கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் சில வாரங்களாக போராடி  வருகிறதை  நாளேடுகள் மூலம் அறிந்திருக்கிறோம் .   மக்கள் பிரதிநிதிகள்  என்று சொல்லி கொள்ளும் தலைவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று  நடத்துகின்றனர் .   
போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின்  பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு  தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது .  அந்த அச்ச உணர்வை நீக்கும்  வகையில் மத்திய ,  மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு  வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .

 பேச்சு வார்த்தையின் முதல் சுற்றில் போராட்ட குழுவின் சார்பில் 50   கேள்விகள் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டதையும்  , அதற்க்கான பதில் தமிழ் ,  மலையாளம் , இந்தி  ( இது தமிழன் போராட்டம் என்று சொல்லுபவர்கள் கவனிக்க )   மொழிகளில் வேண்டும் என்று சொன்னதையும் ,  அதை மக்கள் மத்தியில் நாங்கள்  விநியோகித்து அவர்கள் கருத்தை கேட்போம் என்று சொன்னதையும் நான் அறிந்த போது  உண்மையில் கொஞ்சம் மகிழ்வடைந்தேன் .  ஏன் எனில் பாதுகாப்பான அணுமின்  நிலையத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மக்கள் அச்சம் தீர்ந்து  விடும் என்பது எனது எண்ணமாயிருந்தது . 
 இந்த சூழலில் தான்  போராட்ட தலைவர் திரு . உதயகுமார் மற்றும்  திரு .  பொன்ராஜ்  ( திரு . அப்துல் கலாம் அவர்கள் உதவியாளர் )  இருவரும் கலந்து   கொண்ட ஒரு நேரடி நிகழ்ச்சியை  புதிய தலைமுறை தொலைக்காட்சியில்  காண நேர்ந்தது .  அது தான் இந்த பதிவு  எழுதப்படுவதின் மூலக்காரணம் .
 பதிவுலக நண்பர்கள் பல பேரும் இந்த அணுமின் நிலையத்தை பற்றி எழுதும் போது  இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள் , " அணுமின் நிலையத்தை பார்லிமென்ட்  பக்கத்தில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...?"  என்று .    நான் அந்த கேள்வியை படிக்கும் போது , என்ன இது சிறு பிள்ளை போல கேள்வி  என்று நினைத்து கொள்ளுவேன் .
 ஆனால் இதே கேள்வியை  ( அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைத்தால்  என்ன ...? ) நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது திரு .   உதயகுமார் அவர்கள் திரு . பொன்ராஜ் அவர்களிடம் கேட்டார் .  திரு . பொன்ராஜ்  சொன்னார் , " ஐயா , நீங்கள் மிகுந்த அறிவாளி என்று நான்  பேசிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் "  என்று.   இந்த பதிலுக்கு திரு.  உதயகுமாரின் எதிர்ப்பு பலமாய்  இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள்  .  ஆமா .... ஒரு அசடு வழிந்த சிரிப்பு ஒன்றை தான் திரு . உதயகுமார் பதிலாக  கொடுத்தார் .
 இங்கே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .  ஐயா , உங்களுக்கும் தெரியும் .    அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைக்கமுடியாது என்று .  பின் ஏன்  நீங்கள் இதே போல ஒரு கேள்வியை மக்கள் மத்தியில் கேட்டு மக்களை  குழப்புகிறீர்கள் ....?  அதற்கு காரணம் என்ன ...?
எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தது போல , கடைசியில் அந்த  நிகழ்ச்சி நிறைவுறும் போது திரு . உதயகுமார் ஒரு கருத்து சொன்னார் , " யார்  சொன்னாலும் சரி , பிரதமர் சொன்னாலும் சரி , மூன்று அல்ல முப்பதாம் தலைமுறை  அணுஉலை வந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம் " என்று .  
இங்கு தான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது .... அப்படியானானால் .....
- நீங்கள் எதற்கு குழு அமைத்தீர்கள் ...?
 
- எதற்கு 50  கேள்விகள் அமைத்து கொடுத்தீர்கள் ...?
 
- மக்கள் ஏற்று கொண்டால் போராட்டம் வாபஸ் என்று எப்படி சொன்னீர்கள் ...?
 
- உங்கள் கேள்விக்கு திரு . பொன்ராஜ் பதில் கொடுக்கும் போது ஏன் இடைமறித்து பேசினீர்கள் ...?
 
- தமிழனுக்கு எதிரான அணு உலை என்று சொல்லி ஏன் மூன்று மொழிகளில் பதிலை கேட்டீர்கள் ...?
 
 இதெல்லாம் என்னுடைய சில கேள்விகள் ....ஏன் தெரியுமா ,  யார் சொன்னாலும்  எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுபவர் கேள்விக்கு கொடுக்கப்படும் பதிலை  எப்படி ஆய்வு செய்வார் ...?
 இப்படி இவர் எடுக்கும் பல காரியங்கள் , இவர் மக்களின் அச்சத்தை தீர்க்கும்  வழிமுறைகளை விரும்பவில்லை என்பதையும்  ,  மக்களை மேலும் மேலும்  குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் எனபதையும் மிக தெளிவாக் சுட்டி காண்பிக்கிறது  . 
 
இது இவரின் ரெட்டை வேடம் அல்லாமல் வேறென்ன ....? என்ற என கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் .  காத்திருக்கிறேன் அது வரை ...!