Tuesday 22 November 2016

ATM முன்பு மக்கள் கூட்டம் - அரசின் தவறான திட்டமிடல் - ஒரு அலசல்..

கூட்டம் கூட்டமாக மக்கள் ATM முன்பு வரிசையில் நிற்பது பலராலும் பல விதங்களில் விமரிசிக்கப்படுகிறது....சில பேர் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள் எனவும் , சிலபேர் அன்றாட தேவைகளுக்காக வரிசையில் நிற்கிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.....ஆனால் உண்மை நிலவரம் தான் என்ன...?

பணப்புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டில் அதிகரித்து வருவதை நாம் அறிந்து இருக்கிறோம். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை மாற்றுவதற்கு ஒரு புறம் மக்கள் முயற்சித்தாலும் , இன்னொரு புறம் அதற்க்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறதாகவே தோன்றுகிறது...  
ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சிறிய தகவலை தொகுத்து தருகிறேன்.... ஆகஸ்ட் மாதம் 2௦16 ம் வருடத்தில் பண அட்டைகள் மூலமாக பண பரிவர்த்தனை மற்றும் பண அட்டைகள் மூலமாக பொருள் வாங்கியதை குறித்த தகவலே அது... இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளின் பரிவர்த்தனை தொகுப்பு... தகவல் (https://www.rbi.org.in/scripts/ATMView.aspx )

கிரெடிட் கார்டு....
ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலமாக 39,54,292 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 2.57 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் 6,46,950 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 304.2 கோடி பணம் ATM மூலமாக எடுக்கப்பட்டு உள்ளது .  இதில் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும் . கிரெடிட் கார்டு பொதுவாக பணக்காரர்களும் , அரசு அதிகாரிகளும் தான் பயன்படுத்துவார்கள்.  இதை பயன்படுத்தி பொருட்கள் தான் அதிகம் வாங்கி உள்ளார்கள்.....

டெபிட் கார்டு... :
சராசரி மனிதர்கள் பயன்படுத்தும் கார்டு டெபிட் கார்ட்... சம்பளம் , பென்ஷன் , கூலி , LPG மானியம் முதலானவைகள் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படுவதால் , வங்கி கணக்கு தொடங்கும் போதே ATM கார்டுகள் ( டெபிட் ) இலவசமாக கொடுக்கப்படுகிறது.  ஆகஸ்ட் 2௦16ம் மாதத்தில் மாத்திரம் இந்த டெபிட் கார்டுகள் மூலமாக 13,05,29,004 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 1.83 லட்சம் கோடி மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 75.67 கோடி பரிவர்த்தனைகள் மூலமாக 21.96 லட்சம் கோடி பணம் ATM மையங்களில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 21.96 லட்ச கோடி பணமும் நியாயமான பணம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. 

சரி இப்போது கணக்குக்கு வருவோம்...இந்தியாவில் மொத்தம் 1,௦3,651 ATM வங்கிகளுடனும் ( On Site ) , 99,15௦ ATM வங்கிகள் இல்லாத இடங்களிலும்  ( Off Site ) ஆக மொத்தம் 2,02,801 ATM உள்ளன. 5௦௦ ரூபாய் / ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் 1௦௦ ரூபாய் நோட்டுகள் மாத்திரமே ஏடிம் களில் வைக்கமுடியும். எனவே ஒரு ATM ல் 2.5 லட்சம் ரூபாய்க்கு 1௦௦ ரூபாய் நோட்டுகள் வீதம் நாள் ஒன்றுக்கு 2 முறை வைத்தாலும் ( இது அதிக பட்ச கணக்கு ) , ஒரு ATM நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாயை அளிக்கும். எனவே நாடு முழுவதும் இருக்கும் எல்லா ATM களும் சேர்ந்து 1௦,140 கோடியை ஒரு நாளில் அளிக்கும் என்பது அதிகபட்ச கணக்கு.  அப்படி இருந்தாலும் ஆகஸ்டு 2௦16 ல் ATM மூலமாக எடுக்கப்பட்ட பணம் எடுக்கப்பட வேண்டும் என்றால் கூட கிட்டத்தட்ட 22 நாட்கள் எடுக்கும்.

ஆனால் இதுவும் சாத்தியமா என்பது தெரியவில்லை...அதற்க்கு சில காரணங்களை கருதுகிறேன்.....

1.       ATM ல் உள்ளவர்கள் 2௦௦௦ ரூபாய் எடுப்பதை தவிர்க்கிறார்கள். 2௦௦௦ என்று தேர்வு செய்தால் ஒரே ஒரு 2௦௦௦ ரூபாய் நோட்டு வருகிறது. எனவே 19௦௦ என்று தான் தேர்வு செய்கிறார்கள்...

2.       ATM களில் புது 1௦௦ ரூபாய் நோட்டுகளை தான் வைக்கமுடியும்....ஆனால் போதுமான அளவு புது 1௦௦ ரூபாய்கள் கைவசம் இல்லை என்று அரசு வழக்கறிஞர் மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்து உள்ளார்....

3.       ஆகஸ்ட் மாதத்தில் தேவைப்படும் போது மட்டும் ATM யை நாடியவர்கள் , பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூட எடுக்க முயலலாம். அதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பாட வாய்ப்புண்டு....

4.       ஆனால் அதேநேரத்தில் இந்தியாவின் 6,40,867 கிராமங்களில் 40,000 கிராமங்களில் மாத்திரமே வங்கி சேவை உள்ளது....

   மொத்தத்தில் அரசின் தவறான திட்டமிடல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. என்ன நடக்கும் என்று தெரியவில்லை....காலம் தான் பதில் சொல்லும்....!

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி