பேசி வந்ததினால் , உங்கள் அச்ச உணர்வு மேலோங்கி அவருடன் இணைந்து போராடுவதோடு மட்டும் அல்லாமல் அவரை உங்கள் தலைவராகவும் என்று கொண்டீர்கள் .


ஆனால் எந்த ஊரும் காலி செய்யப்படாது என்பதை அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்  உறுதியாக சொல்லிய பொழுதும் , கடலில் மீன்பிடி தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிப்பு வெளிப்பட்ட பொழுதும் ,  உங்கள் பயத்தை அதிகமாக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்று ஒரு நவீன உத்தியை திரு. உதயகுமார் கைக்கொண்டதின் விளைவு உங்கள் அச்சம் அதிகமாயிற்று .



அணுமின் நிலையத்தின் கட்டுமானம் குறித்த சந்தேகங்கள் உரிய முறையில் அதிகாரிகளால் விளக்கப்பட்ட பொழுதும் , கிட்டதட்ட 6000 டன் உபகரணங்களை அணுமின் நிலையம் சுமந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை நீங்கள் அறிந்து கொண்ட பொழுது , கடல் மண்ணால் அணுமின் நிலையம் கட்டப்பட வில்லை என்பதை நீங்கள் விளங்கி கொள்ள தொடங்கின பொழுது  , அணுமின் நிலையத்தை ஏன் கேரளாவில் நிறுவவில்லை ..?  ஏன் பார்லிமென்ட் அருகில் நிறுவவில்லை ...?  ஏன் ஜனாதிபதி மாளிகையில் நிறுவவில்லை  என்று திரு . உதயகுமார் உங்களை கேள்வி கேட்டு பயம் உங்களை விட்டு அகலாதபடிக்கு பார்த்துகொண்டார் ... இப்படி ஒரு கேள்வியை திரு. அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் அவர்களிடம் கேட்டு வாங்கியும் கட்டி கொண்டார் என்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்கள் .



எனவே பூகம்பம் வரும் , சுனாமி வரும் , கான்செர் வரும் . எரிமலை வரும் , அணுகுண்டுகள் வெடிக்கும் என்றெல்லாம் புதிய புதிய கதைகளை உங்களிடம் அளந்து விட்ட திரு. உதயகுமார் சோமாலியாவில் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தை உங்கள் முன்னாள் பேனரில் வைத்து உங்களின் குழந்தைகளும் இது போல மாறும் என்று சொல்லி உங்கள் பாதி நீங்க விடாமல் பார்த்து கொண்டார் ...

இந்த நிலையில் உங்களின் அச்சத்தை தீர்ப்பதற்காக மத்திய அரசாங்கம் குழு ஒன்றை அமைத்தது .  இந்த குழுவிடம் 50 கேள்விகளை நாங்கள் கேட்போம் என்றும் அதற்கு அந்த குழுவினர் அளிக்கும் பதில்களை தமிழ் , மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சடித்து மக்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை கேட்போம் என்று சொல்லியவுடன் அவரை நீங்கள் தலைவராகவே ஏற்று கொண்டீர்கள் .  ஆனால் உங்கள் தலைவரோ நீங்கள் எதை நினைத்து பயபட்டீர்களோ அந்த கேள்விகள் ஒன்றையும் கேட்காமல் , இந்திய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறி விளைவிக்கும் கேள்விகளை கேட்டார் .  சரி.   எங்கே அந்த கேள்விகளும் , பதில்களும் மக்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் சந்தேகம் தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் , அந்த கேள்விகளை உங்களிடம் அளிக்காமலே , பேச்சு வார்த்தையை முடித்து கொண்டார் ..

 
இனி மேலும் நீங்கள் பொறுத்து கொள்ளமாட்டீர்கள் என்று உணர்ந்த திரு. உதயகுமார் கடைசி கட்ட பேச்சு வார்த்தையில் அழகாக ஒரு நாடகம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடி உங்களின் உணர்சிகளை எழுப்பி விட்டு போராட வைத்தார் .  இந்த நிலையில் மக்களின் அரசான தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது ....



இந்த குழுவின் வல்லுனர்கள் தங்களின் ஆராய்ச்சியின் படி அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிக்கைவிட்ட பிறகு திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " எங்களுக்கு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த விளக்கம் ஒன்றும் தேவை இல்லை .. எங்களுக்கு அணுமின் நிலையம் என்ற ஒன்றே வேண்டாம் " என்று ...


  கூடங்குளம் நண்பர்களே ,  உங்களின் அச்ச உணர்வை தனக்கு சாதகமாக்கி கொண்ட திரு . உதயகுமார் , தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் உங்களை அறியாமலே உங்களை பலி கடா ஆக்கி வருகிறார் .... இல்லை என்றால் இந்திய - ருசிய ஒப்பந்தம் ,  அணு எரி கோல்கள் பாதுக்காக்கப்படும் இடம் ,  அணுமின் நிலையத்தை சுற்றிலும் உள்ள பாதுகாப்பு படையினர் குறித்த விவரம் ,  ருச்சிய அரசுடன் செய்துள்ள கடன் ஒப்பந்த விவரம் போன்ற தகவல்களை ஏன் கேட்கவேண்டும் ....?  இதையும் நீங்கள் அதி சீக்கிரத்தில் உணர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ...



எனவே , நமது தேசத்தின் தலை சிறந்த அறிஞரகள் அணுமின் நிலயம் பாதுகாப்பானது என்று சொல்லும் வார்த்தைகளை கேட்காமல் , சில நக்சல் பாடல்களின் மூலம் உங்களையும் , உங்கள் பிள்ளைகளையும் போராட வைத்து , கூடங்குளம் என்ற ஊர் வளமான சமுதாயம் ஆகவிடாமல் தடுக்கும் திரு . உதயகுமாரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் .  நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு தடையாகும் கற்களை உங்களை விட்டு விலக்குங்கள்.   வஞ்சகத்தை அடையாளம் கண்டு உங்களை விட்டு விரட்டுங்கள் .  ஒளிமயமான தேசத்தை உருவாக்குங்கள் .  வந்தே மாதரம் ....

  


Saturday 25 February 2012

கூடங்குளம் விவகாரம் - பிரதமரின் நிலைப்பாடு என்ன ..?



கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட பணம் (   சேவை செய்வதற்காக )  பயன்படுத்த படுவதாக மாண்பு மிகு பாரத பிரதமர் அவர்கள் அளித்த கருத்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 
 

கூடங்குளம் அணுமின் நிலயத்திற்கு எதிராக திரு . உதயகுமார் அவர்கள் பல பொய்யான காரியங்களை கூறி மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறதை பல பதிவுகளில் இதே வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் .  இந்த நிலையில் மாண்பு மிகு பாரத பிரதமர் அவர்கள் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , "  வெளிநாட்டில் இருந்து NGO எனப்படும் தொண்டு நிறுவனகளுக்கு அனுப்பப்படும் பணம் தவறாக போரரட்ட செலவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக" பேட்டி அளித்துள்ளார் .
 
 
 மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ள இந்த பேட்டி கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒரு முற்று புள்ளியை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எழுச்சியை உண்டுபண்ணியுள்ள அதே நிலையில் திரு . உதயகுமார் இந்த பேட்டியை வன்மையாக கண்டித்துள்ளார் .  
 
 
இந்த சூழலில் திரு . நாராயணசாமி அவர்கள் அளித்த தகவலின் படி , " கூடங்குளம் பகுதியில் செயல்பட்ட 3 NGO கள் , அதாவது தொண்டு நிறுவனங்கள் இப்படி வெளிநாட்டு நிதியை போராட்டத்திற்கு அளித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் , அவற்றின் Licence ரத்து செய்யப்பட்டுள்ளது " என்று அறிவித்து உள்ளார் .


ஏற்கெனவே , திரு , நாராயணசாமி இப்படி அறிவிக்கும் பொழுது எல்லாம் , அவர் மேல் வழக்கு தொடுப்பதாக மிரட்டல் விடுத்த திரு . உதயகுமார் இன்று வரையும் அதை ஏன் செய்யவில்லை என்பதயும் ,. தமது மடியில் கணம் இல்லையெனில் ஏன் போராட்ட கணக்குகளை வெளியிடவில்லை என்ற கேள்விகளுக்கும் போராட்ட குழுவில் பதில் இல்லை .

 
மக்களின் கண்களுக்கு தேராமல் நடக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக திரு . உதயகுமார் , அரசுக்கு எதிராக மக்களை உசுப்பேற்றி வரும் ( அரசு மக்களை தவறாக நடத்துவதாக ) அதே நேரத்தில்  , அரசு அந்த 3 NGO களின் பெயர் , மற்றும் அவைகளின் நடவடிக்கைகள் குறித்த தெளிவான விளக்கத்தை மக்களுக்கு அறிவித்தால் , திரைக்கு பின்னால் இருந்து மக்களை இயக்கும் சில சக்திகளின் போலி முகமூடி கிழிக்கப்படும் என்பதே இந்த இந்தியனின் விருப்பம் .

Friday 24 February 2012

தினமணியின் கட்டுரை சரியானதா ....?


இன்றைய தினமணியின் ( தேதி 24 . 02 . 2012 ) ,  கட்சிகளை கடக்கும் காலம் என்ற கட்டுரையை வாசித்து முடித்த உடன் இந்த பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது ...  திரு ,. பா . செயப்ப்ரகாசம் என்ற அறிஞர் இந்த கட்டுரையை  எழுதி உள்ளார் .  நடுநிலை நாளிதழ் என்று பெருமையுடன் நான் கேள்விப்பட்ட இந்த நாளிதழில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை 6 வது பக்கத்தில் நாம் காணலாம் .


மக்களால் , மக்களை கொண்டு தேர்ந்து எடுக்கப்படும் ஆட்சி  தான் மக்களாட்சி என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் .  ஆனாலும் மக்களாட்சியின் பிரதிநிதிகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களை திறமையாக அரசாலும் முறைகள் ஏற்க்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது . இந்த நிலையில் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக வரையப்பட்டு உள்ள இந்த கட்டுரை எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் எழுந்தது போல புரட்சி இங்கும் எழும்பி உள்ளது போன்ற மாயையை உருவாக்க முனைந்து உள்ளது .  இது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் .  

எகிப்து , துனிசியா நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்தது . அங்கு இந்த கட்டுரை ஆசிரியர் இந்த அளவுக்கு சுதந்திரமாக எழுதி இருக்க முடியாது . ஆனால் மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு உள்ள மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா இவருக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து இருப்பதால் இப்படி சுதந்திரமாக எழுதவும் , பேசவும் முடிகிறது என்பதை எப்படி மறந்து போனார் ....?


கூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்தனர்  அதனால் தான் மத்திய அரசும் , மாநில அரசும் அவர்களை போய் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்ததாக பெருமை பொங்க எழுதி உள்ள கட்டுரை ஆசிரியருக்கு நான் சில கேள்விகள் வைக்க உள்ளேன் . 

  1. உங்களின் கட்டுரைப்படி வட்டாரங்களில் இருந்து மக்கள் தலைமையை உருவாக்க வேண்டுமானால் , அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் ஒருவர் எப்படி தலைவராய் மாற முடியும் ....?
  2. உங்களின் கட்டுரைப்படி கூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்ததாக வைத்து கொள்ளுவோம்  , மத்திய குழு கொடுத்த 77 பக்கம் பதில்கள் ஏன் மக்களிடம் போய் சேரவில்லை ....?
  3. உங்களின் கட்டுரைப்படி மத்திய அரசும் , மாநில அரசும் மக்களிடம் கெஞ்சி நிற்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு .  ஒரு குற்றமும் அறியாத ஜனங்கள் தங்களை தவறாக வழிநடத்தும் சக்தியின் பின் நிற்பதால் தான் அரசு மக்களை நினைத்து பரிதாபப்படுகிறது . அதனால் தான் அரசுகள் மென்மையாக மக்களை அணுகுகிறது ....
  4. ஜனநாயகத்தை போராட்டங்கள் மூலமாக தான் மேல் எழும்ப செய்யமுடியும் என்ற தங்கள் கருத்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு மாறுபட்டதாய் , மக்களின் தேசிய உணர்வை வளர்க்காமல்  , மக்களை போராட தான் தூண்டுகிறது   இப்படி நாட்டின் உண்மையான , ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவாத உங்கள கட்டுரை பிரசுரிக்கப்படுவத்ர்க்கு இந்த நாட்டை விட்டால் எங்கும் நீங்கள் இப்படி சொல்லமுடியாது ....

நடுநிலை நாளிதழ் என்ற பெயர் பெற்று இருக்கும் தினமணி இப்படி கட்டுரைகளை வெளியிடுவது நல்லது அல்ல.  அப்படி தொடர்ந்து செய்யப்படுமானால் ஒரு சீரற்ற சமுதாயத்தை இந்தியாவில் ஆதரிக்கும் பத்திரிகை என்ற பெயரை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

Thursday 23 February 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் - திரு . உதயகுமாரின் கருத்துகள் - சரியா ...?


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திரு . உதயகுமார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தகவலை இன்றைய தேதி தினமணி ( பக்கம் 5 ) ல் வாசிக்க நேரிட்டது .  எப்படி எல்லாம் திரு . உதயகுமார் மக்களை திசை திருப்புகிறார் என்ற யோசனை மேலோங்கியத்தின் விளைவு தான் இந்த பதிவு .
 
 
 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான மாற்றங்களை செய்து இயற்க்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என திரு . உதயகுமார் தெரிவித்து உள்ளார் . 
 
சாத்தியம் இல்லாத இந்த தகவலை ஏற்கெனவே போராட்ட குழுவின் நிபுணர் குழு கூறி உள்ளதால் அதற்க்கு இந்த வலைப்பூவில் தெளிவான தகவல்களுடன் "மக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு - ஒரு பார்வை" என்ற தலைப்பில் , மக்களை தவறான தகவல்களை கூறி குழப்புவதை நான் எழுதி இருக்கிறேன் .  
 

இந்தியாவில் மொத்தம் 5500 MWe மின்சாரம் இயற்க்கை வாயு மூலம் தயாரிக்கும் மின் நிலையங்கள் உபயோகத்தில் உள்ளது .  கிட்டத்தட்ட 4000 MWe மின்சாரம் எரிவாயு மூலம் தயாரிக்கும் மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளது .   நாள்தோறும் 35 மில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்த மின் திட்டங்களுக்கு தேவையான எரிவாயுவை சந்திக்க முடியாததால் மற்ற தொழில்களுக்கு பயன்படும் சுமார் 7 35 மில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயுவும் மின்திட்டங்களுக்கு திருப்ப வேண்டும் என்று சென்ற புதன் கிழமை அன்று அணில் அம்பானி குழுமத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது .  ( நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்   ,  தேதி 23 . 02 . 2012  , பக்கம் : 13 ).


தற்பொழுது இருக்கும் மின் திட்டங்களுக்கே எரிவாயு பற்றாக்குறை இருப்பதை திரு ,. உதயகுமார் உணரவில்லையா ...? அல்லது உணர்ந்து கொள்ளாதது போல பேசுகிறாரா ...?
 

சுற்று சூழல் பாதிக்கப்படும் என்று அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும் டாக்டர் . உதயகுமார் அவர்கள் , எரிவாயு மின் நிலையங்கள் மூலமாக வெளியிடப்படும் வாயுக்கள் சுற்று சூழலை கெடுக்காது என்று சொல்லுகிறாரா ...? அதனால் ஏற்ப்படும் புவி வெப்பமயமாதலின் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து கடலோர கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதே ...? அது திரு ,. உதயகுமாருக்கு தெரியாதா ...? இல்லையெனில் இதை கூறினால் மக்கள் போராட்டத்தை விட்டு விடுவார்கள் என வேண்டும் என்றே மறைக்கிறாரா ...?


மாண்புமிகு தமிழக முதல்வர்  அமைத்த குழுவை வரவேற்கிறோம் என்றும் தமிழக முதல்வர்  அவர்களை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறிய திரு . உதயகுமார் தமிழக குழு அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கொடுத்த அறிக்கையை எதிர்ப்பதும்  , சங்கரன் கோவில் இடைதேர்தலுக்கு முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்ததும் , தமிழக முதல்வருக்கு விடப்பட்ட சவால் அல்லாமல் வேறு என்ன ..?  சென்று போன உள்ளாட்சி தேர்தலை தனக்கு சாதகமாக்கி போராட்டத்தை தீவிரப்படுத்தி கொண்ட அவர் இப்பொழுதும் அரசியல் சதுரங்கத்தில் மக்களை பலியாக்குவதும் என்ன நியாயம் ....?
 
 
கிராமத்து மக்களிடம் கருத்து கேட்காததால் மாநில குழுவை புறக்கணிக்கிறோம் என்று சொல்லும் திரு . உதயகுமார் , பள்ளி செல்லும் மாணவர்கள் முதலாக அணுமின் நிலையங்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பை அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்தீர்களே .... கிராமத்து மக்கள் என்ன சொல்லுவார்கள் என்பது மாநில குழுவுக்கு தெரியாதா என்ன ...?
 
 
 திரு . உதயகுமார் இடத்திற்கு இடம் மாற்றி பேசும் நல்ல பேச்சாளராக இருக்கலாம் , ஆனால்  தன்னை நம்பி கூட வரும் மக்களை தவறாக வலி நடத்தும் மோசமான தலைவர் என்பதை மக்கள் எப்பொழுது உணருவார்கள் ....? பார்க்கலாம் .... காத்திருந்து .....?




Sunday 19 February 2012

22000 MWe மின்சாரம் குறையுமா ...? - ஒரு அதிர்ச்சி தகவல்


மின்தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாட்டின் மின் தேவையை சந்திப்பதற்காக அரசும் பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது .  இந்த சூலில் ஏற்க்கனவே அமைக்கப்பட்டு இருக்கும் 22000 MWe மின்சாரம் தடைபடும் நிலை உருவாகி உள்ளது .
 
 
 

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 66 சதவீதம் அனல் மின்சாரம் மூலம் தயாரிக்கப்பட்டு  வருகிறது .  இந்த அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியின்  மூலமும்  , வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதின் மூலமும் சந்திக்கப்பட்டு வருகிறது .  இந்த நிலையில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ள செய்தி குறிப்பின் படி கடும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் 22000 MWe மின்சார உற்பத்தி பதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார் .
 
 

11 ம் ஐந்தாண்டு திட்டத்தின் போது  ( இந்த வருடம் மார்ச் 31 ம் தேதி வரை )  , கிட்டத்தட்ட 700 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது .  ஆனால் இன்றைய தேதி வரை 560 மில்லியன் டன் நிலக்கரி மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது .  கிட்டத்தட்ட 140 மில்லியன் டன் நிலக்கரி குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது .  இந்த கடும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏறக்குறைய 22000 MWe மின்சாரம் தயாரிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது .
 
 
உள்நாட்டில் உற்பத்தி  செய்யப்படும் நிலக்கரியின் 70 முதல் 72 சதவீதம் அனல் மின் நிலையங்களுக்கும்  , மீதம் உள்ள நிலக்கரி மற்ற தொழில் நிறுவனங்களுக்கும் ( சிமெண்ட் மற்றும் சில ) பயன்படுத்தப்படுகிறது .  அந்த 28 சதவீதம் நிலக்கரியும் மின் நிலையங்களுக்கு பயன்படுமானால் மற்று தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு , பொருளாதாரத்தின் சரிவு உண்டாகும் .
  ( Source :  The Indian express , Dt. 20.02.2012 , Page No : 13)


நாடு இப்படிப்பட்ட சூழலில் போய் கொண்டு இருக்கும் போது , அனல் மின்சாரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறையும் வாய்ப்பு ஏற்ப்படும் .  ஆனால் மின்தேவையோ ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டு இருக்கிறது .  இந்த மாதிரி சூழ்நிலையில் , மிகவும் பாதுகாப்பான , சுற்று சூழலுக்கு பாதுகாப்பான அணுமின் நிலையங்களை வரவேற்ப்பதில் நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும் ...?
 

Saturday 18 February 2012

மக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு - ஒரு பார்வை


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் போராட்ட குழுவினர் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது நாம் எல்லாரும் அறிந்த விடயமே .  ஆனால் இந்த போராட்ட குழுவின் நிபுணர் வாதங்களை நாம் கவனித்து பார்த்தால் , இவர்கள் மக்களை வேண்டும் என்றே ஏமாற்றி போராட தூண்டுகிறார்கள் எனவும் , இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையும் நாம் விளங்கி கொள்ள முடியும் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாகவோ அல்லது இயற்க்கை எரிவாயுவில் மின்சாரம் தயாரிக்கும் ஆலையாகவோ மாற்றலாம் என்பது தான் திரு . உதயகுமாரின் புத்திசாலி நிபுணர் குழு சொல்லி உள்ள யோசனை .  இதற்க்கு ஆதாரமாக அமெரிக்காவில் லில்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அணுமின் நிலையம் ,  இயற்க்கை எரிவாயு தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டதாக கூறுகின்றனர் .   கூடங்குளம் பகுதியை சேர்ந்த மக்களிடம் இப்படி சொல்லி அணுமின் நிலையங்களை குறித்த ஒரு வித அச்சத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் .    இது குறித்து பதிவுலகிலும் DIANUKE என்ற வலைப்பூவில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது .  தகவலுக்கு : http://www.dnaindia.com/india/report_kudankulam-nuclear-power-plant-can-be-converted-into-a-thermal-power-station-protestors_1601295 
 இவர்கள் சொல்லி வரும் இந்த மாதிரி கருத்துகளை படித்தால் எனக்கு கொஞ்சம் வேதனையாகவும் , கொஞ்சம் ஆத்திரமாகவும் உள்ளது .   அணுமின் நிலையங்கள் என்று சொல்லப்படுவது விசேட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை .  அப்படி உருவாக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் யுரனியம் எரிபொருளுக்கு பதிலாக எரிவாயுவையோ அல்லது நிலக்கரியையோ பயன்படுத்த முடியாது என்பது ஆணித்தரமான உண்மை .  அது எப்படி என்று நீங்கள் கேட்டால் ,,  நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் ..... ஒரு மின்சார அடுப்பில்  , LPG வைத்து சமைக்க முடியுமா அல்லது ஒரு LPG அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்வீர்களா ..?  ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில் நுட்பம்.

சரி.  உண்மையில் அப்படி வாய்ப்பு ஏதும் இருக்கிறதா என்று நாம் அறிந்து கொள்ளவேண்டுமானால் , ஒரு காரியத்தை நாம் விளங்கி கொள்ளவேண்டும் .  அணுமின் நிலையங்களில் பொதுவாக இரண்டு அமைப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை .  ஓன்று அணுப்பிளவு வினைகள் நடக்கும் Reactor building இன்னொன்று விசையாழியை ( Turbine ) சுற்ற வைக்கும் Turbine building .  அனல்  மின் நிலையங்களிலும் Turbine building உள்ளது .  சரி அப்படியானால் இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் Reactor building முழுவதும் அகற்றி விட்டு ( படத்தில் வட்டமாக இருக்கிறதே ) ,  அனல் மின் நிலையத்திற்காக புதிய கொள்கலன் கொண்ட Building யை அமைக்கவேண்டுமாம் . அட கொடுமையே ..... என்று நீங்கள் யோசித்தால் , இன்னும் ஓன்று நான் சொல்லுகிறேன் . அனல் மின் நிலையங்கள் உருவாக்கும் நீராவி , அனல் மின் நிலையங்களின் நீராவியை விட சக்தி குறைந்தவை . அப்படி எனில் Turbine building ல் உள்ள கருவிகளையும் மாற்ற வேண்டும் .  மொத்தத்தில் என்ன அர்த்தம் என்றால் முழு அணுமின் நிலையத்தையும் எடுத்து விட்டு அதற்க்கு பதிலாக அனல் மின் நிலையம் கட்டப்பட வேண்டும் என்பது தான் அவர்கள் கோரிக்கை .  சரி .....நிபுணர் குழுவே ..... நீங்கள் ஏன் இந்த ரகசியங்களை மக்களிடம் சொல்ல வில்லை ..  சொன்னால் மக்கள் உங்களை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயமா ...?
  ஏன் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என்ற காரியத்தை நான் புள்ளி விவரமாக " அணுமின்சாரம் தேவையா ...?" என்ற பதிவில் எழுதியுள்ளேன் . பாருங்கள் 

சரி ..... அணுமின் நிலையத்தினால்  கடலோர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முகமூடியை அணிந்து கொண்டு வந்து உள்ள போராட்ட நிபுணர் குழுவுக்கு நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் .....

  • அனல் மின்நிலையம் அமைக்கலாம் என்று ஆலோசனை சொல்லும் நீங்கள் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எங்கிருந்து பெற்று தருவீர்கள் ....?  உள்ள அனல் மின் நிலையங்களுக்கே கரி இல்லையே ...
  • எரிவாயு நிலையம் அமைக்கலாம் என்று சொல்லும் நீங்கள் வீடுகளுக்கு ஒழுங்காக கொடுக்கும் அளவுக்கு எரிவாயு நமது நாட்டில் கிடைக்கிறதா என்பதை ஏன் யோசித்து பார்க்கவில்லை ...?
  • அனல் மின் நிலையம் மூலம் வெளியிடப்படும் grean house gases மூலமாக புவி வெப்பம் அடைந்து , பனிக்கட்டிகள் உருகி கடம் மட்டம் ஆண்டுக்கு 2  அடி உயருமே ... அப்பொழுது கடலோர கிராமங்கள் எல்லாம் கடலில் மூழ்கி போகுமே ..... அதை ஏன் மக்களிடம் சொல்லவில்லை ...? சொன்னால் உங்கள்  அக்கறை மக்கள் மீது இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள் என்ற பயமா ...?
  • Cancer , கதிர்வீச்சு என்று அணுமின் நிலையங்களை குறித்து பீதி கிளப்பி வரும் நீங்கள் ,  அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தும் நிலக்கரியில்  கலந்திருக்கும் தோரியம் தாதுக்கள் உபயோகத்திற்கு பிறகு நிலக்கரி சாம்பலுடன் அப்படியே இருந்து விடுவதால் , வெளிப்படும் கதிர்வீச்சு பலமடங்கு இருக்குமாமே ( http://www.scientificamerican.com/article.cfm?id=coal-ash-is-more-radioactive-than-nuclear-waste ) . அதை நீங்கள் ஏன் சொல்லவில்லை ?  சொன்னால் உங்களின் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ...?

நிபுணர் குழு என்ற பெயரில் போராட்ட குழு மக்களை அச்சத்தில் ஆட்படுத்தி வைத்து இருக்கிறதே தவிர .. வேறு ஒன்றும் இல்லை .  உண்மையில் மக்களின் மேல் அக்கறை இருந்தால் அணு விஞ்ஞானி உதயகுமாரும் , அணு விஞ்ஞானி பரமேஸ்வரனும்  , அணு விஞ்ஞானி புகழேந்தியும், அணு விஞ்ஞானி புஷ்பராயனும்  இந்த கேள்விகளை கேட்டு இருப்பார்கள் .  உங்கள் அக்கறை எப்படியாவது மக்களை குழப்பதிற்குள் ஆழ்த்தி இந்திய நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதே .....


இந்த போலிகளின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும்  , மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை , ஏக்கமும் கூட ....

Friday 17 February 2012

மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே ..............


தமிழக அரசு எந்திரத்தின் எல்லா துறைகளும் இப்பொழுது சங்கரன்கோவிலை தான் சுற்றி சுற்றி வருகின்றன .  முன்னாள் கால்நடை துறை அமைச்சர் திரு . கருப்பசாமி புற்று நோயால் மரித்த பிறகு ,  இடைதேர்தல் அவரின் தொகுதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதே அந்த பரபரப்புக்கு காரணம் .  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் , மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அவர்களும் காரசாரமாக சட்டசபையில் மோதி கொண்டதும் , அனைவரின் கவனத்தையும் இந்த தொகுதியின் பால் ஈர்த்திருக்கிறது .
 
 
 
 சங்கரன்கோவில் இடைதேர்தலில் 5  முனை போட்டி நிலவ போகிறது .  அதிமுக , திமுக ,  தேதிமுக , மதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளது .  இவர்களில் யாரை MLA ஆக தேர்ந்தெடுக்க போகிறார்கள் , மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்கள் என்பதை கொஞ்சம் அலசி பார்க்கலாம் ..
 
 
 பாஜக -  இந்த தேர்தலில் வேட்பாளரை அறிவித்து இருப்பது கொஞ்சம் ஆச்சரியம் தான் .  ஏன் எனில் மத்திய மற்றும் மாநில பாஜக நிர்வாகிகள் அதிமுக கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கை அளவில் ஒற்றுமை இருப்பதாகவும் , கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லி கொள்ளும் நிலையில் பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது அதிமுக வுக்கு எதிரான வாக்குகளை சிதற செய்யும் நோக்கம் என்பதை நாம் மறுக்க முடியாது .
 

மதிமுக  -  இந்த கட்சியின் நிலை என்ன என்பதை நினைத்து மக்களே கொஞ்சம் குழம்பி போய் தான் உள்ளார்கள் . காரணம் பஸ் கட்டணம் , பால் விலை உயர்த்தப்பட்ட பொழுது மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த போகிறேன் என்று சவால் விட்டவர் , அம்மாவுக்கு பயந்தோ என்னவோ சவாலை காற்றிலே பறக்க விட்டு விட்டார் .  இவர் எப்படி சங்கரன்கோவிலை காப்பாற்றுவார் என்ற எண்ணத்தினால் புரட்சி புயலுக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் .
 
 

தேதிமுக :  இந்த கட்சியின் மிக பெரிய பலமே அதன் தலைவர் தான் .  அதே போல மிக பெரிய பலவீனமும் அவர் தான் .  சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த புதிதில் அவரை ஆதரித்த அநேகர் அவரின் அரசியல் பேச்சுகளை கண்டு ( ? ) ஒதுங்கியுள்ளனர் .   சட்டசபையில் வீராவேசமாக பேசிய திரு . விஜயகாந்த் , அம்மாவின் சவாலுக்கு ( சங்கரன்கோவில் ஜெயிக்க முடியுமா ..?)  நேரடியாக சவால் விடாமல் , கவர்னர் ஆட்சி இருந்தால் ( எப்படியும் வராது என்ற தைரியம் ) போட்டியிட தயார் என்று அறிவித்ததில் இருந்து சங்கரன்கோவிலில் அவரால் முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது .
 
 

திமுக :  திமுக தலைவர் அவர்களின் இரு புதல்வர்களினால் கட்சியின் நிலைப்பாடே ஆட்டம் கண்டிருக்கிற இந்த நிலையில் ,  இந்த இடை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று அஞ்சா நெஞ்சன்  அழகிரி தெரிவித்து  இருக்கிறார் .. ஆனாலும் தொடர்ச்சியாக திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போய் கொண்டு இருப்பதால் , தொகுதி வேலையை பார்ப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .



அதிமுக  :  தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 26 அமைச்சர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றையும் இந்த கட்சி அறிவித்து உள்ளது . ( அமைச்சர்களுக்கு வேறு வேலை இல்லையா என்று நீங்கள் கேட்ககூடாது ) .  சங்கரன்கோவில் மாண்புமிகு வாக்காளர்களை கவர்வதற்காக அரசின் இலவச திட்டங்கள் , மிக்சி ,  Grinder எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது ( அப்போ ... மின்சாரம் என்று கேட்கக்கூடாது ) .  இந்த இடை தேர்தல் அரசின் மானப் பிரச்சினை  என்பதால் அனைத்து வழிகளையும் பின்பற்றி வெற்றி என்ற முனைப்போடு களம் கண்டுள்ளது ...
 
 
மாண்புமிகு வாக்காளர்களின் நிலை என்னவாய் இருக்கும் என்று யோசித்து பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது .
  •  அதிமுகவை தவிர யார் வெற்றி பெற்றாலும் சட்டசபையில் உட்கார கூடமுடியாது  என்பதை மக்கள் அறிந்து உள்ளார்கள் .
  • சாத்தான்குளத்தை தேவன்குளமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என்பதயும் மக்கள் அறிந்து உள்ளார்கள் .
  • தேர்தல் தேதி 18 ( 1 + 8 = 9 ) , அட ஆமாங்க ...அம்மாவின் ராசி தேதி . எப்படி தான் இப்படி எல்லாம் தேர்தல் கமிசன் கூட யோசித்து தேதி அறிவிக்கிறார்களோ என்று கூட குரல் எழும்புகிறது ...
  
அட ... முடிவு தான் என்னய்யா ...? என்று நீங்கள் கேட்டால் ... கிடைப்பதை                ( ? .....!  )  வாங்கி கொண்டு மீண்டும் ஆளும் கட்சிக்கே வாய்ப்பளிக்க தீர்மானம் செய்வது தான் சரியான வழி என்று தான் நினைக்கிறார்கள் .  எப்படியும் இந்த MLA வும் சட்டசபையில் போய் மேஜையை மாத்திரம் தட்டுவார் என்பதை அறிந்த பிறகும் .....
 

Thursday 16 February 2012

ஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை


சமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது .  சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் .  இன்றைய நாளேடுகளின் மூலம் , ஆசிரியர் அடித்தால் ஒரு மாணவன் தூக்கு போட்டு இறந்த செய்தியை அறிந்தேன் .  ஒரு பக்கம் மாணவர்கள் ஆசிரியர்களையும் , மறுபக்கம் ஆசிரியர்கள பாதுகாப்பற்ற சூழ்நிலை என்று மாணவர்களையும் குறை சொல்ல ,  உண்மையில் ஆசிரியர் - மாணவர் உறவு எப்படித்தான் உள்ளது என்று யோசித்து பார்த்தேன் .. இந்த பதிவை எழுதுகிறேன் 




மாதா , பிதா , குரு , தெய்வம்  என்று ஆசிரியர்களை தெய்வத்திற்கு முன்பு வைத்து சொல்லப்பட்டிருக்கிற தமிழ் மொழியினை நாம் அறிவோம் .  வீட்டில் தாய் , தந்தையுடன் கழிக்கும் அதே அளவு பொழுதை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடனும் கழிக்கிறார்கள் .  8 மணி நேரம் பள்ளியில் ஆசிரியர்களுடனும் , 8 மணி நேரம் தூக்கத்திலும் , மீதி 8 மணி நேரம் வீட்டில் பெற்றோர்களுடனும் மாணவர்கள் கழிக்கிறார்கள் .  எனவே பெற்றோரை போலவே ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்கள் தெய்வத்திற்கு முன்பு வைக்கப்பட்டனர் .



நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது எங்களுக்கு இருந்த ஆசிரியர்கள் ,  பெற்றோரை போலவே எங்களை பார்த்து கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல .   அன்பிலும் ,  கண்டிப்பிலும் , கவனிப்பிலும் ,  ஆரோக்கியத்திலும் .... எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு பெற்றோர் போலதான் .  எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது .  எனது முதல் வகுப்பு ஆசிரியை ( தற்பொழுது மறைந்து விட்டார்கள் ) மாணவர்களை மடியில் வைத்து தான் அ , ஆ  எழுத சொல்லி தந்தார்கள் .   யாருக்காவது  உடல் நலம் சரி இல்லாமல் போனால் , தோளில் தூக்கி வைத்து அரவணைத்து இருக்கிறாகள் .  அவர்களை பார்க்கும் பொது எங்களுக்கு பயம் வந்தது இல்லை ஆனால் மரியாதை கலந்த ஒரு வித உணர்வு இருக்கும் .  ஏன் எனில் ஆசிரியர்கள் பணியை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்து வாழ்ந்தார்கள் .


ஆனால் இன்றைய அநேகம் ஆசிரியர்கள் ஆசிரிய பணியை சேவையாக செய்யாமல் தொழிலாக செய்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது .   அன்று எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் மாணவர்களுக்கு சேவை செய்த ஆசிரியர்கள் எங்கே .? இன்று பள்ளிக்கு பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே  ( மாணவர்கள் பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்கு அல்ல ) ஆசிரிய தொழிலில் மாணவர்களை நடத்தும் பள்ளிகள் எங்கே ....?


நான் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம் .  ஆம் ... அன்று அரசு பள்ளிகளில் தான் பிள்ளைகள் படித்தார்கள் . எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை .  ஆனால் ஒழுக்கமும் , கண்டிப்பும்  தாராளமாக இருந்தது .  ஆனால் இன்று புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகி இருக்கின்றன .  மதிப்பெண் என்ற ஒரே காரணத்திற்க்காக ஆசிரியர் , மாணவர் என்ற உறவு சீரானதாய் இராமல்  , அன்பு கலந்த கண்டிப்பு இராமல் , அக்கறையற்ற தண்டனைகள் பெருகுவதால் தான் இப்படி சம்பவங்கள் நிகழ்கிறதோ என்ற ஆதங்கம் எனக்கு ....



இன்றைய நாளேட்டில் ஒரு காரியத்தை பார்த்தேன் .  ஒரு 80 வயது ஆசிரியர் , கடுமையான் உடல் நோயினால் பாதிக்கப்பட்டும்  , என் உயிர் போகும் வரை என் கையில் சாக் பீஸ்  இருக்கும் என்று சொல்லி உள்ளார் . அவரது இளமை காலத்தில் அவரது சேவையினால் உயர்ந்த மாணவர்கள் என்று அவரை சந்தித்து தங்கள் நன்றி கடனை செலுத்தினார்களாம்.  அதில் ஒருவர் அந்த ஆசிரியர் வீட்டிலே தங்கி இருந்த படித்து உள்ளாரர் .  இந்த மாதிரி பெருந்தன்மையுள்ள , தன்னலமற்ற  , சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர்களை மனமார வணங்கும் நான் அதே நேரத்தில் மற்றவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன் , "  ஆசிரிய பணி தொழில அல்ல அது ஒரு சேவை .... ஒரு நாட்டின் தூண்கள் உங்கள் கைகளில் தான் .  அவர்கள் தவறு செய்தாலும் , அன்புடன் நல்வழி படுத்தும் பொறுப்பும் கடமையும் உங்களுடையதே ....."

Tuesday 14 February 2012

கூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்ச உணர்வு கொண்டு போராடி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த காரியமே .   ஆனாலும் எனக்கு இதுவரை விளங்காத ஒரு காரியத்தை சென்ற சில நாட்களில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .  கூடங்குளம் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் ஒரே சமயத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றேன் ...

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை குறித்து பதிவுலக நண்பர்கள் எழுதும் பொழுது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மக்கள் போராடுகின்றனர் என்று எழுதி வந்தனர்.   இந்த காரியத்தை குறித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் அநேகம் உண்டு .  ஏன் எனில் , போராட்டத்தில் இருக்கும் இடிந்தகரை என்ற கிராம மக்கள் மீன்பிடி தொழிலை மாத்திரம் செய்து வருகிறவர்கள் . அவர்கள் கடலை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்துகிறவர்கள் .   இவர்கள் அணுமின் நிலையத்தினால் தங்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்று அச்சப்பட்டார்கள் .  ஆனால் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன் .   கடல் சார் வாழ்வும் , அணுமின் நிலையமும் என்ற இடுகையை காணுங்கள் .
கூடங்குளம் பகுதி மக்கள் கடல் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் மீன்பிடி தொழில் செய்கிறவர்கள் அல்ல .  அணுமின் நிலைய பணிகள் ஆரம்பிக்கப்படுவதர்க்கு முன்பு வரை கூடங்குளம் பகுதியின் பெரும்பாலான மக்களின் தொழில் என்னவெனில் பீடி சுற்றுதல் என்பது தான் உண்மை .  ஆண்கள் பெரும்பாலோர் சென்னை , மும்பை பகுதிகளில் வேலை பார்த்து வந்தார்கள் என்பது உண்மை .   எப்படி இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுகிறார்கள் என்பது தான் எனது நீண்ட நாள்   வியப்புக்கு காரணம் .


என்னோடு கூட பயணம் செய்த அந்த கூடங்குளம் நண்பரிடம் இந்த கேள்வியை கேட்டபொழுது , அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியபடுத்தியது .  கூடங்குளம் மக்கள் தாங்கள் வாழ்ந்து வருகிற வீட்டையும் , தங்களின் நிலங்களையும் ரொம்ப நேசிக்கிறவர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.  நான் சொன்னேன் , " அதில் என்ன வியப்பு இருக்கிறது . எல்லாரும் அவரவர் வீட்டையும் , நிலங்களையும் நேசிக்க தான் செய்வார்கள் " என்று .  அவர் சொன்னார் , " அப்படி இருக்கும் பொழுது , எங்கள் வீட்டை விட்டு எங்களை காலி பண்ண சொன்னால் நாங்கள் எப்படி பொறுத்து கொள்ளுவோம் ?" என்று .


என ஆச்சரியம் பல மடங்கு ஆனது .  நான் கேட்டேன் , " நண்பர் என்னை தவறாக நினைக்க கூடாது ,  நீங்கள் வீட்டை காலி பண்ணவேண்டும் என்று உங்களுக்கு சொன்னது யார் ?" என்று கேட்டேன் .  அவர் சொன்ன பதில் , " கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட பிறகு , நாங்கள் எல்லாரும் எங்கள் வீடுகளை காலி பண்ண வேண்டும் .  எங்கள் வீடுகளை விட்டு விட்டு நாங்கள் எங்கே போவோம் ...?  மாத்திரமல்ல எங்கள் எல்லாருக்கும் கான்சர் வியாதி வந்துவிடும் , எங்கள் பிள்ளைகள் எல்லாம் ஊனமாக பிறக்கும் . அது குறித்து எல்லாம் எங்கள் போராட்டத்தில் திரு . உதயகுமார் தெளிவாக சொல்லியுள்ளார் " என்றார் .

 
இப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன் , ஏன் கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் என்பதை .  நான் அவரிடம் சொன்னேன் , " நண்பரே ... உங்கள் யாருடைய வீட்டையும் நீங்கள் காலி பண்ண வேண்டிய அவசியம் இல்லை .  நீங்கள் அதே இடத்தில வசிக்கலாம் " என்று .  அவர் கேட்டார் , " உங்களுக்கு என்ன தெரியும் . 1988 ல் அரசின் ஆணை இருக்கிறதாம் . 2 KM  க்குள் யாரும் வசிக்க கூடாதாம் . 5 KM க்குள் மொத்த மக்கள் தொகை 10000 தான் இருக்கவேண்டுமாம் . அப்படி எனில் சொல்லுங்கள் ...எங்கள் ஊரில் நாங்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம் தெரியுமா? " என்று .

நான் சொன்னேன் , " நண்பரே 1 . 6 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) யாரும் வசிக்க கூடாது என்பது உண்மைதான் . அதனால் தான் அந்த பகுதிகள் எல்லாம் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டு இருக்கும் .  5 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) ஒரு இடத்தில 10000 பேர் இருக்கலாம் . மொத்த மக்கள் தொகை அல்ல.  அதுவும் இயற்கையாக  பெருகும் மக்கள் தொகை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது .   It is wriiten , " Population center may be 10000 , However , natural growth is allowed .  உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன் .  அவர் சொன்னார் , " இது மாதிரி போராட்டத்தில் சொல்லவில்லையே என்று .  நான் சொன்னேன் , " ஐயா , இந்த கேள்வி போராட்ட குழுவினர் , மத்திய குழுவிடம் கேட்ட 50 கேள்விகளில் இடம் பெறவில்லை தெரியுமா ? " என்று .  அவர் அதிர்ந்து போனார் .

 நான் தொடர்ந்து கேட்டேன் , " நண்பர் என்னை மன்னிக்க வேண்டும் ...! திரு . உதயகுமார் மத்திய குழுவிடம் அளிப்பதற்காக 50 கேள்விகளை கேட்போம் . அவற்றிற்கு மத்திய குழு அளிக்கும் பதில்களை மக்களிடம் கொண்டு செல்லுவோம் . மக்கள் திருப்தி அடைந்தால் போதும் என்று சொன்னாரே ...... உங்களிடம் அந்த பதில்களை காண்பித்தாரா / சொன்னாரா ...?."   அவர் சொன்னார் " இல்லை ..." .  நான் மறுபடியும் கேட்டேன் , " சரி .... பரவாயில்லை அவர் எந்த 50 கேள்விகளை கேட்டார் என்பதாவது  உங்களுக்கு தெரியுமா " .  அவர் சொன்னார் , " அதுவும் தெரியாது . ஆனால் சில கேள்விகளுக்கு மாத்திரம் அரசு பதில் கொடுக்கவில்லை " என்று.


நான் அவரிடம் பேசிய அநேகம் காரியங்களில் அவர் திருப்தி அடைந்தாரோ , இல்லையோ என்பது எனக்கு தெரியவில்லை .  ஆனால் எனக்கு சில கேள்விகள் தோன்றியது .....

1 .  கூடங்குளம் மக்களை காலி செய்து விடுவீர்களா ..? என்று போராட்ட குழு மத்திய குழுவிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை ..? அப்படி கேட்பது அபத்தம் என நினைத்தார்களா ...? அல்லது ..அந்த கேள்விக்கு மத்திய குழு அளிக்கும் பதிலினால் மக்கள் போராட்டத்தை விட்டு விடுவார்கள் என்ற பயமா ...?

2 .  என்ன கேள்விகள் மத்திய குழுவிடம் கேட்டார்கள் என்றே மக்களுக்கு தெரிவிக்காத போராட்ட குழு ,  மத்திய குழு அளித்த பதில்களையாவது முன்னரே சொன்ன படி மக்களிடம் கொண்டு போய் இருக்கலாமே ...?  வேடம் களைந்து போய் விடும் என்ற பயமா ....?

3 . மக்களின் இருப்பிடம் காலி செய்யப்படாது என்று அரசு பகிரங்கமாக அறிவித்த பிறகும் , மக்கள் இன்னும் அந்த பயத்தை கொண்டிருக்கும் காரணம் என்ன ...?. 

4 .  அவசர கால ஏற்பாடுகளை குறித்து மத்திய குழுவிடம் கேள்வி கேட்டுள்ள போராட்ட குழு , அந்த ஏற்பாடுகளை மக்களிடம் வித்தியாசமாக சொல்லி , பயம் காட்டின மர்மம் என்ன ....?

கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .  காத்திருப்போம் பொறுமையுடன் .....

Saturday 11 February 2012

ஒய் திஸ் கொலைவெறி - ஒரு பார்வை

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது .  9 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் 14 தடவை குத்தி கொலை செய்திருக்கிறான் .  இந்த செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது .  உடனடியாக ஒரு பதிவு எழுத முற்பட்டேன் . ஆனால் சமயம் வாய்க்காததினால் கொஞ்சம் பிந்தி விட்டது .


வளரும் இந்தியாவின் மிக பெரிய தூண்கள் என்று அழைக்கப்படும் மாணவ சமுதாயம் இந்த நாட்களில் போகும் பாதை சரிதானா ...? என்ற கேள்வி எங்கும் தொனிக்கிறது ....  மாணவர்கள் TV பார்க்கிறார்கள்  , கொலை , குத்து போன்றவற்றை சினிமாவில் பார்க்கிறார்கள் ... அதனால் தான் கேட்டு போகிறார்கள் என்று ஒரு பொதுவான கருது வைக்கப்பட்டாலும் , இந்த இளம் சமுதாயத்தை தவறான பாதையில் நாம் தான் வழிநடத்துகிறோம் என்ற உண்மையை நாம் அறிந்தால் அதிர்ச்சியாக தான் இருக்கும் ...


சமீப காலமாக தமிழ்நாட்டில் நடக்கும் எந்த போராட்டங்களிலும் , மாணவ செல்வங்களை அதிகமாக காண முடிகிறது . இது ஒரு ஆணித்தரமான உண்மை .  கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்லது மனித கேடயம் போல அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற காரணத்தினாலோ மாணவர்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் .  ஆனால் யாரும் இதை கண்டுகொள்ளுவதில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை .


நீங்களே யோசித்து பாருங்கள் ... பள்ளி சென்று , கற்று , ஒழுக்கத்தையும் கீழ்படிதலையும் பெற்று சமுதாயத்தின் தூண்களாய் மாற வேண்டிய இளம் குருத்துகள் , தவறான மனிதர்களால் போதிக்கப்பட்டு , தவறான கொள்கைகள் கற்பிக்கப்பட்டு , கற்று தரவேண்டிய காரியங்கள் இழந்து போய் , சீரழிக்கப்பட்டு வருகின்றனர் .   ஒரு வேளை இது பார்ப்பதற்கு அருமையாக இருக்கலாம் .  ஆனால் இந்த சமுதாய சீரழிவு வெளிச்சத்திற்கு வரும் பொழுது , அதன் முடிவு பரிதாபமாக இருக்கும் .


சமீபத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக மக்களை போராட தூண்டும் கூட்டம் குறி வைத்து இருப்பதும் இந்த மாணவர்களை தான் என்பது தான் எனது எண்ணம் .  எந்த போராட்டமாய் இருந்தாலும் , மாணவர்களை முன்னாள் நடக்க சொல்லும் , இந்த கயவர்கள் , இந்த நாளைய தலைமுறையின் சீரழிவுக்கு பொறுப்பு ஏற்பார்களா என்றால் இல்லை ..... நான் சொல்லும் காரியம் ஒரு அபாண்டமாய் தோன்றலாம் .. ஆனால் உண்மை அநேக நேரங்களில் கசக்க தான் செய்யும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது ..


இந்த இந்தியனின் கோரிக்கை ஒன்றே ஓன்று தான் ... நீங்கள் இந்த வளரும் சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை , இவர்கள் வாழ்வு மாத்திரமல்லாமல் , இந்திய குடியரசின் எதிர்காலத்தையே நாசமாக்கும் வழிகளில் இவர்களை நடத்தாது இருங்கள் என்பதே .....

Wednesday 8 February 2012

மின்வெட்டா ....? மின்சாரமா .....? - பரிதாப தமிழகம்

 இன்றைய தமிழகத்தின் நிலையை என்னை அல்லவா அல்லது சிரிக்கவா என்று தெரியாத நிலையில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் .  கடும் மின்வெட்டில் தவித்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் , வெயில் ஏற ..., ஏற ....எங்கும் மின்சாரதிர்க்காக குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது . 
 
 
 
கோவை மாநகரில் கடும் மின்சார தட்டுப்பாட்டினால் குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தினமும் சுமார் 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகின்ற காரணத்தினால் வரும் 10 ம தேதி அன்று 35 ஆயிரம்  முதல் 40 ஆயிரம் தொழிறசாலைகள் மூடப்படுகிறது . சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடக்க இருக்கிறதாம் .( Source : தினகரன் , பக்கம் 5 , தேதி 08 - 02 - 2012 )
 
 
தினமும் எட்டு மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் , தினமும் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது . .( Source : தினகரன் , பக்கம் 4 , தேதி 08 - 02 - 2012 )
 
 
 கடும்  மின்வெட்டு நிலவுவதால் , 10 ம வகுப்பு மற்றும் 12 ம வகுப்பு பொது தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லுகிறது.
 
 
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி  வரும் திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 MWe மின்சாரம் வழங்கவேண்டும் " என்று .   சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும் என்பது ஐயாவுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
 
 
 
சரி ....நமது அரசியல் தலைவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால்...... சிங்க தமிழனும் , தானை தமிழனும் , நாம் தமிழனும் இருக்கிற இடமே தெரியவில்லை .  இவர்களுக்கு மின்சாரம் தேவையா என்ன .....
 
சரி நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது பேசுவார்கள் என்றால் ,  அவர்களுக்கு தலையாய வேலையே மேஜையை தட்டுவது தான் என்று TV யை பார்த்து தெரிந்து கொண்டேன் . 
 
 
சரி .... நமது அமைச்சர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால் ,  26 பேர் பணியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டேன் . கடைசியில் தான் அறிந்து கொண்டேன் .  அவர்கள் sankarankovil தேர்தல் வேளைகளில் இறங்கி உள்ளார்களாம் .  ஏன் என்றால் அது அவர்களின் மான பிரச்சனையாம் ....
 
ஆமாம் .... அது உண்மை தான் ...... நாங்கள் தான் உண்மையான தமிழர்களின் தலைவர்கள் என்று போலி முகம் காட்டும் தமிழர் தலைவர்களை இப்பொழுதும் அசராமல் நம்பும் எங்களை போன்ற தமிழர்களுக்கு ஏது மானம் ....ஏது பிரச்சனை ....?
 
 
இயங்க துடிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வதந்திகளை புறந்தள்ளுவோம் ...... மின் வேட்டை தூக்கி எறிவோம் ....

Monday 6 February 2012

அணுமின் நிலையங்கள் - அணுகுண்டுகள் - ஒரு அறிவியல் பார்வை


அணுமின் நிலையங்கள் குறித்த அநேகம் விடயங்களை நாம் தொடர்ந்து சம்பாஷித்து வருகிறோம் .  அநேகருக்கு இருக்கிற இன்னும் ஒரு முக்கியமான சந்தேகம் என்னவெனில் அணுமின் நிலையங்கள் என்றாலே அணுகுண்டுகள் என்று தான் நினைக்கிறார்கள் .  கூடங்குளம் பகுதி மக்கள் கூட இப்படி சில கேள்விகளை கேட்டதாக நாளேடுகளில் அறிந்தேன் .  இந்த சூழலில் பதிவுலக நண்பர் ஒருவர் இதை குறித்த ஒரு கட்டுரை எழுதலாமே என்று என்னை ஊக்குவித்ததின் விளைவு தான் இந்த பதிவு ...
 
 

அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் இரண்டிலும் யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் போன்ற தனிமங்கள் உபயோகப்படுத்தப்படுவது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் .  கொஞ்சம் விரிவாக நாம் இதை சிந்தித்தால் நல்லது என்று நினைக்கிறேன் ...
 
 

அணுமின் நிலையங்கள் பொதுவாக அணுப்பிளவு வினையின் மூலம் கிடைக்கும் சக்தியை கொண்டு தான் இயங்குகிறது .  இந்த அணுப்பிளவு எனப்படுவது என்னவென்றால் யுரேனியம் அணுவானது ஒரு வேகம் குறைந்த நியூட்ரான் மூலம் தாக்கப்படும் .  அப்பொழுது இந்த உதிரி நியூட்ரானை ஏற்று கொள்ளும் அணுவானது சிதைவடைந்து இரண்டு அணுக்களாக பிரிகிறது .   கூடவே வெப்ப ஆற்றலையும் இரண்டு அல்லது மூன்று புதிய நியூட்ரான்களையும் வெளியிடும் .  அந்த நியூட்ரான்கள்  மறுபடியும் அணுக்களின் மீது மோதி மேற்கண்ட வினையை தொடர்ந்து செய்கிறது .  அது தான் Chain reaction அல்லது தொடர் வினை என்று அழைக்கப்படுகிறது 




சரி இப்பொழுது கவனியுங்கள் ... இயற்கையாக கிடைக்கும் யுரேனியம் ( Natural Uranium ) 0.7% யுரேனியம் 235 மற்றும் 99.3% யுரேனியம் 238 யை உள்ளடக்கியது . இந்த Natural Uranium தான் PHWR போன்ற அணுமின் நிலையங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .  ஆனால் 0 . 7 %  யுரேனியம் 235 மாத்திரம் கொண்ட எரிபொருள் போதுமான அளவு சக்தியை வெளியிடாத காரணத்தால் கூடங்குளம் போன்ற LWR அணுமின் நிலையங்களில் 0.7% யுரேனியம் 235 ,  எரிபொருளில் 4% மாக உயர்த்தப்படுகிறது .  இந்த வேலையை தான் செறிவூட்டல் ( Enrichment ) என்று சொல்லுகிறோம் . 


இனி அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகளுக்கு உள்ள வித்தியாசத்தை கவனித்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன் .
 

1 .  அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்படும் யுரேனியம் 235 -  4 சதவீதம் மாத்திரமே .... ஆனால் அணுகுண்டுகளுக்கு குறைந்தது 90 சதவீதம் யுரேனியம் 235 செறிவூட்டப்பட வேண்டும் .   இப்பொழுது சொல்லுங்கள் அணுமின் நிலையங்கள் எப்படி அணுகுண்டுகளை மாறமுடியும் ?

2 அணுமின் நிலையங்களில் அணுப்பிளவை கட்டுப்படுத்தும் விதத்தில் அணுப்பிளவு வினைகளை உண்டாக்கும் நியூட்ரானை கவர்ந்து கொள்ளுவதற்காக  போரான் மற்றும் காட்மியம்  கட்டுப்படுத்தும் கழிகள் ( Control Rods ) பெருமளவில் அமைக்கப்பட்டிருக்கும் .  ஆனால் அணுகுண்டுகளுக்கு அப்படி கட்டுப்படுத்தும் கழிகள் எதுவும் இல்லை .
 
 
3  அணுமின் நிலையங்களில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நடக்கும் . அதற்காக பல மடங்கு  , பல அடுக்கு பாதுகாப்பு கருவிகள் உள்ளது . ஆனால் அணுகுண்டுகளுக்கு அப்படியில்லை ..


இப்பொழுது ஒரு சில பேருக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாம் .  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் புளுடோனியம் 239 என்ற தனிமம் கிடைக்குமே . அதை கொண்டு அணுகுண்டு செய்வார்கள் அல்லவா ..? என்று .   இது ஒரு நல்ல கேள்வி என்று தான் நான் சொல்லுவேன் ....
 
 
கூடங்குளம் அணுமின் நிலையம் ஆக்கப் பூர்வ அணுசக்திக்கு மாத்திரம் தான் ( மின்சாரத்திற்கு ) பயன்படுத்தப்படும் .  மாத்திரமல்ல இது IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமையின் ( International Atomic Energy Commission ) நேரடி கண்காணிப்பில் வருவதால் ... இந்த அணுமின் நிலையங்கள் யுரனியம் மற்றும் புளுடோனியம் 239  போன்றவற்றை மின்சாரம் தயாரிக்க மாத்திரம் தான் பயன்படுத்தமுடியும் ....


புளுடோனியம் 239  பயன்படுத்தி எப்படி மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதை நான் ஏற்க்கனவே எழுதியுள்ள " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு " பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன் ....

எனவே அணுமின் நிலையங்கள் நாம் பயப்படுகிறது போல அணுகுண்டுகள் அல்ல ..... அவை பசுமையான மின்சாரத்தை அளவில்லாமல் அள்ளி கொடுக்கும் சுரபிகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இந்தியனின் ஆசை ...

Sunday 5 February 2012

கல்யாண் ஜூவல்லர்ஸ் - புரட்சி போராட்டம் - இது எப்படி இருக்கு ...?


அன்னா ஹசாரே போராட்டம் என்று ஒன்றை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்  ,  இந்தியா முழுவதும் போராட்டம் என்ற வார்த்தை பரவ தொடங்கி விட்டது .  அதிலும் சமீப காலமாக கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்களது நகை கடை விளம்பரதிற்க்காக புரட்சி போராட்டம் என்ற பெயரில் தொலைக்கட்சிகளில் விளம்பரம் கொடுக்கிறது .  அதாங்க ... நம்ம பிரபு வருவாரே ......! அதே தான் ....




கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா முழுவதும் நான்கு மாநிலங்களில் சுமார் 26 நகை கடைகளை கொண்டு இயங்கி வருகிறது .  அதிகபட்சமாக தமிழகத்தில் சுமார் 13 இடங்களில் அதன் கிளைகள் உள்ளது .  சரி அதனால் என்ன ...? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது ..   காரணம் இருக்கிறது  



செய்கூலி , சேதாரம் எல்லாம் மிக குறைந்த விலையில் நகைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தை முன் வைத்துள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவிலே முதன்முறையாக நகை நிறுவனங்களில் சொந்தமாக விமானம் வாங்கியுள்ளது .  பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட Emperor நிறுவன தயாரிப்பான பெனாம் 100  என்ற விமானத்தின் விலை 30 கோடி எனப்படுகிறது .   இன்சூரன்ஸ் , பராமரிப்பு , பைலட் ஊதியம் மற்றும் அலுவலக செலவுகள் சேர்த்து வருடத்திற்கு சுமார் 2 . 5 கோடி செலவாகுமாம் .  ஒரு மணி நேரம் பறக்க சுமார் 50000 ரூபாய் செலவாகுமாம் ...


எனது கேள்வி என்னவெனில் ...... விலை குறைத்து தருகிறோம் என்று சொல்லுகிற நகை நிறுவனம் சொந்த விமானம் வாங்குகிற அளவுக்கு வருமானம் பார்க்கிறது என்றால் அதன் விளம்பரத்தில் உண்மை இருக்கிறதா அல்லது கல்யாண் நிறுவனத்தை விட விலை கூடுதலாக விற்கும் நிறுவனங்களுக்கு அதை விட பல மடங்கு லாபம் வருகிறதா ...?  என்பது தான் 


கல்யாணப் பேச்சை எடுத்தாலே 100 பவுன் என்று இருந்தால்  , இவர்கள் விமானம் என்ன கொஞ்ச நாளில் கப்பலே வாங்கி விடுவார்கள் என்று யாரோ கேட்கிறது போல தெரிகிறது .  கல்யாணம் என்றால் தங்கத்தை பார்க்காதீர்கள் .... தங்க குணம் கொண்ட பெண்களை பாருங்கள் .....

Saturday 4 February 2012

ஜாதிகளும் , மதங்களும் எதற்காக - எனது பார்வை


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது என்றால் கேட்டால் எல்லாரும் கூறும் ஒரே வார்த்தை " இந்தியா " என்பது தான் .  மாத்திரமல்ல ஆயிரக்கணக்கான ஜாதிகளும் , பல்வேறு மதப்பிரிவினரும் வாழ்ந்தாலும் " வேற்றுமையில் ஒற்றுமை " என்ற கோஷம் தான் இந்தியாவை வானுயரம் உயர்த்துகிறது என்றால் அது மிகையாகாது .   ஆனாலும் இந்த ஜாதிகளும் , மதங்களும் ஏன் தான் இந்தியாவில் உள்ளனவோ என்று நினைக்க தோன்றுகிற கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் . 


ஜாதிகள் உருவான கதை :  "  ஜாதிகள் இல்லையடி பாப்பா "  என்ற பாடல் அடிகளை அறியாதோர் யாரும் இருக்க முடியாது .   ஆனால் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இந்த ஜாதி பிரிவினைகள் என்றால் அது உண்மை தான் .   அவரவர் செய்த தொழில் வைத்து தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டதே ஒழிய , பிறப்பாலும் இறப்பாலும் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை , தாழ்ந்தவரும் இல்லை என்பது தான் உண்மை.

  

ஆனால் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது இப்பொழுது .   ஜாதிகளுக்காக கட்சிகள் உருவாக தொடங்கியிருப்பது ஒரு மாபெரும் அபாயத்தின் அறிகுறி என்பதை தவீர நான் சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை .   ஜாதி தலைவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக அப்பாவி ஜனங்களை உபயோகித்து கொள்ளுகிறார்கள் .  நான் சொல்லுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் ... கொஞ்சம் யோசித்து பாருங்கள் ...!  ஜாதி கலவரங்கள் வந்தால் பலியாவது தலைவர்கள் இல்லை .  அப்பாவிகள் மாத்திரமே .....  சாகும் உயிர்களுக்கு  மாலையும்  , கொஞ்சம் போஸ்டர்களும் தான் மிஞ்சும் ... வேறென்ன கிடைக்கும் ..... எதற்கு எடுத்தாலும் ஜாதி பெயரை உபயோகிக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப் படவேண்டும் .

மத்திய அரசு கீழ் ஜாதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற மாயாவதி அவர்களின் குற்றசாட்டு ஒரு உதாரணம் 


சமயங்கள் எதற்க்காக :   சமயம் என்ற சொல் " பக்குவப்படுத்தல் " என்ற பொருள் படுவதாக நான் பள்ளியில் படைத்த பாடத்தை நினைவு கூறுகிறேன் .  ஆனால் இன்றைக்கு நடக்கும் சில காரியங்கள் மக்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்ப்படுத்தும் அபாயம் உடையவையாக இருக்கிறது .  உதாரனத்திற்க்கு  :  கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த போராட்டங்கள் .   திரு .  உதயகுமார் அவர்கள் பேசும் பொழுது  , " சிறுபான்மை சமுதாயத்திற்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை " என்று பேசினார் .  இவர் அணுமின் நிலையத்தை குறித்த அச்சத்தில் பேசுகிறாரா அல்லது கலவரத்தை உண்டாக்க பேசுகிறாரா என்பதை அரசு உணரவில்லை என்றாலும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்


ஜாதி பெயர்களையும் ,  சமயங்களின் பெயர்களையும் பயன்படுத்தி கலகம் உண்டாக்கும் யாராய் இருந்தாலும் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக இந்தியாவின் கண்ணியம் தொடர்ந்து பாதுகாக்கப் படவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ...

Thursday 2 February 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு


கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கிற இந்த காலத்தில் , அணுமின்சாரத்தை குறித்து நான் எழுதிய அநேகம் பதிவுகள் பல்வேறு காலத்தில் இந்த வலைப்பூவில் பதியப்பட்டது .   அணுமின்சாரத்தை குறித்து பலர் அறிய விரும்புகிற காரணமோ என்னவோ தெரியவில்லை  , பெரும்பாலான அணுமின் நிலையத்தை குறித்த பதிவுகள் 600 பக்க பார்வைகளை ( each ) தாண்டி விட்டது .  வலைப்பூவுக்கு வருகை தந்த நண்பர் ஒருவரின் கருத்தை வாசிக்கும் பொழுது தான் இந்த பதிவுகளின் தொகுப்பை ஒரே பதிவில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது .  அதன் விளைவு தான் இந்த கூடங்குளம் அணுமின் நிலையம்  - ஒரு அறிவியல் தொகுப்பு .



மின்சாரம் தயாரிப்பதற்கு அநேகம் வழிகள் இருக்கும் போது , அணுமின்சாரம் தேவையா ? என்ற கேள்வி எழுவது சகஜம் தான் .  இந்த பார்வையுடன் எழுதப்பட்டது தான் " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவு .   வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


புகுஷிமா அணுமின் நிலையத்தில் இயற்கை பேரிடர்களால் எதிர்பாராத நிகழ்வு நேர்ந்த பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையமும் பாதுகாப்பற்றது என்ற பயம் நிலவிய பொழுது கூடங்குளம் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களை அறிவியல் பூர்வமாக ஒப்புமை செய்து எழுதப்பட்டது தான் " புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா -  ஒரு ஆய்வறிக்கை "  என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


 அணுமின் நிலையங்கள் என்றாலே கதிரியக்கம் தான் என்று பெரும்பாலும் நம்பப்பட்ட சூழலில் , கதிரியக்கத்தை  குறித்து எளிய வார்த்தைகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதவேண்டும் என்று நினைத்ததின் விளைவு தான் " கதிரியக்கம் என்றால் என்ன ? - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .

பல நண்பர்கள் அணுக்கழிவு என்று ஒரு பெரிய வார்த்தையை உபயோகிப்பதை பார்த்து அநேகர் குழம்பிய பொழுது , இந்தியாவில் அணுக்கழிவு எப்படி கையாளப்படும் என்பதை ஆராய்ந்து பாரதத்தின் விளைவு தான் " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


அணுமின் நிலையங்கள் சுற்று சூழலை பாதிக்கும் என்று ஒரு கருத்து எழுந்த பொழுது , கொஞ்சம் அதை ஆராய்ந்து பார்க்கையில் உருவான பதிவு தான் " அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ? "  என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .



மீனவ நண்பர்கள் அனைவரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்று ஒரு நண்பர் என்னை கேள்வி கேட்டபொழுது தான் " கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் -  ஒரு ஆய்வு " என்ற பதிவு வெளிவந்தது . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


புகுஷிமா நிகழ்வுக்கு பின்னர் உலகம் முழுவதும் அணுமின் திட்டங்களை நிறுத்தி உள்ளார்கள் . அப்படி இருக்கும் போது கூடங்குளம் அணுமின் நிலையம் எதற்கு என்று எனது பதிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது .  அதற்க்கு விடை காண முனைந்ததின் விளைவு தான் " புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள் ' என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் 


இன்னும் சில பொதுவான் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க முனைந்ததின் விளைவு தான் "  அணுமின் நிலையங்கள் - சில கேள்விகள் - சில பதில்கள் " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும்



இந்த பதிவுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் , புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்டன .  ஆனால் இவைகளை மெருகேற்றிய பெருமை அனைத்தும் நமது பதிவுலகத்தின் நண்பர்களை சேரும் .  எதிர் கேள்விகளும் , எதிர் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பதற்கு அநேகருக்கு உதவியது .  அதனை பேருக்கும் நான் நன்றி உடையவனாய் இருக்கிறேன் .  தொடர்ந்து படியுங்கள் .  ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள் .  

Wednesday 1 February 2012

ஒரு ஊர்ல ஒரு பெண்ணும் - கூடங்குளம் ஒப்பாரி போராட்டமும்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக போராடி வரும் குழுவினர் ஒரு விசித்திரமான போராட்டம் ( ஒப்பாரி ) ஒன்றை நடத்தினார்கள் .  வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு சில பெண்கள் தலைவிரி கோலமாக போக , சில ஆண்கள் மொட்டை அடித்து கொண்டு அணுஉலை மாதிரியை எரித்தார்கள் என்பதை நான் நாளேடுகள் , தொலைக்காட்சிகள் , பதிவுகள் மூலமாக அறிந்து கொண்டேன் .  இதை படித்தவுடன் எனக்கு அழவா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை .   அப்பொழுது என்னுடைய  8ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் சொல்லிய ஒரு கதை ஓன்று தான் நியாபகத்திற்கு வந்தது .  அந்த கதையை அப்படியே எழுத நான் ஆசைப்படுகிறேன் .  தொடருங்களேன் .....




ஒரு அமைதியான கிராமத்திலே ஒரு வாலிப பெண் தன குடும்பத்துடன் வசித்து வந்தாள்  .  அந்த கிராமத்திற்கு திடீரென ஒரு பெரியவர் ( வயதில் ) வருகை தந்தார்  .  அப்பொழுது அந்த கிராமத்தின் வெளியில் ஒரு பெரிய கால்வாய் வெட்டி கொண்டு இருந்தார்கள் ( குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுவதற்காக ) .  இந்த வாலிப பெண்ணுக்கு இந்த கால்வாய் எதற்கு வெட்டப்படுகிறது என்று தெரியாத பொழுது , அந்த ஊருக்கு வந்த அந்த பெரியவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள் .  இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .. பிறகு அந்த வாலிப பெண் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்த பெண் " ஓ " என்று அழ ஆரம்பித்து விட்டாள் . அந்த பெண் அழுவதை கேட்ட அவளின் குடும்பத்தினர் அனைவரும் தன பெண்ணுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி அவர்களும் அழ ஆரம்பித்து விட்டனர் .  இப்படி ஒரு குடும்பம் அலுத்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அந்த தெருவில் உள்ளவர்கள் அழ ஆரம்பித்து விட்டனர் .  ஒரு தெருவே அழ ஆரம்பித்த உடன் அந்த அன்பான கிராமமே அழ ஆரம்பித்து விட்டது .  ஆனந்தம் குடி கொண்ட அந்த கிராமத்தில் அழுகை சத்தம் மாத்திரம் கேட்டது .  ஆனால் யாரும் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கவில்லை .


இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு ஒரு துறவி வந்தார் .  ஒரு கிராமமே அழுகிற சத்தத்தை கேட்ட அவர் அங்கிருந்த ஒரு நபரிடம் கேட்டார் , " ஐயா ஏன் எல்லாரும் அழுகிறீர்கள் ? " என்று.  உடனே அந்த நபர் சொன்னார் , " எனக்கு தெரியாது , இந்த தெருவில் உள்ளவர்கள் எல்லாரும் அழுதார்கள் . அதனால் நானும் அழுதேன் " என்று .   


உடனே அந்த துறவி அந்த தெருவில் குடியிருக்கும் ஒரு நபரிடம் கேட்டார் , " ஐயா ஏன் எல்லாரும் அழுகிறீர்கள் ? " என்று.  உடனே அந்த நபர் சொன்னார் , " எனக்கு தெரியாது , இந்த வீட்டில்  உள்ளவர்கள் எல்லாரும் அழுதார்கள் . அதனால் நானும் அழுதேன் " என்று .

உடனே அந்த துறவி அந்த வாலிப பெண்ணின் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டார் , " ஏன் நீங்கள் அழுகிறீர்கள் ..?"  என்று .  அதற்க்கு அவர்கள் சொன்னார்கள் , " எங்களுக்கு தெரியாது ... எங்கள் வாலிப பெண் குலுங்கி குலுங்கி அழுகிறாள் , அதனால் நாங்கள் அழுகிறோம் " என்று 


 உடனே அந்த துறவி , அந்த வாலிப பெண்ணை கூப்பிட்டு , " நீ ஏம்மா அழுகிறாய் " என்று கேட்டார் .  உடனே அந்த பெண் சொன்னாள் , :"  ஐயா ...இந்த ஊருக்கு வெளியில் ஒரு கால்வாய் வெட்டுகிறார்கள் அல்லவா ...? .  துறவி சொன்னார் , " ஆம் அம்மா .... அதற்கு என்ன ...?"  அந்த பெண் பதில் சொன்னாள் , " ஐயா ... எனக்கு இன்னும் கொஞ்ச காலத்தில் கல்யாணம் நடக்கும் தானே ".   துறவி சொன்னார் , " நிச்சயமாக அம்மா .... உனது பிரச்சினை தான் என்ன ...?.   


அந்த பெண் சொன்னாள் , " ஐயா ... அப்படி திருமணம் ஆனபிறகு எனக்கு குழந்தை பிறக்கும் .  அப்படி பிறக்கும் குழந்தையை நான் எடுத்துக்கொண்டு என அம்மா வீட்டிற்கு வருவேன் .  அப்பொழுது சமையல் அறையில் நான் வேலை செய்து கொண்டிருப்பேன் . அப்பொழுது என அருமை மகன் , எங்கள் வீட்டில் இருந்து தவழ்ந்து வெளியேறி  , மெல்ல மெல்ல போய் அந்த கால்வாயில் விழுந்து விடடால் ,  நான் என் பிள்ளைக்கு என்ன செய்வேன் ..."  என்று மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டாள்.


இந்த பெண்ணின் கதையை கேட்ட அதனை பெரும் அழுவதை உடனே நிறுத்தி விட்டு கோபத்துடன் அவளை பார்த்தார்கள் .  அந்த துறவை அவளை சமாதானபடுத்தி விட்டு , அவளிடம் கேட்டார் , "  உனக்கு யாரம்மா ..இப்படி சொல்லி தந்தது ..?  என்று .   அந்த பெண் ஒன்றும் புரியாதவளாக அந்த பெரியவரை ( யாரிடம் கால்வாயை குறித்து கேட்டாளோ )  கை காட்டி நின்றாள்


 இந்த கதையை கேட்டவுடன் எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது .  அப்பொழுது எனது தமிழ் ஆசிரியர் சொன்னார்

" எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ".  

இந்த குறளை விளக்குவதற்கு அவர் சொன்ன கதை , அவர் எங்களை விட்டு மறைந்து போனாலும் , இன்னும் எனது நினைவில் இருக்கிறது .



கூடங்குளம் மற்றும் அதை சேர்ந்த பெண்மணிகள் ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது எனக்கு அந்த கதை தான் நியாபகத்திற்கு வருகிறது .  உண்மையில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் அல்லது தங்கள் கணவர்கள் தினமும் குடிப்பதினால் அவர்களின் வாழ்கையை அழிக்கும் டாஸ்மாக் கடையை நினைத்து இப்படி அழுதால் கூட ஏதாவது பாக்கியமுண்டு .   என்றாவது ஒரு நாள் உண்மை விளங்கும் போது இவர்களை குழப்பி விட்ட அந்த பெரிய மனிதர் ( ?) இவர்களுக்கு முன்பு வெட்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .   யார் அந்த பெரிய மனிதர் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் ..