Tuesday 28 February 2012

அன்பார்ந்த கூடங்குளம் தாய்மார்களே ....!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி கொண்டு இருக்கும் அன்பார்ந்த கூடங்குளம் பகுதி தாய்மார்களே , தந்தைமார்களே , சகோதர , சகோதரிகளே  , தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது , உங்களுடன் மனம் திறந்து சில காரியங்களை பேச வேண்டும் என்று நான் நினைத்ததின் விளைவே இந்த பதிவு .



கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தின் பொழுது ஏற்ப்பட்ட சில சத்தங்களை கேட்டு தான் , அணுமின் நிலையம் ஆபத்தானது என்று நீங்கள் பயந்து போராட்டத்தை தொடங்கினதாக நான் நாளேடுகளில் , பதிவுகளில் வாசித்து அறிந்து கொண்டேன்.  தொடர்ந்து நிகழ இருந்த பாதுகாப்பு ஒத்திகை முயற்சியும் , உங்களின் அச்சத்தை அதிகமாக்கிற்று என்ற உண்மையை நானும் அறிந்து கொண்டேன்.  இந்த நிலையில் உயிருக்கும் , உங்களின் உடமைக்கும் எங்கே பாதுகாப்பு இருக்காதோ என்று நீங்கள் பயப்பட்டது ஒரு நியாயமான அச்சமே என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன் .  ஆனால் அணுமின் நிலையங்கள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது உங்கள் அச்சம் களையப்பட்டு விடும் என்பதில் அசையா நம்பிக்கையும் கொண்டிருந்தேன் .  இந்த நிலையில் தான் திரு . உதயகுமார் தலைமையில் ஒரு குழுவினர் உங்களுடன் போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .


உங்களின் அச்ச உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட அவர்கள் அணுமின் நிலையம் செயல்பட்டால் உங்கள் ஊர் காலி செய்யப்படும் என்றும் , இடிந்த கரை என்ற கடற்க்கரை கிராமத்தின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்றும் உங்களுடன் தொடர்ந்து பேசி வந்ததினால் , உங்கள் அச்ச உணர்வு மேலோங்கி அவருடன் இணைந்து போராடுவதோடு மட்டும் அல்லாமல் அவரை உங்கள் தலைவராகவும் என்று கொண்டீர்கள் .


ஆனால் எந்த ஊரும் காலி செய்யப்படாது என்பதை அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்  உறுதியாக சொல்லிய பொழுதும் , கடலில் மீன்பிடி தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிப்பு வெளிப்பட்ட பொழுதும் ,  உங்கள் பயத்தை அதிகமாக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்று ஒரு நவீன உத்தியை திரு. உதயகுமார் கைக்கொண்டதின் விளைவு உங்கள் அச்சம் அதிகமாயிற்று .



அணுமின் நிலையத்தின் கட்டுமானம் குறித்த சந்தேகங்கள் உரிய முறையில் அதிகாரிகளால் விளக்கப்பட்ட பொழுதும் , கிட்டதட்ட 6000 டன் உபகரணங்களை அணுமின் நிலையம் சுமந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை நீங்கள் அறிந்து கொண்ட பொழுது , கடல் மண்ணால் அணுமின் நிலையம் கட்டப்பட வில்லை என்பதை நீங்கள் விளங்கி கொள்ள தொடங்கின பொழுது  , அணுமின் நிலையத்தை ஏன் கேரளாவில் நிறுவவில்லை ..?  ஏன் பார்லிமென்ட் அருகில் நிறுவவில்லை ...?  ஏன் ஜனாதிபதி மாளிகையில் நிறுவவில்லை  என்று திரு . உதயகுமார் உங்களை கேள்வி கேட்டு பயம் உங்களை விட்டு அகலாதபடிக்கு பார்த்துகொண்டார் ... இப்படி ஒரு கேள்வியை திரு. அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் அவர்களிடம் கேட்டு வாங்கியும் கட்டி கொண்டார் என்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்கள் .



எனவே பூகம்பம் வரும் , சுனாமி வரும் , கான்செர் வரும் . எரிமலை வரும் , அணுகுண்டுகள் வெடிக்கும் என்றெல்லாம் புதிய புதிய கதைகளை உங்களிடம் அளந்து விட்ட திரு. உதயகுமார் சோமாலியாவில் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தை உங்கள் முன்னாள் பேனரில் வைத்து உங்களின் குழந்தைகளும் இது போல மாறும் என்று சொல்லி உங்கள் பாதி நீங்க விடாமல் பார்த்து கொண்டார் ...

இந்த நிலையில் உங்களின் அச்சத்தை தீர்ப்பதற்காக மத்திய அரசாங்கம் குழு ஒன்றை அமைத்தது .  இந்த குழுவிடம் 50 கேள்விகளை நாங்கள் கேட்போம் என்றும் அதற்கு அந்த குழுவினர் அளிக்கும் பதில்களை தமிழ் , மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சடித்து மக்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை கேட்போம் என்று சொல்லியவுடன் அவரை நீங்கள் தலைவராகவே ஏற்று கொண்டீர்கள் .  ஆனால் உங்கள் தலைவரோ நீங்கள் எதை நினைத்து பயபட்டீர்களோ அந்த கேள்விகள் ஒன்றையும் கேட்காமல் , இந்திய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறி விளைவிக்கும் கேள்விகளை கேட்டார் .  சரி.   எங்கே அந்த கேள்விகளும் , பதில்களும் மக்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் சந்தேகம் தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் , அந்த கேள்விகளை உங்களிடம் அளிக்காமலே , பேச்சு வார்த்தையை முடித்து கொண்டார் ..

 
இனி மேலும் நீங்கள் பொறுத்து கொள்ளமாட்டீர்கள் என்று உணர்ந்த திரு. உதயகுமார் கடைசி கட்ட பேச்சு வார்த்தையில் அழகாக ஒரு நாடகம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடி உங்களின் உணர்சிகளை எழுப்பி விட்டு போராட வைத்தார் .  இந்த நிலையில் மக்களின் அரசான தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது ....



இந்த குழுவின் வல்லுனர்கள் தங்களின் ஆராய்ச்சியின் படி அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிக்கைவிட்ட பிறகு திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " எங்களுக்கு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த விளக்கம் ஒன்றும் தேவை இல்லை .. எங்களுக்கு அணுமின் நிலையம் என்ற ஒன்றே வேண்டாம் " என்று ...


  கூடங்குளம் நண்பர்களே ,  உங்களின் அச்ச உணர்வை தனக்கு சாதகமாக்கி கொண்ட திரு . உதயகுமார் , தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் உங்களை அறியாமலே உங்களை பலி கடா ஆக்கி வருகிறார் .... இல்லை என்றால் இந்திய - ருசிய ஒப்பந்தம் ,  அணு எரி கோல்கள் பாதுக்காக்கப்படும் இடம் ,  அணுமின் நிலையத்தை சுற்றிலும் உள்ள பாதுகாப்பு படையினர் குறித்த விவரம் ,  ருச்சிய அரசுடன் செய்துள்ள கடன் ஒப்பந்த விவரம் போன்ற தகவல்களை ஏன் கேட்கவேண்டும் ....?  இதையும் நீங்கள் அதி சீக்கிரத்தில் உணர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ...



எனவே , நமது தேசத்தின் தலை சிறந்த அறிஞரகள் அணுமின் நிலயம் பாதுகாப்பானது என்று சொல்லும் வார்த்தைகளை கேட்காமல் , சில நக்சல் பாடல்களின் மூலம் உங்களையும் , உங்கள் பிள்ளைகளையும் போராட வைத்து , கூடங்குளம் என்ற ஊர் வளமான சமுதாயம் ஆகவிடாமல் தடுக்கும் திரு . உதயகுமாரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் .  நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு தடையாகும் கற்களை உங்களை விட்டு விலக்குங்கள்.   வஞ்சகத்தை அடையாளம் கண்டு உங்களை விட்டு விரட்டுங்கள் .  ஒளிமயமான தேசத்தை உருவாக்குங்கள் .  வந்தே மாதரம் ....

  


20 comments:

  1. விபத்தே ஏற்படாது எனில் அணு உலை நிறுவனங்கள் தைரியமாக கேரண்டி கொடுக்கலாமே இவ்வளவு பக்காவா பாதுகாப்பு செஞ்சிருக்கோம் 100% விபத்து வராது, வந்தாலும் உன்னியும் ஆவாது அதனால ஒரு வேள விபத்து நடந்தா அத்தன செலவயும் நான் ஏத்துக்கிறேன்னு ரஸ்யா சொல்லலாமே? ஏன் அவனாலயோ இல்லை அமெரிக்க, பிரெஞ்சு உள்ளிட்ட அணு உலை நிறுவனங்களாலேயோ அப்படியொரு கேரண்டி கொடுக்க இயலவில்லை? அணு உலை பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திட்டு தமது பொறுப்பை கைகழுவி விடுகின்றனரே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Anonymous நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . உங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...

      //விபத்தே ஏற்படாது எனில் அணு உலை நிறுவனங்கள் தைரியமாக கேரண்டி கொடுக்கலாமே//
      கேரண்டி கொடுத்திருக்கிறதே ....! கொடுக்கவில்லை என்று யார் சொன்னது ...? கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உபகரனகளுக்கு ரசிய நிறுவனம் 40 வருடங்கள் கேரண்டி கொடுத்திருக்கிறாகள் .... உங்களுக்கு தெரியுமா நண்பரே ....

      Nuclear liablity bill குறித்த உங்களின் தெளிவில்லாத பார்வை தான் உங்களை இப்படி கேட்க தோன்றுகிறது என்று நான் நினைக்கிறேன் .... இந்த Nuclear liablity bill குறித்து வெகு சீக்கிரம் நான் ஒரு தனி இடுகை இடுகிறேன் . அதில் உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் . கொஞ்சம் காத்திருப்பீர்களா ..?

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  2. ஏற்கனவே இயங்கும் பகுதிகளில் கதிர்வீச்சு பாதிப்பால் மனிதர்களும், மீன்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த விவரங்களை பாதுகாப்பு காரணங்களால் வெளியிட இயலாது என்கிறது அரசும், நீதிமன்றமும். மக்களோட உயிர் சம்பந்தப்பட்ட விசயத்தில் என்னடா புடலங்கா தேசப் பாதுகாப்பு பித்தலாட்டம்? அணு உலையில் நடக்கும் எல்லாவற்றையும் அமெரிக்காவோட பகிர்ந்து கொள்வானாம் ஆனால் அதன கதிர்வீச்சால் பாதிக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் பற்றிய உண்மையைக் கூட சொல்ல மாட்டானாம். அணு உலையில் மின்சாரம் மட்டும் தயாரிக்கிறதா பொய்தான சொல்ற

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Anonymous நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . உங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...


      கதிர்வீச்சு குறித்த உங்களின் கேள்வி எனக்கு வியப்பை அளிக்கிறது . கடலோர கிராமங்களில் 2400 mSv அளவுக்கு இயற்கையாக கிடைக்கிற கதிரியக்கத்தை குறித்து நீங்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் என்று சொல்லுவது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது ...

      மாத்திரமல்ல , கதிர்வீச்சை அளக்கும் கருவி கொண்டு இந்தியாவில் உள்ள அதனை அணுமின் நிலையத்திலும் சென்று கதிர்வீச்சின் அளவை அளக்க தயாரா....? என்று திரு . B . வெங்கட்ராமன் (Associate Director , Radiological Safety & Environment Group , IGCAR ) அவர்கள் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் நிபுணர் குழுவுக்கு ( திரு. உதயகுமாருக்கும் ) அறைகூவல் விடுத்துள்ளாரே ....? ஏன் யாரும் அந்த சவாலை ஏற்று கொள்ளவில்லை ....? என்ன உண்மை மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயமா ...? ( மேலும் தகவலுக்கு : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் , தேதி 29 02 2012 , பக்கம் 5 , பாருங்கள் )

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  3. பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்?

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Anonymous நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . உங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...

      நீங்கள் கேட்டுள்ள கேள்வி நகைப்பிற்கு உரியது என்றாலும் , உங்களின் பாணியிலே நானும் பதில் கொடுக்கிறேன் . பஸ் ஸ்டாண்ட் கக்குஸ் பயன்படுத்த தெரியாத அறிவாளிகளால் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் அணுமின் நிலையங்களோ , நன்கு கற்று தேர்ந்த விஞ்ஞானிகளால் , அதுவும் பல கட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களால் இயக்கப்படுகிறது . இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் , நன்றி

      Delete
  4. மத்திய அரசின் நிபுணர் குழு, கூடங்குளம் அணுஉலை 100% பாதுகாப்பானது என்றுஅறிவித்துள்ளது. அப்படி என்றால், கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்க முடியாது என்று அந்த அணுஉலையை விற்பனை செய்த ரஷ்ய நாட்டு நிறுவனம் கூறுவது ஏன். ஏனெனில் அணுஉலை என்பது ஒரு இயந்திரம் என்பதும், பழுதே ஆகாத ஒரு இயந்திரத்தை வடிவமைக்கவே முடியாது என்பதும் அந்த ரஷ்ய நிறுவனத்திற்கு தெரியும். அதனால்தான் அந்த நிறுவனம் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பேற்க முடியாது என்று மறுத்துவிட்டது. கூடங்குளம் அணுஉலையில் விபத்தேதும் ஏற்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Anonymous நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . உங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...

      அணு உலை ஒரு இயந்திரம் என்ற தங்கள் கண்டுபிடிப்பு முற்றிலும் உண்மை . அதனால் தான் பல மடங்கு மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு காரணிகள் அணுமின் நிலயங்களில் உள்ளது . Nuclear liablity bill குறித்து தனி ஒரு இடுகை இடுகிறேன் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் , நன்றி

      Delete
  5. ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 5,00,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அணுஉலையை மூடுவதற்கே சுமார் 75,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Anonymous நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . உங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...


      புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை - கொஞ்சம் வாசியுங்கள் ( http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_20.html )

      தொடர்ந்து வருகை தாருங்கள் , நன்றி

      Delete
  6. பல ஆயிரம் பேரை பலி கொடுத்தால் தான் உங்களின் விந்ஞானப்பசி அடங்கும் போல தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . ங்களின் கேள்விகளுக்கு பதில் நான் அளிக்கும் முன்பாக , இந்த கட்டுரை சார்பாக நீங்கள் ஒன்றும் பேசாத காரணத்தால் , கூடங்குளம் போராட்டம் குறித்த இந்த பதிவின் உண்மையை நீங்களும் ஏற்று கொள்ளுகிறீர்கள் என்ற அர்த்தம் தானே ... நன்றி ...

      விஞ்ஞானம் என்பது மக்களின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொழுது நாம் அதை வரவேற்ப்பதில் என்ன தயக்கம் காண்பிக்க வேண்டும் ..? நீங்கள் சொல்லுவது போல அணுமின் நிலையங்களினால் ஆயிரக்கணக்கானோர் சாக வேண்டுமானால் , அமெரிக்காவில் ( 104 அணுமின் நிலையங்கள் ) பல கோடி பேர் மரித்திருக்க வந்தும் அல்லவா ...?

      முதல் முறை பேருந்து வரும் பொழுது அதன் சத்தம் கேட்டு நாம் பயந்தோம் . அது போல ரயில் மற்றும் விமானம் பார்த்து நாம் பயந்த நாட்கள் உண்டு . ஆனால் பழக பழக நாம் அதை ஏற்று கொண்டோம் . இப்படியிருக்க கடந்த 40 வருடங்களாக நாம் அணுமின் நிலையங்களை பாதுகாப்பாக இயக்கி கொண்டு இருக்க , நாம் ஏன் அதை பார்த்து பயப்பட வேண்டும் . அதனால் சுத்தமான , சுற்று சூழலுக்கு பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் நாம் வரவேற்ப்பதில் நாம் ஏன் தயங்க வேண்டும் ...?

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
    2. The bus train will affect only oneself but this is affecting all the generations together do u know cheronbyl,three mile island ,still effects are there

      Delete
    3. இந்தியாவிற்கு அணு உலை விர்பணை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ள அமெரிக்கா 30 வருடமாக ஒரு அணு உலை கூட நிறுவவில்லையே ஏண்?

      Delete
    4. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் கேள்வி நியாயமானது தான் . இதற்க்கான பதில் பல இடுகைகளில் நான் கொடுத்துள்ளேன் . எனினும் இந்த இடுகையிலும் உங்கள் கேள்விக்கான பதிலை தர விரும்புகிறேன் ,..


      ஏறக்குறைய 20 புதிய அணுமின் திட்டங்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது . தவிர இரண்டு அதி நவீன ABWR வகை அணுமின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது . இவற்றில் பல 2020 ல் இயங்கும் என தெரிகிறது . நான்கு AP 1000 வகை அணுமின் திட்டங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட 1 . 6 பில்லியன் டாலர் செலவில் Vogtle மற்றும் Georgia பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது .

      கொஞ்சம் http://www.world-nuclear.org/info/inf41.html இந்த பக்கத்திற்கு சென்று பாருங்களேன். அமெரிக்காவின் எதிர்கால அணுமின் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளது. நன்றி

      Delete
  7. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மீன்பிடித் தொழில் நடந்துகொண்டிருக்கும் இடத்திலோ அணு உலை கட்டாது என்று நம்புகிறேன். மற்ற நாடுகளில் விபத்து நடந்தால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இந்தியாவில் பல மடங்கு அதிகம் இருக்கும் என்பது என் கருத்து. பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவற்றிலும் நாம் இன்னும் வளர வேண்டும். ஒரே இரவில் அணு உலையை ஆய்வு செய்து நாற்பது பக்க அறிக்கை அணு உலைக்கு ஆதரவாக கொடுக்கும் நபர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளுடன் நம் நாட்டை ஒப்பிடுவது தவறானது. ஒரு வேண்டிகோள்: முடிந்தால் கூடங்குளம் இடிந்தகரை மக்களிடம் சென்று உங்களுடைய விளக்கங்களைக் கூறுங்கள். அவர்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களின் அனுமதி இல்லாமல் அமைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

    ReplyDelete
    Replies
    1. Excellent Vijay, We know our govt people's liablity and responsibility during emergency situations, even cuddalore people got reached after 3 days of Thane cyclone. We don't have any clear idea/system to evaquate people during emergency situations. I like to vote for kudankulam people- Raja

      Delete
    2. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      //இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மீன்பிடித் தொழில் நடந்துகொண்டிருக்கும் இடத்திலோ அணு உலை கட்டாது என்று நம்புகிறேன்.//

      இது குறித்து நான் தெளிவாக எனது " கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு" என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன் . கொஞ்சம் வாசித்து பாருங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_28.html

      //ஒரே இரவில் அணு உலையை ஆய்வு செய்து நாற்பது பக்க அறிக்கை அணு உலைக்கு ஆதரவாக கொடுக்கும் நபர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள்//
      உங்கள் கருத்து கொஞ்சம் ஆச்சரியமானது . ஒரு வருடத்தின் முடிவில் நீங்கள் எழுதும் தேர்வுக்கு , நீங்கள் தேர்வு அன்று தான் படிப்பீர்களா ...? அல்லது நாளைய நேர்முக தேர்வுக்கு நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பீர்களா ...? இல்லை அல்லவா ....! அது போலவே .... இரண்டு மணி நேரம் அணுமின் நிலையத்தை சுத்தி பார்த்தார்கள் என்றால் , அதற்க்கு முன்பு அவர்கள் எடுத்திருக்கும் Spade work எவ்வளவு இருந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள் ....

      //முடிந்தால் கூடங்குளம் இடிந்தகரை மக்களிடம் சென்று உங்களுடைய விளக்கங்களைக் கூறுங்கள்.//
      உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன் . வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்புகிறேன் ...

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  8. //விஜய்Mar 2, 2012 01:29 AM

    ஒரு வேண்டிகோள்: முடிந்தால் கூடங்குளம் இடிந்தகரை மக்களிடம் சென்று உங்களுடைய விளக்கங்களைக் கூறுங்கள். அவர்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களின் அனுமதி இல்லாமல் அமைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?//

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன் . வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்புகிறேன் ...

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி