Tuesday, 13 December 2016

தமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலசல்....

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் காலமான பிறகு தமிழக மக்கள் கிரகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.... அதிமுக என்ற கட்சியின் அமைச்சர்களும் , MLAக்களுமே செய்வதறியாமல் பேசி வருகிறார்கள். ஆனால் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது , இவையெல்லாம் ஒரு நீண்ட நாள் திட்டமிடல் போல தோன்றுகிறது.

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி நல்ல உறவு இருந்தது என்று தான் நாம் சொல்லமுடியும்.  "எங்கள் தனிப்பட்ட உறவு மிகச் சிறந்த முறையில் இருக்கிறது " என்று பிரதமர் அவர்களே பத்திரிகையாளர்களிடம் சொல்லி உள்ளதை நாம் அறிவோம். தகவல் : http://www.thehindu.com/news/national/tamil-nadu/i-have-excellent-personal-relations-with-jayalalitha-modi/article5919668.ece.

2௦15 ம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் , போயஸ் கார்டன் சென்று அம்மாவை சந்தித்து பேசியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.


செப்டம்பர் 22 , 2௦16 அன்று மாண்புமிகு அம்மா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிற்பாடு பாரத பிரதமர் அம்மா அவர்களை அக்டோபர் 16 வரை பார்க்க வரவில்லை.  ராகுல் காந்தி முதலிய தேசிய தலைவர்கள் அப்போல்லோ வந்து சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது , பிரதமர் சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று அறிவித்தார். மாத்திரமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களிலும் அம்மா மீது நட்பும் பாசமும் வைத்திருப்பது நமது பிரதமர் அவர்கள் தான் என்றார்.  காணொளி கீழே இணைத்துள்ளேன்.


அப்படி இருக்கும் போது மாண்புமிகு அம்மா அவர்களை அவர்கள் இறக்கும் நேரம் வரை அப்போல்லோ வந்து பிரதமர் பார்க்காதது ஏன்...? என்பது ஒரு அசைக்கமுடியாத கேள்வி.

அக்டோபர் மாதத்தில் தமிழக தலைவர்கள் / மக்கள் எல்லாரும் அம்மாவின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது கூட மத்திய அரசின் கவனம் இந்த விசயத்தில் செலுத்தப்படாதது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மாநில முதல்வர் காலமானால் , மிஞ்சி போனால் ஒரு இரண்டு நாளுக்குள்ளாக ஒரு இடைகால முதல்வரை நியமிப்பார்கள். ஆனால் அம்மா இறந்த அதே இரவே ஒரு அமைச்சரவை பதவி ஏற்றது எனக்கு தெரிந்து எந்த வரலாற்றிலும் இடம் பெறாத ஒரு விடயம்....

மாண்புமிகு அம்மா தமிழக மக்களுக்காக வைத்து போன கோடிக்கணக்கான சொத்துகள் ( மக்களால் நான் ...மக்களுக்காக நான் என்றதால் நான் இப்படி எழுதுகிறேன் ) நிமிடத்தில் கைமாற வேண்டுமெனில் ஒரு நாளைக்குள் நடக்கிற விடயமா....?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில திரை மறைவு வேலைகள் நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு ஒபிஎஸ் அவர்கள் இரண்டு முறை இருந்தாலும் , அம்மா அவர்களின் அரசியல் வாரிசாக அவர்கள் நியமிக்கப்படவில்லை. மாத்திரமல்ல சமீப காலங்களில் சில முக்கியமான பொறுப்புகளில் இருந்து திரு. ஒபிஎஸ் விளக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்....இப்படி இருக்க திரு. ஒபிஎஸ் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட்டது அநேகரின் புருவத்தை உயர்த்தியது.

ஒருவேளை இந்த பதவி ஏற்கும் நிகழ்வு அம்மா மறைந்து சில வாரங்கள் கடந்து நடந்திருந்தால் , தமிழகத்தின் ஆட்சியே மாறி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒபிஎஸ் யின் தலைமையை விரும்பாத MLAகள் திமுக வுடன் சேர்ந்து விட கூட வாய்ப்புண்டு. ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்க ஒரே வழி இரவே பதவி ஏற்பது......இது யாருடைய திட்டமாக இருக்கும் என்பது நமக்கு புரியாதது அல்ல...!

ஒபிஎஸ் ஒரு திறமையான முதல்வரா என்றால் , நான் சொல்லுவதை விட அவர் அவையில் பேசியதை கீழே கொடுத்திருக்கிறேன் , நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் இப்படிப்பட்ட முதல்வரை தமிழகத்தில் தேர்வு செய்ய காரணங்கள் என்ன என்றெல்லாம் நாம் விவாதிக்க இறங்கினால் , பல காரியங்களை கண்டு கொள்ளலாம்.

·         காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டிப்பாக நிர்பந்தம் செய்ய தற்கால தமிழக அரசால் முடியாது..
·         மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்காத மத்திய அரசை கண்டிப்பாக தற்கால அரசு கண்டிக்காது..
·         GST போன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் இதுவரை சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு , சீக்கிரம் அதை நிறைவேற்றும்.

மொத்தத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் இருக்கும். அம்மாவின் இறுதி சடங்கில் ஐயா என்னை கைவிட்டுறாதீங்க என்ற வகையில் திரு. ஒபிஎஸ் கதறுவதும் , நான் இருக்கேன் என்ற விதத்தில் பிரதமர் அவரை கட்டி அணைத்ததும் , தமிழக முதல்வர் தேர்வில் பாஜக இருக்கிறது என்று நம்பதான் தோன்றுகிறது.


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதிமுக வை சேர்ந்த 5௦ MP கள் ( மக்களவை & மாநிலங்களவை ) டெல்லியில் இருப்பதால் , அவர்களை டெல்லியிலே தக்கவைக்க அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்க்கபட்டால் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி போன்ற நடிகர்களை தங்களுக்கு  புகழாரம் சூட்டுவதற்கும் பாஜக அவரை பயன்படுத்தி கொள்ளும். இனி வரும் காலங்களில் ரஜினியின் புகழுரையை நாம் அடிக்கடி கேட்கலாம்.

இதெல்லாம் எதற்க்காக என்று நமக்கு கேட்க தோன்றலாம். ஒன்றே ஓன்று தான் இருக்கமுடியும்.  இந்த 5 வருட காலத்தில் பலவீனமான அதிமுக ஆட்சியை பயன்படுத்தி பாஜக வை தமிழகத்தில் வளர்க்கலாம் என்பது தான் பிரதானமான திட்டமாய் இருக்கும்.  அதற்காக அவ்வப்போது கருப்பு பண ஒழிப்பு போன்ற மாயையான திட்டங்கள் வந்தால் வியப்பில்லை.

தமிழகத்தின் பிரதான கட்சி திமுக சும்மா இருக்குமா என்று கேட்டால் சும்மா இருக்காது தான்.  ஆனால் அதை அடக்கி வைப்பதற்கு சில வழக்குகள் தொடரப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. கலாநிதி மற்றும் தயாநிதி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை நாம் கவனிக்காமல் விட முடியாது.

மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது அல்லது வெகு சீக்கிரத்தில் மாயையில் மாளும் நாள் இல்லை என்பது தான் இந்த இந்தியனின் கருத்து.
2 comments:

 1. //மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது...//

  நீண்ட நெடுங்கால உறக்கம். அவ்வளவு எளிதில் விழித்துவிடுமா என்ன?!

  ReplyDelete
  Replies
  1. ஐயா ....! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....!

   Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி