Monday 6 February 2012

அணுமின் நிலையங்கள் - அணுகுண்டுகள் - ஒரு அறிவியல் பார்வை


அணுமின் நிலையங்கள் குறித்த அநேகம் விடயங்களை நாம் தொடர்ந்து சம்பாஷித்து வருகிறோம் .  அநேகருக்கு இருக்கிற இன்னும் ஒரு முக்கியமான சந்தேகம் என்னவெனில் அணுமின் நிலையங்கள் என்றாலே அணுகுண்டுகள் என்று தான் நினைக்கிறார்கள் .  கூடங்குளம் பகுதி மக்கள் கூட இப்படி சில கேள்விகளை கேட்டதாக நாளேடுகளில் அறிந்தேன் .  இந்த சூழலில் பதிவுலக நண்பர் ஒருவர் இதை குறித்த ஒரு கட்டுரை எழுதலாமே என்று என்னை ஊக்குவித்ததின் விளைவு தான் இந்த பதிவு ...
 
 

அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் இரண்டிலும் யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் போன்ற தனிமங்கள் உபயோகப்படுத்தப்படுவது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் .  கொஞ்சம் விரிவாக நாம் இதை சிந்தித்தால் நல்லது என்று நினைக்கிறேன் ...
 
 

அணுமின் நிலையங்கள் பொதுவாக அணுப்பிளவு வினையின் மூலம் கிடைக்கும் சக்தியை கொண்டு தான் இயங்குகிறது .  இந்த அணுப்பிளவு எனப்படுவது என்னவென்றால் யுரேனியம் அணுவானது ஒரு வேகம் குறைந்த நியூட்ரான் மூலம் தாக்கப்படும் .  அப்பொழுது இந்த உதிரி நியூட்ரானை ஏற்று கொள்ளும் அணுவானது சிதைவடைந்து இரண்டு அணுக்களாக பிரிகிறது .   கூடவே வெப்ப ஆற்றலையும் இரண்டு அல்லது மூன்று புதிய நியூட்ரான்களையும் வெளியிடும் .  அந்த நியூட்ரான்கள்  மறுபடியும் அணுக்களின் மீது மோதி மேற்கண்ட வினையை தொடர்ந்து செய்கிறது .  அது தான் Chain reaction அல்லது தொடர் வினை என்று அழைக்கப்படுகிறது 




சரி இப்பொழுது கவனியுங்கள் ... இயற்கையாக கிடைக்கும் யுரேனியம் ( Natural Uranium ) 0.7% யுரேனியம் 235 மற்றும் 99.3% யுரேனியம் 238 யை உள்ளடக்கியது . இந்த Natural Uranium தான் PHWR போன்ற அணுமின் நிலையங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .  ஆனால் 0 . 7 %  யுரேனியம் 235 மாத்திரம் கொண்ட எரிபொருள் போதுமான அளவு சக்தியை வெளியிடாத காரணத்தால் கூடங்குளம் போன்ற LWR அணுமின் நிலையங்களில் 0.7% யுரேனியம் 235 ,  எரிபொருளில் 4% மாக உயர்த்தப்படுகிறது .  இந்த வேலையை தான் செறிவூட்டல் ( Enrichment ) என்று சொல்லுகிறோம் . 


இனி அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகளுக்கு உள்ள வித்தியாசத்தை கவனித்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன் .
 

1 .  அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்படும் யுரேனியம் 235 -  4 சதவீதம் மாத்திரமே .... ஆனால் அணுகுண்டுகளுக்கு குறைந்தது 90 சதவீதம் யுரேனியம் 235 செறிவூட்டப்பட வேண்டும் .   இப்பொழுது சொல்லுங்கள் அணுமின் நிலையங்கள் எப்படி அணுகுண்டுகளை மாறமுடியும் ?

2 அணுமின் நிலையங்களில் அணுப்பிளவை கட்டுப்படுத்தும் விதத்தில் அணுப்பிளவு வினைகளை உண்டாக்கும் நியூட்ரானை கவர்ந்து கொள்ளுவதற்காக  போரான் மற்றும் காட்மியம்  கட்டுப்படுத்தும் கழிகள் ( Control Rods ) பெருமளவில் அமைக்கப்பட்டிருக்கும் .  ஆனால் அணுகுண்டுகளுக்கு அப்படி கட்டுப்படுத்தும் கழிகள் எதுவும் இல்லை .
 
 
3  அணுமின் நிலையங்களில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நடக்கும் . அதற்காக பல மடங்கு  , பல அடுக்கு பாதுகாப்பு கருவிகள் உள்ளது . ஆனால் அணுகுண்டுகளுக்கு அப்படியில்லை ..


இப்பொழுது ஒரு சில பேருக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாம் .  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் புளுடோனியம் 239 என்ற தனிமம் கிடைக்குமே . அதை கொண்டு அணுகுண்டு செய்வார்கள் அல்லவா ..? என்று .   இது ஒரு நல்ல கேள்வி என்று தான் நான் சொல்லுவேன் ....
 
 
கூடங்குளம் அணுமின் நிலையம் ஆக்கப் பூர்வ அணுசக்திக்கு மாத்திரம் தான் ( மின்சாரத்திற்கு ) பயன்படுத்தப்படும் .  மாத்திரமல்ல இது IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமையின் ( International Atomic Energy Commission ) நேரடி கண்காணிப்பில் வருவதால் ... இந்த அணுமின் நிலையங்கள் யுரனியம் மற்றும் புளுடோனியம் 239  போன்றவற்றை மின்சாரம் தயாரிக்க மாத்திரம் தான் பயன்படுத்தமுடியும் ....


புளுடோனியம் 239  பயன்படுத்தி எப்படி மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதை நான் ஏற்க்கனவே எழுதியுள்ள " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு " பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன் ....

எனவே அணுமின் நிலையங்கள் நாம் பயப்படுகிறது போல அணுகுண்டுகள் அல்ல ..... அவை பசுமையான மின்சாரத்தை அளவில்லாமல் அள்ளி கொடுக்கும் சுரபிகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இந்தியனின் ஆசை ...

19 comments:

  1. பயனுள்ள பதிவு,அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்க்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. 2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:
    1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!
    2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!

    இதற்கும் கொஞ்சம் விளக்கம் கொடுத்துவிடுங்கள்.

    ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
    ஆனால் நமக்கு அணு உலை விற்பதில் அவர்கள்ஆர்வமாக இருக்கிறார்களே ?
    ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்புபலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின்தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை.

    அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்குஎதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையேகட்டவில்லை. அமெரிக்காவில் மின் தேவை வளரவில்லையா? சுமார் 80 இயக்கங்கள் அங்கே உள்ளன. அமெரிக்கதுணை ஜனதிபதியாக இருந்த அல் கோரே, நுகர்வோர் உரிமைப்போராளி ரால்ப் நாடர் போன்றோரும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் அங்கே அணு உலைக்கு எதிராக பகிரங்கமாக குரல்கொடுத்து வந்துள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கு எனது முதற்க்கண் நன்றி .

      நீங்கள் பல ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்டு உள்ளீர்கள் . அவற்றில் பல கேள்விகளுக்கு ஏற்க்கனவே பல இடுகைகளில் பதில் கொடுத்துள்ளேன் . எனினும் , இந்த இடுகையிலும் அவைகளுக்கு பதில் கொடுக்க விழைகிறேன்...

      // அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!//
      அமெரிக்காவை பொறுத்த வரையில் அது சாத்தியமில்லை என்று தான் என்னால் கூறமுடியும் . என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ...? உண்மை தான் நண்பரே , யுரனியம் எரிபொருளாக பயன்படுத்த படும் அணுமின் நிலையங்களில் Spent Fuel ஆக புளுடோனியம் 239 கிடைக்கும் . இந்த புளுடோனியம் 239 மற்றும் நமது நாட்டில் அதிக அளவில் கிடைக்கும் தோரியம் 232 போன்றவற்றை எரிபொருளாக இரண்டாம் கட்ட அணுமின் நிலையங்களில் பயன்படுத்தும் தொழில் நுட்பம் நம்மிடத்தில் இருக்கிறது . ஏன் எனில் உலகில் அதிகபட்சமாக 300000 டன் தோரியம் இந்தியாவில் தான் கிடைக்கிறது . அமெரிக்காவில் தோரியம் இல்லாததால் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன் . மேலதிக தகவல்களுக்கு எனது அணுக்கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு என்ற கட்டுரையை வாசியுங்கள் ... http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_15.html

      Delete
  3. // ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது.//
    நமது பதிவுலக நண்பர்கள் பலரும் பல முறை கேட்ட கேள்வி தான் இது . ஜெர்மனி 2020 ல் அணு உலைகளை மூட போகிறது . பின் ஏன் இந்தியா மூட கூடாது என்று ...? ஜெர்மனியின் மொத்த பரப்பளவு 357092 ச. கிமீ . மக்கள் தொகை 82 மில்லியன் அதாவது 1 ச.கிமீ பரப்பளவில் 2296 பேர் வசிக்கிறார்கள் மொத்தம் 20000 MWe மேலான மின் சக்தி 17 அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் மின் பயன்பாடு 70000 KWh . ஆனால் இந்தியாவின் நிலபரப்பளவு 2973193 ச.கிமீ. மொத்த மக்கள் தொகை சுமார் 121 மில்லியன். அதாவது 1 ச.கிமீ பரப்பில் சுமார் 406 பேர் வசிக்கிறார்கள். மொத்தம் 4500 MWe மின்சக்தி 20 அணு உலைகள் மூலம் தயாரிக்க படுகிறது. தனி மனித மின் பயன்பாடு 700 KWh .

    நன்கு கவனித்து பாருங்கள் .. ஜெர்மனியின் மக்கள் அடர்த்தி இந்தியாவை விட 5 .5 மடங்கு அதிகம் . அது மாத்திரமல்ல ஜெர்மனி தன்னிறைவு அடைந்து விட்ட படியினாலும் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவை யோசித்து பாருங்கள் . மாத்திரமல்ல ஜெர்மனியின் இந்த முடிவால் சுமார் 250 பில்லியன் யூரோ ( 350 பில்லியன் டாலர் .., அதாவது 350 x 50 = 17500 பில்லியன் ருபாய் .. 1 பில்லியன் என்பது 100 கோடி . அப்படியெனில் மொத்தம் 1750000 கோடி ருபாய் ) முதலீடு செய்ய வேண்டுமாம் ( தகவலுக்கு http://www.thelocal.de/money/20110919-37687.html பார்க்க )

    மாத்திரமல்ல ஜெர்மனி தனது மின் தேவைகளுக்காக அண்டை நாடான பிரான்ஸ் தேசத்தில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்கிறது . பிரான்ஸ் நாட்டில் 75 சதவீதம் அணுமின் சக்தியில் இருந்து தான் மின்சாரம் பெறப்படுகிறது என்பது தாங்கள் அறிந்த உண்மை தான் ...

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய அணுமின் திட்டங்கள் சீனா , ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற மூன்று நாடுகளில் என்று நீங்கள் சொல்லும் தகவல் தவறானது , சமீப காலங்களில் உலக அளவில் அணுமின் திட்டங்களை குறித்து இந்த பதிவில் பாருங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_09.html

      // அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்குஎதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையேகட்டவில்லை. அமெரிக்காவில் மின் தேவை வளரவில்லையா?//

      தங்களுடைய கேள்வி மிக சிறந்த கேள்வி என்பதில் சந்தேகம் இல்லை . இந்த இடைப்பட்ட வருடங்களில் எரிவாயுவில் இருந்து மின்சாரம் எடுக்கும் ஆலைகளை அமெரிக்கா நிறுவி வந்தது என்பது உண்மை. அப்படியெனில் அமெரிக்கா அணுமின் நிலையங்களை இனிமேல் நிறுவாது அல்லவா என்று நீங்கள் அடுத்து கேட்பீர்கள் அல்லவா ..

      கொஞ்சம் http://www.world-nuclear.org/info/inf41.html இந்த பக்கத்திற்கு சென்று பாருங்களேன். அமெரிக்காவின் எதிர்கால அணுமின் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளது. நன்றி

      தங்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடினதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி . தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete
    2. ஆனந்த்6 February 2012 at 22:36

      உங்கள் பதில்களுக்கு நன்றி.

      இந்தியாவிற்கு எரிவாயு தர ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்க எடுபிடி மன்மோகன் சிங் அதை தவிர்த்து எங்கும் விலை போகாத அணு உலைகளை வாங்கிறார். நாமும் சூரிய ஒளி மற்றும் எரிவாயு இவற்றை பயன்படுத்தலாமே. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாக தடையற்ற மின்சாரம் வழங்குவதால் தானே மின் பற்றாகுறை ஏற்படுகிறது.

      Delete
    3. ஜெர்மனியில் இந்தியாவை விட மக்கள் தொகை அடர்த்தி அதிகம் என்று நம்ப முடியவில்லை


      //மாத்திரமல்ல ஜெர்மனி தனது மின் தேவைகளுக்காக அண்டை நாடான பிரான்ஸ் தேசத்தில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்கிறது . பிரான்ஸ் நாட்டில் 75 சதவீதம் அணுமின் சக்தியில் இருந்து தான் மின்சாரம் பெறப்படுகிறது//

      இது ஜெர்மனியின் புத்திசாலித்தனம். ஆபத்தை தவிர்த்துகொள்கிரார்கள் அல்லவா.

      //ஜெர்மனியின் இந்த முடிவால் சுமார் 250 பில்லியன் யூரோ ( 350 பில்லியன் டாலர் .., அதாவது 350 x 50 = 17500 பில்லியன் ருபாய் .. 1 பில்லியன் என்பது 100 கோடி . அப்படியெனில் மொத்தம் 1750000 கோடி ருபாய் ) முதலீடு செய்ய வேண்டுமாம் //
      அணு உலையை நிறுவிவிட்டு பிறகு அணு கழிவு பாதுகாப்பு, ஒரு கட்டத்தில் மூடுவது என்று மிக அதிக செலவு செய்வது சரியான முடிவு அல்லவே. இப்போதே எரிவாயு மற்றும் மாற்று வழிகளை தேர்தேடுப்பதே புத்திசாலித்தனம்.

      Delete
    4. நண்பருக்கு வணக்கம் ....

      தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி .....

      //இது ஜெர்மனியின் புத்திசாலித்தனம். ஆபத்தை தவிர்த்துகொள்கிரார்கள் அல்லவா.//
      உங்கள் வாதம் கொஞ்சம் வேடிக்கையாக தான் எனக்கு தோன்றுகிறது . அப்படி ஜெர்மனியின் புத்திசாலித்தனம் என்று வைத்து கொண்டாலும் , இந்தியா அந்த புத்திசாலிதனத்தை எந்த வகையில் பயன்படுத்த முடியும் என்று யோசித்து பாருங்கள் நண்பரே ...

      //அணு உலையை நிறுவிவிட்டு பிறகு அணு கழிவு பாதுகாப்பு, ஒரு கட்டத்தில் மூடுவது என்று மிக அதிக செலவு செய்வது சரியான முடிவு அல்லவே. இப்போதே எரிவாயு மற்றும் மாற்று வழிகளை தேர்தேடுப்பதே புத்திசாலித்தனம்.//

      நண்பரே ... தங்கள் கருத்து தவறானது . நான் சொன்ன பதிலை மீண்டும் படித்து பாருங்கள் . நான் குறிப்பிட்ட தொகை அணு உலைகளை மூடுவதற்கு அல்ல , மாற்று வழி மின்சாரத்தை பெறுவதற்காக ..... மறுபடியும் நீங்கள் படித்து பார்க்கும் படி வேண்டுகிறேன் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  4. Replies
    1. நண்பருக்கு வணக்கம் ....

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. தங்களுக்கு மற்ற்மொரு கேள்வி. கூடங்குளம் ஊழியர்கள் குடியிருப்பு ஏன் முப்பது கிலோமீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது?

    கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?”அப்படி ஒரு அணு உலை அவசியமா?

    முதலில் மின் சிக்கனம், திறமையான மேலான்மையே தேவை.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ....

      //தங்களுக்கு மற்ற்மொரு கேள்வி. கூடங்குளம் ஊழியர்கள் குடியிருப்பு ஏன் முப்பது கிலோமீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது?//
      நீங்கள் கூடங்குளம் போய் பார்க்கவில்லை என்பது தங்களின் கேள்வியில் எனக்கு விளங்குகிறது . நான் கூடங்குளம் சென்று இருக்கிறேன் . நாகர்கோயில் என்ற பகுதியில் இருந்து நீங்கள் கூடங்குளம் சென்றால் , அஞ்சுகிராமம் அன்று ஒரு ஊர் வரும் . அதை தாண்டி போனால் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் வசிக்கிற குடியிருப்பு வருகிறது . சரியாக அந்த குடியிருப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் ( ரோட்டில் , ஆனால் நேர்க்கோட்டில் கணக்கிட்டு பார்த்தால் 4 KM வரலாம் என்பது எனது கணிப்பு ) தொலைவில் அணுமின் நிலையம் இருக்கிறது . போய் ஒருமுறை பார்த்து வாருங்களேன் ....

      //கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?”அப்படி ஒரு அணு உலை அவசியமா?//
      உங்கள் கேள்விகள் என்னை ஊக்குவிக்கிறது . நண்பரே ... Nuclear liability Bill எனப்படுவது நாம் நமது வாகனங்களுக்கு எடுக்கிற இன்சுரன்ஸ் போன்றது தான் . நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும் . பொதுவாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொடுக்கப்படும் பொருட்களுக்கு 40 + 10 வருடங்கள் Gurantee இருப்பதாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் . இந்த Nuclear liability Bill குறித்து ஒரு இடுகையில் விளக்கமாக நான் பேச விரும்புகிறேன் .

      //முதலில் மின் சிக்கனம், திறமையான மேலான்மையே தேவை.//
      பெருகி வரும் தேவையில் , மின் சிக்கனம் என்பது ஒரு சோளப்பொறி தான் . ஆனால் தேவையோ யானைப்பசி என்பதை தாங்கள் உணரவேண்டும் . எனது மின்சிக்கனமும் , கூடன்குளமும் என்ற பதிவை பாருங்களேன் .

      நன்றி

      Delete
  6. //பெருகி வரும் தேவையில் , மின் சிக்கனம் என்பது ஒரு சோளப்பொறி தான் . ஆனால் தேவையோ யானைப்பசி என்பதை தாங்கள் உணரவேண்டும் . எனது மின்சிக்கனமும் , கூடன்குளமும் என்ற பதிவை பாருங்களேன் .

    உங்கள் பதில்களுக்கு நன்றி.
    மின் தேவை அதிகம் என்பதே தவறான் கொள்கைகளால் ஏற்படுவது.

    1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011)

    இறுதியில் லாபம் யாருக்கு என்றால், பன்னாட்டு நிருவனகளுக்கு மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ...

      தங்களின் பதில் உரைக்கு மிக்க நன்றி .... நீங்கள் உண்மையான ஆர்வத்துடன் கேள்விகள் கேட்பதை நான் வரவேற்கிறேன் ....

      //மின் தேவை அதிகம் என்பதே தவறான் கொள்கைகளால் ஏற்படுவது. //
      இந்த கருத்து சரிதானா என்பதை நீங்களே யூகியுங்கள் ..... ஒரு ஐந்து வருடத்திற்கு முன்பு உங்கள் கண்கள் காண உங்கள் வீட்டில் அல்லது உங்கள் தெருவில் மின் தேவை எப்படி இருந்தது ( நீங்கள் எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவு செய்தீர்கள் ) , இப்பொழுது உங்கள் மின்தேவை எவ்வளவு இருக்கிறது ( இப்பொழுது எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவு செய்கிறீர்கள் ) . இந்த சிறிய யோசனை சொல்லும் நமது மின்தேவை எவ்வளவு என்பதை .... இது தவறான கொள்கை என்று நீங்கள் சொல்லுவீர்களா ...? அல்லது வளர்ந்து வரும் சமூகம் என்று சொல்லுவீர்களா ...? நாங்கள் பள்ளி படிக்கும் போது , தெருவிளக்குகளில் படித்திருக்கிறோம் . இன்று நம் பிள்ளைகள் Laptop வைத்து படிக்கிறார்கள் . இது தவறான கொள்கை என்று சொல்லுவீர்களா ...? அல்லது சமூகத்தின் முன்னேற்றம் என்று சொல்லுவீர்களா ...?

      //1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011)//
      நீங்கள் ஒரு அற்புதமான விடயத்தை சொல்லி உள்ளீர்கள் . கவனித்து பாருங்கள் ... கிட்டத்தட்ட 1 லட்சம் MWe அதிகம் உற்பத்தி செய்தாலும் 15 வருடங்களில் நம்மால் 10 % புதிய கிராமங்களுக்கு தான் மின்சாரம் கொடுக்க முடிந்து இருக்கிறது . அப்படியானால் இன்னும் நமது மின் உற்பத்தி எவ்வளவு அதிகரிக்க வேண்டி உள்ளது . கொஞ்சம் யோசித்து பாருங்கள் ... இன்னும் 42 சதவீதத்தை நாம் சந்திக்க வேண்டும் ...

      //இறுதியில் லாபம் யாருக்கு என்றால், பன்னாட்டு நிருவனகளுக்கு மட்டுமே.//
      நம் எல்லாருக்கும் தான் லாபம் .... எப்படி என்பதை தனி இடுகை மூலம் விளக்க ஆசைப்படுகிறேன் . ஏன் எனில் , பொருளாதாரத்தின் படி ஒரு மனிதனின் செலவு , இன்னொரு மனிதனின் வருமானம் . கொஞ்சம் அப்படியே யோசித்து பாருங்கள் . பொருளாதாரத்தில் மனித சங்கிலி எப்படி பிணைந்து உள்ளது என்பது தங்களுக்கு தெரியும் .....

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  7. //அப்படியானால் இன்னும் நமது மின் உற்பத்தி எவ்வளவு அதிகரிக்க வேண்டி உள்ளது

    மன்னிக்கவும், நீங்கள் இந்திய அரசியல்வாதிகளை, முதலாளிகளை புரிந்த்கொள்ளவில்லை. இன்னும் எத்தனை லட்சம் மெகவாட் உற்பத்தி அதிகரித்தாலும் அவை மக்களுக்கு போய் சேராது. முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே போய் சேரும். பன்னாட்டு நிறுவனங்கள் வரி கட்டமாடார்கள்.(உதாரணம் வோடபோன்). தொழிற்சங்கம் வைக்க கூடாது. பணி பாதுகாப்பு கிடையாது. லாபம் மட்டுமே எடுத்து சென்றுவிடுவார்கள். இவர்களுக்காக நாம் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டியது இல்லை.

    மேலும் இலங்கைக்கும் மின்சாரம் அனுப்ப முயற்சி செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ...

      தங்களின் பதில் உரைக்கு மிக்க நன்றி ....

      //இன்னும் எத்தனை லட்சம் மெகவாட் உற்பத்தி அதிகரித்தாலும் அவை மக்களுக்கு போய் சேராது.//
      தங்களின் இந்த வாதம் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாய் தான் உள்ளது ... நண்பரே ... மின்சாரம் மக்களுக்கு தான். நமது மின் உற்பத்தியை நாம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக அதிகரிக்கிறோம் அல்ல நமக்கு தான் அதிகரிகிறோம் ... எனது தனி இடுகையில் கொஞ்சம் விளக்கமாக நான் எழுதட்டுமா ....?

      //மேலும் இலங்கைக்கும் மின்சாரம் அனுப்ப முயற்சி செய்கிறார்கள்.//
      அப்படியா ... பொறுத்திருந்து பார்ப்போம் .... அண்டை நாடுகளுக்கு இந்தியா பல விதங்களில் உதவி வருவது உங்களுக்கும் தெரியும் . இந்த விடயத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் ...

      நன்றி

      Delete
  8. ஐயா ....உங்களது அணுமின் நிலையம் குறித்த கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது . மிக அருமையாக அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வருகிறீர்கள் . மிக்க நன்றி . கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது என்று விளக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு பாடல் Toutube ல் வெளியிடப்பட்டு உள்ளது. நீங்கள் உங்களின் தளத்தில் இதை இணைத்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . பாருங்கள் . உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் இணைத்து விடுவீர்களா ...? http://www.youtube.com/watch?v=wA3nOGrWMsI

    நன்றி . Safe Nuclear

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,,

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி . நீங்கள் சொன்ன Video வை பார்த்தேன் . நன்றாக இருந்தது . முடிந்தால் எனது வலையில் சேர்க்கிறேன் . நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி